மாருதி சுஸுகி பலேனோ ஃபேஸ்லிஃப்ட் இன்று அறிமுகம்: ADAS, பெரிய திரை, டிசைன், விலை விவரங்கள்!
மாருதி கார்களிலேயே முதல்முறையாக சிஎன்ஜி மற்றும் ஏஎம்டி கியர்பாக்ஸ் இணைந்த ரேஞ்ச் மாடலாக இது வரவுள்ளது.

இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் தனது பிடியை மேலும் வலுப்படுத்த, நாட்டின் மிகப்பெரிய கார் தயாரிப்பு நிறுவனமான மாருதி சுஸுகி, தனது பிரபலமான பிரீமியம் ஹேட்ச்பேக் காரான பலேனோவின் புதிய ஃபேஸ்லிஃப்ட் மாடலை இன்று (செப்டம்பர் 5) அறிமுகப்படுத்துகிறது.
2022-ல் இதன் இரண்டாம் தலைமுறை மாடல் வெளியான பிறகு, தற்போதுதான் முதல்முறையாக இதில் பெரிய அப்டேட் செய்யப்பட்டுள்ளது.
வடிவமைப்பு
புதிய பலேனோவின் முன்புறத்தில் அதிக மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. ஹெட்லைட்களை இணைக்கும் குரோம் ஸ்ட்ரிப் மற்றும் புதிய கிரில் இதில் இடம்பெறலாம். முன்புற பம்பர் புதிய வடிவமைப்பைப் பெறும். அதேசமயம், பூமராங் வடிவ LED DRL விளக்குகளில் எவ்வித மாற்றமும் இல்லை. காரின் பக்கவாட்டில் புதிய அலாய் வீல்களும், பின்புற பம்பரில் சிறிய மாற்றங்களும் செய்யப்பட்டுள்ளன.
புதிய அம்சங்கள் மற்றும் பாதுகாப்பு
தற்போதுள்ள 9 இன்ச் திரைக்குப் பதிலாக, பெரிய 10.1 இன்ச் டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் வழங்கப்படலாம். கோடைக்காலத்திற்கு ஏற்ற வென்டிலேஷன் வசதி கொண்ட முன் இருக்கைகள் இடம்பெறும். பாதுகாப்பு வசதியாக, இந்த செக்மென்ட்டிலேயே முதல்முறையாக லெவல் 1 ADAS (பிளைண்ட் ஸ்பாட் வார்னிங், ரியர் கிராஸ் டிராஃபிக் அலர்ட், சேஃப் எக்சிட் வார்னிங்) தொழில்நுட்பம் வழங்கப்பட உள்ளது. மேலும் 6 ஏர்பேக்குகள், எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி ப்ரோகிராம், ஹில் ஹோல்ட் அசிஸ்ட் மற்றும் பார்க்கிங் சென்சார்கள் போன்ற பாதுகாப்பம்சங்கள் தொடரும்.
இன்ஜின் ரேஞ்ச் மற்றும் கியர்பாக்ஸ்
புதிய பலேனோவில், ஸ்விஃப்ட் காரில் உள்ள அதே Z சீரிஸ் 3 சிலிண்டர் பெட்ரோல் இன்ஜின் பயன்படுத்தப்படலாம். ஸ்விஃப்ட் போலவே இதிலும் சிஎன்ஜி வேரியண்ட் கிடைக்கும். மாருதி கார்களிலேயே முதல்முறையாக சிஎன்ஜி மற்றும் ஏஎம்டி கியர்பாக்ஸ் இணைந்த ரேஞ்ச் மாடலாக இது வரவுள்ளது. பெட்ரோல் மாடலில் மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வுகள் கிடைக்கும்.
விலை
தற்போதைய பலேனோவின் எக்ஸ் ஷோரூம் விலை ₹5.99 லட்சத்தில் தொடங்கி டாப் மாடல் ₹9.14 லட்சம் வரை உள்ளது. புதிய வடிவமைப்பு மற்றும் அம்சங்களால் புதிய காரின் விலை ₹15,000 முதல் ₹30,000 வரை அதிகரிக்கலாம். அதன்படி, புதிய பலேனோவின் ஆரம்ப விலை சுமார் ₹6 லட்சத்தில் தொடங்கி, டாப் வேரியண்ட் விலை சுமார் ₹9.5 லட்சம் வரை நிர்ணயம் செய்யப்படலாம் என மதிப்பிடப்பட்டுள்ளது.
ட்ரெண்டிங் செய்திகள்























