EV பேட்டரி பழுது: லட்சங்களை மிச்சப்படுத்திய மாணவர்; பாதுகாப்பு கேள்விக்குறியா? வைரல் வீடியோ
பொறியியல் மாணவர் ஒருவர் தனது எலக்ட்ரிக் எஸ்யுவி காரின் பேட்டரியை, நிறுவனங்கள் உதவி எதுவும் இல்லாமல், தாமாகவே பழுதுபார்க்கும் வீடியோ இணையத்தில் வைரல்.

எலெக்ட்ரிக் கார்களைப் பொறுத்தவரை அன்றாட பராமரிப்புச் செலவு மிகவும் குறைவு என்பது உண்மையே. ஆனால், அதிலிருக்கும் பேட்டரி அல்லது ஹை-வோல்டேஜ் சிஸ்டத்தில் ஏதாவது பழுது ஏற்பட்டால், அதைச் சரிசெய்வதற்கான செலவு மிக அதிகமாக இருக்கும்.
இதற்கிடையே, பொறியியல் மாணவர் ஒருவர் தனது எலக்ட்ரிக் எஸ்யுவி காரின் பேட்டரியை, நிறுவனங்கள் உதவி எதுவும் இல்லாமல், தாமாகவே பழுதுபார்க்கும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.
பேட்டரி பிரச்சினை
அந்த மாணவரின் காரில் பேட்டரி கோளாறு ஏற்பட்டவுடன், அதனை நிறுவனத்தின் அங்கீகரிக்கப்பட்ட சர்வீஸ் சென்டருக்குக் கொண்டு சென்றுள்ளார். அங்கு காரை பரிசோதித்தவர்கள், பழுதுபார்ப்பதற்கு மிகப்பெரிய தொகையை கட்டணமாகக் கூறியுள்ளனர்.
அதேபோல சரிசெய்யத் தேவையான உதிரிபாகங்கள் வந்து சேர சில நாட்கள் ஆகும் என்றும் தெரிவித்துள்ளனர். தொகை அதிகமாக இருந்ததாலும் அவ்வளவு நாட்கள் காத்திருக்க விரும்பாமலும், அந்த காரின் பேட்டரி பேக்கை தானே பிரித்து, கோளாறு என்னவென்று கண்டறிந்து, இரண்டே நாட்களில் மிகக் குறைந்த செலவில் அதனை முழுமையாக சரிசெய்துவிட்டார். பழுதுநீக்கப்பட்ட பிறகு அந்த கார் வழக்கம்போல் சீராக ஓடுவதாக அந்த பதிவில் கூறப்பட்டுள்ளது.
இணையத்தில் விவாதம்
அதிக திறன் கொண்ட ஹை வோல்டேஜ் எலெக்ட்ரிக் வாகன சிஸ்டத்தில், தனது சொந்த தொழில்நுட்ப அறிவைப் பயன்படுத்தி அவர் செய்துள்ள இந்தச் செயல் இணையத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. முழு பேட்டரியையும் மாற்றுவதற்குப் பதிலாக, சிறிய கோளாறுகளைக் குறைந்த கட்டணத்தில் சரிசெய்யும் மலிவான மாற்று வழிகள் வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.
எனினும் சாதாரண 12V கார் பேட்டரியை விட, எலெக்ட்ரிக் காரின் டிராக்ஷன் பேட்டரி மிகவும் ஆபத்தானது. பல நூறு வோல்ட் மின்சாரம் பாயும் இதில் முறையான பயிற்சி, இன்சுலேட்டட் கருவிகள், ஹை-வோல்டேஜ் ஐசோலேஷன் நடைமுறைகள் மற்றும் பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாமல் வேலை செய்வது உயிருக்கே ஆபத்தாக முடியும்.
இதனால் மின் அதிர்ச்சி, ஆர்க் ஃபிளாஷ், தீ விபத்து அல்லது தெர்மல் ரன்அவே போன்ற மிக மோசமான விளைவுகள் ஏற்படலாம். இதனால் அங்கீகரிக்கப்பட்ட சர்வீஸ் சென்டர்களை அணுகுவதே பாதுகாப்பானது என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.
ட்ரெண்டிங் செய்திகள்






















