Honda Electric SUV: க்ரேட்டா, விட்டாராவை நான் அடிக்கிறேன்..! டிச.2, முதல் EV-ஐ இறக்கும் ஹோண்டா - பட்ஜெட்டில் SUV
Honda First Electric SUV: இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் ஹோண்டாவின் முதல் மின்சார கார் மாடலான 0 ஆல்பா எஸ்யுவி, டிசம்பர் 2ம் தேதி அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

Honda First Electric SUV: ஹோண்டாவின் 0 ஆல்பா எஸ்யுவி உள்ளூர் சந்தையில், விட்டாரா மற்றும் க்ரேட்டா போன்ற மின்சார கார் மாடல்களுடன் போட்டியிட உள்ளது.
ஹோண்டா 0 ஆல்பா மின்சார எஸ்யுவி:
நீண்ட கால காத்திருப்புக்குப் பிறகு ஒருவழியாக, இந்திய மின்சார கார் சந்தையில் ஹோண்டா நிறுவனம் தனது பயணத்தை தொடங்க உள்ளது. இதுதொடர்பான ஜப்பான் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தனது முற்றிலும் புதிய 0 ஆல்பா மின்சார எஸ்யுவி ஆனது உள்ளூர் சந்தையில் வரும் டிசம்பர் 2ம் தேதி அறிமுகப்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் முதல் மாதிரி கார் மாடலானது கடந்த 2025ம் ஆண்டு அக்டோபரில் ஜப்பானில் நடைபெற்ற மோட்டார் கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட்டது. தொடர்ந்து தற்போது இந்தியாவில் தீவிர சாலை பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. உள்ளூர் சந்தைக்கு இந்த காரின் அறிமுகமானது ஹோண்டாவிற்கு மிகவும் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. அந்த ப்ராண்டிற்கு தற்போது வரை இந்தியாவில் பெட்ரோல் மற்றும் ஹைப்ரிட் பவர்ட்ரெயின் ஆப்ஷன்கள் மட்டுமே உள்ளன.
உள்ளூரில் உற்பத்தி - பட்ஜெட் விலை
0 ஆல்பா மின்சார எஸ்யுவி ஆனது உள்நாட்டிலேயே உற்பத்தி செய்யப்படுவதால், இதன் விலை மிகவும் போட்டித்தன்மையுடன் நிர்ணயிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. ராஜஸ்தானின் தபுகரா பகுதியில் உள்ள நிறுவனத்தின் ஆலை, உள்நாட்டு விற்பனை மற்றும் ஏற்றுமதிக்கான உற்பத்தியைக் கையாளும் என எதிர்பார்க்கப்படுகிறது. மாருதி இ விட்டாரா, ஹுண்டாய் க்ரேட்டா மின்சார எடிஷன் மற்றும் மஹிந்த்ரா BE 6 ஆகிய கார் மாடல்களுடன் போட்டியிட உள்ள, ஹோண்டாவின் முதல் மின்சார கார் 17 லட்சம் தொடங்கி 30 லட்சம் வரையிலான விலை வரம்பை பெறக்கூடும். 2027ம் ஆண்டின் தொடக்கத்தில் இந்த காரின் விநியோகம் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஹோண்டா 0 ஆல்பா EV - டிசைன் விவரங்கள்
உற்பத்திக்கு தயாரான எஸ்யுவி ஆனது கான்செப்டில் இருந்ததை போன்றே, கூர்மையான தோற்றம் மற்றும் தனித்துவமான டிசைனை கொண்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மறைக்கப்பட்ட நிலையில் அடையாளம் காணப்பட்ட சோதனை வாகனமானது, உயரமான ரூஃப் லைன், ஸ்கொயர்ட் வீல் ஆர்ச்ஸ், க்ளோஸ்ட்-ஆஃப் முன்புற பகுதி மற்றும் தனித்துவமான லைட்டிங் எலிமெண்ட்ஸ் ஆகியவற்றை உறுதிப்படுத்தியுள்ளது. நிமிர்ந்த டெயில்கேட் மற்றும் பெரிய பின்புற விண்ட்ஸ்க்ரீன் ஆகியவையும் பரிசீலனையில் இருக்கலாம் எனவும், ஹோண்டா நிறுவனமானது விசாலமான மற்றும் நடைமுறைக்கு உகந்த கேபினுக்கும் முக்கியத்துவம் அளிப்பதாகவும் கூறப்படுகிறது.
ஹோண்டா 0 ஆல்பா EV - உட்புற வசதிகள், அம்சங்கள்
சாலை சோதனையின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இந்த மின்சார எஸ்யுவின் உட்புறம் எப்படி இருக்கும் என்ற மேலோட்டமான எண்ணத்தை வழங்கியுள்ளன. அதன்படி, பெரிய லேண்ட்ஸ்கேப் சார்ந்த சென்ட்ரல் டச்ஸ்க்ரீன், தனியாக இரு டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டர் மற்றும் மல்டி ஃபங்க்சன் ஸ்டியரிங் வீல் ஆகியவை இடம்பெற்றுள்ளன. உற்பத்திக்கு தயாரான மாடலில் இடம்பெற்றுள்ள அம்சங்கள் மற்றும் வசதிகளின் விவரங்களை ஹோண்டா நிறுவனம் இதுவரை அதிகாரப்பூர்வமாக வெளியிடவில்லை.

ஹோண்டா 0 ஆல்பா EV - பேட்டரி, விவரங்கள்
ஹோண்டா நிறுவனம் புதிய 0 ஆல்பா மின்சார காருக்கான பேட்டரி பேக்கேஜ், ஆற்றல் உற்பத்தி திறன் மற்றும் சார்ஜிங் தொடர்பான விவரங்கள் எதையும் வெளியிடவில்லை. ஆரம்பகட்ட தகவல்கள் இந்த காரில் இரண்டு வகையான பேட்டரி ஆப்ஷன்கள் இடம்பெறக்கூடும் எனவும், அவை 65KWH மற்றும் 75KWH என எதிர்பார்க்கப்படுகிறது. நிஜ உலக பயன்பாட்டில் 400 முதல் 500 கிலோ மீட்டர் தூரம் வரை ரேஞ்ச் அளிக்கக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்திய சந்தையில் இந்த பிரிவில் ஏற்கனவே வலுவான போட்டியாளர்கள் முன்னிலையில் இருப்பதால் தன்னை நிலைநிறுத்திக் கொள்ள, ஹோண்டா தனது நேர்த்தியான மற்றும் நம்பகத்தன்மைக்கான நற்பெயரை, போட்டித்தன்மை வாய்ந்த பயண வரம்பு, விலை நிர்ணயம், சார்ஜிங் செயல்திறன் மற்றும் உபகரணங்களுடன் சமநிலைப்படுத்த வேண்டிய தேவை உள்ளது குறிப்பிடத்தக்கது..
ட்ரெண்டிங் செய்திகள்






















