தமிழ்நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 15,108 பேர் கொரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டனர். இன்றைய நிலவரப்படி கொரோனா தொற்று காரணமாக 1 லட்சத்து 62 ஆயிரத்து 73 நபர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். கடந்த 24 மணிநேரத்தில், கொரோனா தொற்றில் இருந்து 27,463 பேர் குணமடைந்துள்ளனர். நேற்றைய ஒருநாள் இறப்பு எண்ணிக்கை  374ஆக உள்ளது. அதிகபட்சமாக கோவையில் ஒரு நாளில் மட்டும் 1982 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையின் ஒருநாள் பாதிப்பு எண்ணிக்கை 989-ஆகக் குறைந்துள்ளது. திருப்பூர், தஞ்சாவூர் மற்றும் திருச்சி ஆகிய மாவட்டங்களில் முறையே 844, 644, 420 பேர் ஒரே நாளில் பாதிக்கப்பட்டுள்ளனர். பரவலாக அனைத்து மாவட்டங்களிலும் ஒருநாள் பாதிப்பு எண்ணிக்கை குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. 



மாவட்டவாரி விவரம்


இதற்கிடையே தமிழ்நாட்டில் கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் மிகவும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியம் தெரிவித்திருந்தார். இதுகுறித்த அவரது செய்தியாளர் சந்திப்பில்,


“தமிழ்நாட்டிற்கு நேற்று மாலை வரை 3 லட்சத்து 65 ஆயிரம் கொரோனா தடுப்பூசிகள் வந்துள்ளன. அந்த தடுப்பூசிகளை மாவட்டங்களுக்கு பிரித்து அனுப்பும் பணி இரவே முடிக்கப்பட்டது. இதையடுத்து, இன்று 1 லட்சத்து 26 ஆயிரம் கோவாக்சின், 3 லட்சம் கோவிஷீல்டு தடுப்பூசிகள் வரவுள்ளன. எனவே, ஏற்கனவே உள்ள 1 கோடியே 6 லட்சம் தடுப்பூசிகளுடன் சேர்த்து, இன்றைக்கு நான்கே கால் லட்சம் அளவு தடுப்பூசிகள் வர உள்ளன. எனவே, 1 கோடியே 10 லட்சம் என்ற அளவில் தடுப்பூசிகள் தமிழகத்திற்கு வந்துள்ளன.




ஏற்கனவே, 98 லட்சம் தடுப்பூசிகள் போடப்பட்டிருக்கும் நிலையில், இன்று தடுப்பூசி செலுத்தியவர்களின் எண்ணிக்கை 1 கோடியை எட்ட வேண்டும் என்று மாவட்ட நிர்வாகங்களுக்கு சுகாதாரத்துறை செயலாளர் அறிவுறுத்தியுள்ளார். அந்த வகையில், இன்று பல்வேறு இடங்களில் முகாம்கள் நடத்தப்பட்டுக் கொண்டிருக்கிறது. நிச்சயம் இன்று மாலைக்குள் 1 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது என்ற நிலை வரும்.  சென்னை மாநகராட்சியைப் பொறுத்தவரை, தடுப்பூசி போடும் பணியை மாநகராட்சி ஆணையர் தலைமையிலான அலுவலர்கள் சிறப்பாக செயல்படுத்துகின்றனர். 21 லட்சத்து 63 ஆயிரம் நபர்கள் இதுவரை பயன்பெற்றுள்ளனர்.


 


முதல்வரின் அறிவுறுத்தலுக்கு ஏற்ப கோயம்பேடு மார்க்கெட்டில் பலதரப்பட்ட வணிகர்களுக்கு மாநகராட்சி, சுகாதாரத்துறை, சி.எம்.டி.ஏ. இணைந்து தடுப்பூசி போடும் பணி விரைவாக நடைபெறுகிறது. நேற்று மாலை வரை 9 ஆயிரத்து 550 நபர்களுக்கு இங்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இன்று மாலைக்குள் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டிருக்கும். இதனால், அகில இந்திய அளவில் அதிகமானோர் ஒரே இடத்தில் தடுப்பூசி செலுத்திக்கொண்டனர் என்ற பெருமையை கோயம்பேடு மார்க்கெட் அடையும்” என்று அவர் கூறினார். 

Also Read:டெல்லியில் 213 நபர்களுக்கு இன்று கொரோனா