கடந்த ஆண்டு இறுதியில் நடைபெற்ற தேர்தலில் இரண்டாவது முறையாக அதிபரானார் டொனால்ட் ட்ரம்ப்.
அவரின் பதவியேற்பு விழா இன்று நடைபெற உள்ளது.
நாளின் காலையில் செயின்ட் ஜான்ஸ் எபிஸ்கோபல் தேவாலயத்தில், தனியார் பிரார்த்தனையில் கலந்துகொள்வார்.
அதன்பின் ஜோ பைடன் மற்றும் கமலா ஹாரிஸ் ஆகியோருடன் வெள்ளை மாளிகையில் தேநீர் அருந்துகிறார்.
பிறகு துணை அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஜே.டி.வான்ஸுடன் கேபிடல் ரோட்டுண்டாவிற்கு பதவியேற்பு விழாவிற்கு செல்வார்.
தலைமை நீதிபதி ஜான் ராபர்ட்ஸ் பதவிப் பிரமாணம் செய்து வைத்த பின், தன் நான்கு ஆண்டு திட்டங்கள் குறித்து மக்களிடம் உரையாற்றுவார்.
அதன்பின் பென்சில்வேனியா அவென்யூவில், சுமார் 7,500 பேர் கலந்துகொள்ள உள்ள, அதிபரின் அணிவகுப்பு நடைபெற உள்ளது.
அதை தொடர்ந்து அதிபர், துணை அதிபர், செனட் தலைவர்கள் மற்றும் சிறப்பு விருந்தினர்களுடன் மதிய விருந்து நடக்கவுள்ளது.
பின்னர், வெள்ளை மாளிகயில் உள்ள அதிபருக்கான ஓவல் அலுவலகத்தில், நிர்வாக உத்தரவுகளுக்கான கோப்புகளில் கையொப்பமிடுகிறார்.
ஜனவரி 21ம் தேதி காலை 11 மணியளவில் வாஷிங்டன் தேசிய கதீட்ரலில் நடைபெறும் தேசிய பிரார்த்தனை சேவையில் பதவியேற்பு கொண்டாட்டங்கள் அதிகாரப்பூர்வமாக முடிவுபெறுகிறது.
இந்த பதவியேற்பு விழா, இந்திய நேரப்படி இன்று இரவு 10.30 மணிக்கு தொடங்குகிறது.
சிறப்பு விருந்தினர்களாக ஜோ பைடன், கமலா ஹாரிஸ், எலான் மஸ்க், ஜெஃப் பெசோஸ், மார்க் ஜூக்கர்பெர்க் கலந்துகொள்கின்றனர்.
டிக் டாக் எனும் சீன சமூக ஊடகத்தின் தலைவரான ஷோ செவ், முன்னாள் அதிபர்களான பில் கிளிண்டன், ஜார்ஜ் டபிள்யூ. புஷ் மற்றும் பராக் ஒபாமா, இத்தாலிய பிரதமர் ஜியோர்ஜியா மெலோனி ஆகியோரும் கலந்து கொள்ள உள்ளனர்.