ஆக்டிவா, ஜூபிடருக்கு சவால்! 20 காசுகளில் 1 கி.மீ செல்லலாம்- புது கைனடிக் இ.வி. ஸ்கூட்டர்!
பழைய கைனடிக் ஹோண்டாவின் கிளாசிக் ரெட்ரோ தோற்றத்தை தக்கவைத்துள்ள இந்த ஸ்கூட்டர், ஆக்டிவா மற்றும் சேத்தக் போன்று முழுமையாக மெட்டல் பாடியால் உறுதியாக உருவாக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கான வரவேற்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நகரங்கள் மட்டுமின்றி கிராமப்புறங்களிலும் இ.வி. ஸ்கூட்டர்களின் பயன்பாடு பெருகிவிட்டதால், பெட்ரோல் ஸ்கூட்டர்களின் விற்பனை சரியத் தொடங்கியுள்ளது. நீண்ட காலமாக இந்திய சந்தையில் ஆதிக்கம் செலுத்தி வந்த ஹோண்டா ஆக்டிவா மற்றும் டிவிஎஸ் ஜூபிட்டர் போன்ற வாகனங்களுக்குப் பதிலாக, மக்கள் இப்போது எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை அதிகம் தேர்வு செய்கின்றனர்.
இந்தச் சூழ்நிலையைப் பயன்படுத்தி, தனது புகழ்பெற்ற பிராண்டை மீண்டும் நிலைநிறுத்தும் வகையில், மேம்படுத்தப்பட்ட புதிய கைனடிக் டிஎக்ஸ் (Kinetic DX) மற்றும் டிஎக்ஸ்+ (DX+) எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை கைனடிக் க்ரீன் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.
பேட்டரி மற்றும் ரேஞ்ச்
புதிய டிஎக்ஸ்+ ஸ்கூட்டரின் மிக முக்கிய சிறப்பம்சமே, பாதுகாப்பிற்கும் நீண்ட ஆயுளுக்கும் பெயர்போன 3.1 kWh LFP பேட்டரி பேக் ஆகும். ஒருமுறை முழுமையாக சார்ஜ் செய்தால் 132 கிலோமீட்டர் ரேஞ்ச் கிடைக்கும் என சான்றளிக்கப்பட்டுள்ளது. நகரப் போக்குவரத்து நெரிசலில் ஓட்டினால் கூட 105 முதல் 110 கி.மீ வரை மைலேஜ் தரும்.
இதில் 3.8 kW பீக் பவர் கொண்ட BLDC ஹப் மோட்டார் பொருத்தப்பட்டுள்ளது. ஃபாஸ்ட் சார்ஜர் மூலமாக 0-ல் இருந்து 80 சதவீத சார்ஜை வெறும் 3 மணி நேரத்தில் ஏற்றிவிட முடியும். மேலும், இதில் ரீஜெனரேட்டிவ் பிரேக்கிங் வசதியும் உள்ளது.
வடிவமைப்பு, சிறப்பம்சங்கள்
பழைய கைனடிக் ஹோண்டாவின் கிளாசிக் ரெட்ரோ தோற்றத்தை தக்கவைத்துள்ள இந்த ஸ்கூட்டர், ஆக்டிவா மற்றும் சேத்தக் போன்று முழுமையாக மெட்டல் பாடியால் உறுதியாக உருவாக்கப்பட்டுள்ளது. மாடர்ன் லுக்கிற்காக முழுமையான எல்இடி விளக்குகள், ஒளிரும் ஃப்ளைஸ்கிரீன் மற்றும் 12-இன்ச் அலாய் வீல்கள் கொடுக்கப்பட்டுள்ளன. இந்திய சாலைகளின் பள்ளங்கள், வேகத்தடைகளை எளிதாகக் கடக்க 165 மி.மீ கிரவுண்ட் கிளியரன்ஸ் தரப்பட்டுள்ளது.
இதில் இரண்டு ஹெல்மெட்டுகள் அல்லது மளிகைப் பொருட்களை வைக்கும் அளவிலான 37 லிட்டர் பெரிய அண்டர் சீட் ஸ்டோரேஜ் வசதி உள்ளது. பார்க் அசிஸ்ட், உள்ளே இழுத்துக்கொள்ளக்கூடிய ஈஸி சார்ஜ் கேபிள், ஸ்மார்ட் டெலிமேட்டிக்ஸ் மற்றும் ஒரு-டச்சில் இயங்கும் ஈஸி ஃபிளிப் ஃபுட்ரெஸ்ட் போன்ற பல நவீன வசதிகள் உள்ளன. இதன் பேட்டரி மற்றும் மோட்டார் தண்ணீர், தூசியிலிருந்து பாதுகாக்கும் IP67 ரேட்டிங் பெற்றுள்ளது.
விலை மற்றும் செலவு
பெட்ரோல் விலை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், ஆக்டிவா, ஜூபிட்டர் போன்ற பெட்ரோல் ஸ்கூட்டர்களை ஓட்ட ஒரு கிலோமீட்டருக்கு 2 முதல் 2.5 ரூபாய் வரை செலவாகிறது. ஆனால், கைனடிக் டிஎக்ஸ் ஸ்கூட்டருக்கு ஒரு கிலோமீட்டருக்கு 20 முதல் 30 காசுகள் மட்டுமே செலவாகும்.
₹1.18 லட்சம் என்ற ஆரம்ப விலையில் விற்பனைக்கு வந்துள்ள இந்த ஸ்கூட்டருக்கு, பண்டிகைகால சலுகைகள், அமேசான் கேஷ்பேக் மற்றும் இலவச வாரண்டி போன்ற பல நன்மைகளை நிறுவனம் வழங்கி வருகிறது. பெட்ரோல் செலவை மிச்சப்படுத்த நினைப்போருக்கு இது ஒரு சிறந்த தேர்வாகும்.
ட்ரெண்டிங் செய்திகள்






















