வரும் 18-ஆம் தேதி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி இங்கிலாந்தின் சவுதாம்படன் மைதானத்தில் நடைபெறுகிறது. இந்தியா vs நியூசிலாந்து அணிகள் மோதவுள்ள இந்தப் போட்டியில் டியூக் பால் பயன்படுத்தப்பட உள்ளது. 




அட எந்த பால் ஆ இருந்தா என்ன பா ?


பார்ப்பதற்கு சிவப்பு கலரில் எல்லா பந்துகளும் ஒரே மாதிரி இருந்தாலும், இதன் குணாதிசயங்கள் வெவ்வேறு. டெஸ்ட் போட்டியில் தற்போது மூன்று விதமான பந்துகளை ஐசிசி அங்கீகரித்துள்ளது. அது தான் டியூக் பால், எஸ்ஜி பால் மற்றும் கூகபுர்ரா பால். இதில் இந்திய அணி எஸ்ஜி கிரிக்கெட் பால்களை இந்தியாவில் பயன்படுத்துகிறது. அதே நேரம் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, தென்னாப்பிரிக்கா, பாகிஸ்தான், இலங்கை மற்றும் ஜிம்பாப்வே ஆகிய நாடுகள் கூகபுர்ரா பால்களை பயன்படுத்துகின்றன. இங்கிலாந்து மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் டியூக் ரக பந்துகளை பயன்படுத்துகின்றன.


அதனால் எஸ்ஜி பந்து அல்லது கூகபுர்ரா பந்து பயன்படுத்தப்பட்டால், இந்தியா அல்லது நியூசிலாந்து அணிக்கு சாதகமாக அது அமைந்துவிடும் என்பதால் இறுதிப் போட்டியில் இருவருக்கும் பொதுவான டியூக் பால் பயன்படுத்தப்படும் என்று ஐசிசி அறிவித்துள்ளது.


தோனியால் இடம் கிடைத்தது - அப்செட்டில் ரெய்னா


டியூக் பால் - அதிகமாக ஸ்விங் ஆகும்


உலகின் முதல் லெதர் பந்து டியூக் தான். மற்ற இரண்டு பந்துகளை விடவும் இது அடர்த்தியான சிவப்பு கலரில் இருக்கும். இது முழுக்க முழுக்க கையால் தயாரிக்கப்படும் பந்து, அதனால் இதன் குவாலிட்டி மிகவும் சிறப்பாக இருக்கும். டியூக் பால் மற்ற இரண்டு வகையான பந்துகளை விடவும் அதிக நேரம் புதுமை மாறாமல் இருக்கும். கிரிக்கெட் பந்தில் ஷைன் என சொல்லுவார்கள், அந்த ஷைன் அதிக நேரம் டியூக் பந்துகளில் மாறாமல் இருக்கும். மேலும் Seam என சொல்லப்படும் பந்தில் இருக்கும் நூல் பின்னல் நிறைய நூல்கள் கொண்டு தைக்கப்பட்டிருக்கும், இந்த நூல்கள் அவ்வளவு சீக்கிரம் பிரியாது. இந்த டியூக் பந்து 50 முதல் 60 ஓவர்கள் வரை கூடநேர்த்தியாக இருப்பதால், மற்ற இரண்டு பந்துகளை விடவும் இது அதிகமாக ஸ்விங் மற்றும் பவுன்ஸ் ஆகும். குறிப்பாக இங்கிலாந்தில் வானம் மூடிய வானிலை நிலவும் போது இந்த பந்தினை எதிர்கொள்வது மிகவும் சிரமமான காரியம்.




கூகபுர்ரா பால் - ஸ்விங் ஆகும் ஆனால் பெரிதாக ஸ்பின் ஆகாது 


கூகபுர்ரா பந்தில் Seam குறைவாக இருக்கும், ஆனால் இந்த பந்து 30 ஓவர்கள் வரை ஸ்விங் ஆகும். Seam குறைவாக இருப்பதால் பெரிதாக ஸ்பின் ஆகாது, ஆஸ்திரேலியா செல்லும்போது பெரிதாக நமது சுழற்பந்து வீச்சாளர்கள் ஜொலிக்க முடியாமல் போவதற்கு இதுவும் ஒரு காரணம். அதே நேரம் பந்து தேய்ந்த பிறகு, பேட்ஸ்மேன் தங்களது ஷாட்களை விளையாட கூகபுர்ரா பால் எளிதாக இருக்கும். கூகபுர்ரா பால் பெரும்பாலான டெஸ்ட் போட்டிகளிலும், அனைத்து சர்வதேச டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளில் பயன்படுத்தப்படுகிறது. இந்த பந்தை உலக அளவில் அதிகமாக பயன்படுத்தும் பந்து என குறிப்பிடலாம்.




எஸ்ஜி பால் - ஸ்விங் குறைவு ஆனால் ஸ்பின் அதிகம் 


1991 முதல் இந்தியாவில் டெஸ்ட் போட்டிகளில் பயன்படுத்தப்பட்டு வருகிறது எஸ்ஜி பால். இதில் Seam அகலமாக இருக்கும், கனமான நூல் கொண்டு பின்ன பட்டிருக்கும். 30 வருடங்களாக எஸ்ஜி பால் முழுக்க முழுக்க கையால் தயாரிக்கப்படுகிறது. 90 ஓவர்கள் வீசப்பட்ட பின்பும் இதன் seam கெடாது, ஆனால் இந்தியாவில் நிலவும் அதிகப்படியான வெப்பம் காரணமாக இதன் ஷைன் விரைவாக போய்விடும். அதனால் மற்ற இரண்டு பந்துகளை விட வேகப்பந்து வீச்சாளர்களுக்கு இது துவக்கத்தில் குறைவான ஸ்விங்கையே கொடுக்கும். ஆனால் 40 ஓவர்கள் விளையாடிய பிறகு ஓரளவு பந்து தேய்ந்தவுடன், இந்த பந்து ரிவர்ஸ் ஸ்விங்காக தொடங்கும். அதே நேரம் இதன் அகலமான Seam சுழற்பந்து வீச்சாளர்களுக்கு அதிக அளவில் கைகொடுக்கும், அதனால் இந்தியாவில் நடைபெறும் போட்டிகளின் போது முதல் ஓவரை வீசவே ரவிச்சந்திரன் அஸ்வின் வருவதை பலமுறை நாம் பார்த்திருப்போம்.




இந்நிலையில்தான் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் பி.எஸ்.ஐ கிரேடு 1 டியூக் பந்துகளைப் பயன்படுத்த ஐ.சி.சி அறிவித்துள்ளது. இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளில் யார் இந்த டியூக் பந்தை சிறப்பாக கையாள போகிறார்களோ, அவர்களே சாம்பியன் என்பதில் சந்தேகமில்லை.


WTC final 2021: 7 நாட்களில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் : முழுவீச்சில் தயாராகும் இந்திய அணி!