முதல் பாகத்தின் தொடர்ச்சியாகவே இரண்டாம் பாகம் அமைந்துள்ளது. முதல் பாகத்தில் கதாநாயகன் ஸ்ரீனிவாசன் இறப்பதுபோல் காண்பிக்கப்பட்டு இருக்கும்

ஆனால், ஸ்ரீனிவாசன் உயிருடன் இருக்கிறார். அவரை யார் காப்பாற்றினார்கள் ? எதற்காக காப்பாற்றினார்கள் ? டிமான்டிக்கும் முதல் பாகத்தில் வந்த செயினிற்கும் என்ன ஆனது என்பதையே இரண்டாம் பாகமாக விவரித்துள்ளனர்

அழகான மோகினிகள், சிரிப்பூட்டும் பேய்கள், பழிவாங்குவதற்காக பிளாஷ் பேக்கில் நடந்த மோசமான சம்பவம், இடையில் சம்பந்தமில்லாமல் பாடல் அதற்கு ஒரு டான்ஸ் என இவற்றைதான் இவ்வளவு காலமாக தமிழ் சினிமா பேய் படமாக காட்டி வந்தது

டிமான்டி 2 படம், சற்று மாறுப்பட்டதாகவே இருந்தது. 15 ஆம் நூற்றாண்டில் நடந்த ஏதோ ஒரு பிரச்சனைதான் இப்போது நடக்கும் அனைத்தும் விஷயங்களுக்கு காரணமாக இருக்கிறது

அதை சஸ்பென்ஸாக வைத்து, அது தொடர்பான சம்பவங்களை ஒவ்வொரு நிமிடமும் நம்மை சீட்டின் முனையில் உட்கார வைத்து கதை கூறியுள்ளார் அஜய் ஞானமுத்து

2009, 2015, 2021 என வெவ்வேறு ஆண்டுகளில் கதை நகர்கிறது. முதல் பாகத்தையும் இரண்டாம் பாகத்தையும் ஒன்று சேர முன்னும் பின்னும் காலம் கடந்து அழைத்து சென்றுள்ளனர்

Anti Christ, 666, மர்ம புத்தகம் போன்றவை வழக்கத்திற்கு மாறாக இருந்து சுவாரஸ்யத்தை கூட்டியது

அருள் நிதி,பிரியா பவானி ஷங்கர்,சார்பட்டா முத்துக்குமார், அருண் பாண்டியன்,சீன நடிகர் செரிங் டோர்ஜி உள்ளிட்டோர் ஏகபோகமாக நடித்துள்ளனர்

படத்தின் மிகப்பெரிய ப்ளஸ் கதையும் இயக்குநர் அஜய் ஞானமுத்துவும்தான். ரசிகர்களுக்கு தான் சொல்ல வந்த கதையை தெளிவாகவும் சஸ்பென்ஸாகவும் சொல்லியுள்ளார். லாஜிக் ஓட்டைகளில் சிக்கிக்கொள்ளாமல் படம் தப்பித்துவிட்டது

ஒளிப்பதிவாளர் ஹரிஷ் கண்ணன், படத்தொகுப்பாளர் குமரேஷ், இசையமைப்பாளர் சாம் சி.எஸ் தூண்களாக அமைந்து, படம் பார்க்கும் அனுபவத்தை மேம்படுத்தியுள்ளனர்

சிறுவர்கள், இளைஞர்கள், பெரியவர்கள் யார் வேண்டுமானலும் இந்த படத்தை பார்க்கலாம்