மழையா.. புயலா.. என்னை ஒன்றும் செய்யாதடி! கொடுக்கும் காசுக்கு ஒர்த்தான SUV கார்கள் பட்டியல்!
எந்தவொரு வெள்ள நீரையும் எளிதாகச் சமாளித்துச் செல்லக்கூடிய சக்திவாய்ந்த எஸ்யூவி கார்கள் இந்தியச் சந்தையில் உள்ளன. அவற்றின் கிரவுண்ட் கிளியரன்ஸ் மற்றும் நீரில் செல்லும் திறன் குறித்து விரிவாகப் பார்க்கலாம்.

இந்தியாவில் பருவமழை காலங்களில் ஏற்படும் வெள்ளம் மற்றும் சாலைகளில் தேங்கும் மழைநீரால் சிறிய வாகனங்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றன. ஆனால், இத்தகைய சவாலான வெள்ள நீரையும் எளிதாகச் சமாளித்துச் செல்லக்கூடிய சக்திவாய்ந்த எஸ்யூவி கார்கள் இந்தியச் சந்தையில் உள்ளன. அவற்றின் கிரவுண்ட் கிளியரன்ஸ் மற்றும் நீரில் செல்லும் திறன் குறித்து விரிவாகப் பார்க்கலாம்.
ஃபோர்ஸ் கூர்க்கா (Force Gurkha)
ஆஃப் ரோடிங்கில் பிரபலமான இந்தக் கார் 700 மி.மீ வாட்டர் வேடிங் திறனையும், 233 மி.மீ கிரவுண்ட் கிளியரன்ஸையும் கொண்டுள்ளது. இதன் மேற்கூரையில் இருந்து காற்றை உள்ளிழுக்கும்'ஸ்நார்கெல், நிறுவனத்தாலேயே பொருத்தப்பட்டுள்ளது. இதனால் இரண்டரை அடி ஆழமான வெள்ளத்தில் சென்றாலும் இன்ஜினுக்குள் தண்ணீர் புகாது.
மஹிந்திரா தார் (Mahindra Thar)
தார் மற்றும் சமீபத்தில் வெளியான 5-கதவு கொண்ட 'தார் ராக்ஸ்' கார்களும் வெள்ளத்தைச் சமாளிக்கக் கூடியவை. இது 650 மி.மீ வாட்டர் வேடிங் திறனும், 226 மி.மீ கிரவுண்ட் கிளியரன்ஸும் கொண்டது. இதன் 4x4 டிரைவ்ட்ரெயின், அதிக உயரம் மற்றும் வலுவான சஸ்பென்ஷன் ஆகியவை ஆழமான நீரைத் தடையின்றி கடக்க உதவுகின்றன.
டொயோட்டா ஃபார்ச்சூனர் (Toyota Fortuner)
பிரீமியம் பிரிவில் உள்ள இந்த கார் வெளிப்புற ஸ்நார்கெல் இல்லாமலேயே 700 மி.மீ ஆழம் வரை நீரில் செல்லும் திறன் கொண்டது. இதன் 225 மி.மீ கிரவுண்ட் கிளியரன்ஸ், சக்திவாய்ந்த இன்ஜின் மற்றும் ஆல் வீல் டிரைவ் தொழில்நுட்பம் கடினமான சூழல்களையும் எளிதில் கடக்கச் செய்யும்.
மஹிந்திரா ஸ்கார்பியோ- என் (Scorpio-N)
7 சீட்டர் கொண்ட இது, 500 மி.மீ வாட்டர் வேடிங் மற்றும் 187 மி.மீ கிரவுண்ட் கிளியரன்ஸ் கொண்டுள்ளது. நகரங்களில் தேங்கும் மழைநீரை இன்ஜின் பழுதின்றி இது எளிதில் கடக்கும்.
இதுதவிர, பட்ஜெட் பிரிவில் உள்ள காம்பேக்ட் எஸ்யூவிகளான ஹோண்டா எலிவேட் மற்றும் டாடா நெக்ஸான் ஆகியவையும் அவற்றின் அதிக உயரம் காரணமாக மழைநீர் மற்றும் கரடுமுரடான சாலைகளில் சிறந்த பாதுகாப்பை வழங்குகின்றன.
இதை மறந்துடாதீங்க!
வெள்ளம் சூழ்ந்த சாலைகளில் காரை முதல் அல்லது 2-வது கியரிலேயே இயக்க வேண்டும். சைலன்சர் வழியே நீர் புகுவதைத் தடுக்க ஆக்சிலரேட்டரை ஒரே சீராக மிதிக்க வேண்டும். ஆழமான நீரில் கார் நின்றால், மீண்டும் ஸ்டார்ட் செய்யக் கூடாது; மீறினால் ஹைட்ரோலாக் ஏற்பட்டு இன்ஜின் நிரந்தரமாக பழுதாகிவிடும்.
ட்ரெண்டிங் செய்திகள்






















