இந்தியாவின் 85-வது கிராண்ட்மாஸ்டர் பட்டத்தை வென்றுள்ளார் பி ஷியாம் நிகில்.


கிராண்ட்மாஸ்டர் பட்டம்:


துபாயில் போலீஸ் மாஸ்டர்ஸ் செஸ் தொடர் நடைபெற்றது. இதில் இந்தியாவைச் சேர்ந்த வீரர்கள் தான் ஆரம்பம் முதலே ஆதிக்கம் செலுத்தி வந்தனர். இதில் இந்திய வீரரான பி ஷியாம் நிகில் 5 புள்ளிகளைப் பெற்று 39 வது இடத்தை பிடித்தார்.


இதன் மூலம் இந்தியாவின் 85 வது கிராண்ட்மாஸ்டர் பட்டத்தை வென்றார். அதோடு தமிழ்நாட்டின் 31 வது கிராண்ட்மாஸ்டர் என்ற பெருமையையும் பெற்று அசத்தினார் நிகில். 


முன்னதாக கடந்த 2011 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் மும்பையில் நடந்த மேயர்ஸ் கோப்பை தொடரில் வென்று கிராண்ட்மாஸ்டர் ஆவதற்கான வாய்ப்பை பெற்றார். அதனைத்தொடர்ந்து நடைபெற்ற தேசிய ப்ரீமியர் லீக் தொடரில் பங்கு பெற்று தனது 19 வயதில் 2 வது வாய்ப்பை தக்க வைத்தார்.


அதேபோல், கடந்த 2012 ஆம் ஆண்டு மே மாதம் வெளியான “பிடே” தரவரிசைப் பட்டியலில் கிராண்ட்மாஸ்டர் ஆவதற்கு குறைந்த பட்ச அளவான 2502 புள்ளிகளுக்கு 2500 புள்ளிகளை பெற்றார். 


மகிழ்ச்சி அடைகிறேன்:




இந்நிலையில் தான் 12 வருட காத்திருப்புக்கு பிறகு துபாயில் நடைபெற்ற செஸ் தொடரின் மூலம் கிராண்ட்மாஸ்டர் பட்டத்தை வென்று அசத்தி இருக்கிறார் ஷியாம் நிகில். தமிழ்நாட்டில் உள்ள நாகர்கோவிலைச் சேர்ந்த இவர் இது தொடர்பாக பேசுகையில், “கிராண்ட்மாஸ்டர் பட்டத்தை பெற்றதற்கு நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். அதற்கு முக்கிய காரணம் என்னுடைய பெற்றோர். இந்த தருணத்திற்காகத்தான் காந்திருந்தனர்.




அவர்கள் எதிர்பார்த்து காத்திருந்தது இப்போது நடந்து இருக்கிறது. என்னைப் பொறுத்தவரை பிரபலமான செஸ் வீரர்களான மைக்கேல் தால், கேரி கேஷ்போரோவ் போன்ற கிராண்ட்மாஸ்டர்களை போல் விளையாட நினைத்தேன்.


நான் மிகவும் மகிழ்ச்சியுடன் விளையாடினேன். அதுதான் என்னுடைய நோக்கம். அதை நான் இப்போது அடைந்துவிட்டேன். இனிமேல் நான் இன்னும் சுதந்திரத்துடனும் மகிழ்ச்சியுடனும் விளையாடுவேன்” என்று கூறினார்.


மேலும் படிக்க: LSG Vs DC, IPL 2024: யாருடைய பிளே-ஆஃப் கனவு முடிவடைகிறது? லக்னோ - டெல்லி அணிகள் இன்று பலப்பரீட்சை


மேலும் படிக்க: KL Rahul IPL: கே.எல். ராகுலை உரிமையாளர் கோயங்கா திட்டினாரா? - போட்டு உடைத்த லக்னோ பயிற்சியாளர்