சுந்தர்.சி - வடிவேலு கூட்டணியில் ’கேங்கர்ஸ்' எப்படி இருக்கு?

Published by: ஜான்சி ராணி

சுந்தர் இயக்கி வடிவேலுவுடன் இணைந்து நடித்துள்ள கேங்கர்ஸ் திரைப்படம் இன்று திரையரங்கில் வெளியாகியுள்ளது. கேததின் டெரஸா , வானி போஜன் , முனிஷ்காந்த் , பக்ஸ், காளை , ஹரிஷ் பேரடி , அருள்தாஸ் , சந்தான பாரதி உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்துள்ளார்கள்.

கதை ரீதியாக புதிதாக சொல்வதற்கு ஏதும் இல்லை. சமாளிப்பதற்கு ஒரு கதை , சம்பிரதாயத்திற்கு சில சண்டைக்காட்சிகள் , சம்பந்தமில்லாத ஒரு மசாலா பாடல் என சுந்தர் சி படங்களுக்கே உரிய எல்லாமும் இந்த படத்திலும் இருக்கின்றன.

படத்தின் முதல் பாதியில் ஒரு சில இடங்களைத் தவிர மற்ற காட்சிகளில் காமெடி பெரிதாக சிரிக்க வைப்பதில்லை. ஆனால் இரண்டாம் பாதியில் தான் நடக்கிறது உண்மையான சுந்தர் சி வடிவேலு மேஜிக்.

வடிவேலுவை முழுக்க முழுக்க ஒரு காமெடி படத்தில் பார்க்க வேண்டும் என்கிற ஆசை சிறுசு முதல் பெருசுவரை எல்லாருக்கும் இருக்கிறது. அந்த குறையை கேங்கர்ஸ் படம் தீர்த்து வைக்கிறது.

பி.டி வாத்தியார் சிங்காரமாக வரும் வடிவேலு தான் இப்படத்தின் நாயகன் என்றே சொல்லலாம்.

வெவ்வேறு கெட் அப்களில் வரும் வடிவேலு துளியும் எனர்ஜி குறையாமல் படம் முழுவதும் காணப்படுகிறார்.

ஹீரோயிசத்தை எல்லாம் ஓரம்கட்டிவிட்டு எல்லா நடிகர்களிடமும் உச்சபட்ச நடிப்பை வாங்கியிருக்கிறார் சுந்தர் சி.

க்ளைமேக்ஸ் காட்சி ஃபன் அன்லிமிடட். குறிப்பாக வடிவேலு மற்றும் பக்ஸ் கூட்டணி அல்டிமேட்.

கடந்த ஆண்டு அரண்மனை 4 , கடைசியாக வெளியான மதகஜராஜா என அடுத்தடுத்து இரு வெற்றிகளை கொடுத்த சுந்தர் சி தற்போது கேங்கர்ஸ் படத்தின் மூலம் ஹாட்ரிக் வெற்றியை பதிவு செய்துள்ளார்.