LSG Vs DC, IPL 2024: லக்னோ மற்றும் டெல்லி ஆகிய அணிகள் மோத உள்ள போட்டி, இரவு 7.30 மணிக்கு அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற உள்ளது.


ஐபிஎல் தொடர் 2024:


இந்திய கிரிக்கெட் திருவிழாவான ஐபிஎல் தொடரின் 17வது சீசன் கோலாகலமாக தொடங்கி நடைபெற்று வருகிறது. ஏற்கனவே 62 லீக் போட்டிகள் நடந்து முடிந்துள்ள நிலையில், மும்பை மற்றும் பஞ்சாப் ஆகிய அணிகள் பிளே-ஆஃப் வாய்ப்பை இழந்துள்ளன. நேற்றைய போட்டி மழையால் கைவிடப்பட்டதால், குஜராத் அணியின் பிளே-ஆப் கனவும் தகர்ந்துள்ளது. இந்நிலையில், இன்றைய லீக் போட்டியில் கே. எல். ராகுல் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் ரிஷப் பண்ட் தலைமையிலான டெல்லி கேபிடல்ஸ் ஆகிய அணிகள் மோத உள்ளன.


லக்னோ - டெல்லி பலப்பரீட்சை:


டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில், இரவு 7.30 மணிக்கு இப்போட்டி தொடங்குகிறது. லக்னோ அணி இதுவரை 12 போட்டிகளில் விளையாடி, 6 வெற்றிகளுடன் புள்ளிப்பட்டியலில் 7வது இடத்தில் உள்ளது. பிளே-ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற மீதமுள்ள இரண்டு போட்டிகளிலும், அபார வெற்றி பெற வேண்டியது குறிப்பிடத்தக்கது. மறுமுனையில் டெல்லி அணி 13 போட்டிகளில் விளையாடி 6 வெற்றிகளுடன் புள்ளிப்பட்டியலில் ஆறாவது இடத்தில் உள்ளது. பிளே-ஆஃப் ரேஸில் நீடிக்க இன்றைய போட்டியில் இமாலய வெற்றி பெற வேண்டியது அவசியம். அதோடு, மற்ற போட்டிகளின் முடிவுகளுக்கும் காத்திருக்க வேண்டியிருக்கும். எனவே, இன்றைய போட்டி லக்னோ மற்றும் டெல்லி அணிகளுக்கு வாழ்வா, சாவா என்ற சூழலில் நிகழ உள்ளது. போட்டியின் நேரலையை தொலைக்காட்சியில் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் அலைவரிசையிலும், ஓடிடியில் ஜியோ சினிமா செயலியிலும் ரசிகர்கள் கண்டுகளிக்கலாம்.


பலம், பலவீனங்கள்:


உள்ளூர் மைதானத்தில் விளையாடுவது டெல்லி அணிக்கு முதல் பலமாக பார்க்கப்படுகிறது. கடந்த போட்டியில் விளையாடாத கேப்டன் ரிஷப் பண்ட், இன்று மீண்டும் அணிக்கு திரும்புகிறார். மெக்கர்க், ஸ்டப்ஸ், அக்சர் படேல் போன்ற வீரர்கள் நல்ல ஃபார்மில் உள்ளனர். பந்துவீச்சில் கலீல் அகமது மற்றும் இஷாந்த் சர்மா ஆகியோர் நம்பிக்கை அளிக்கின்றனர். மறுமுனையில் லக்னோ விளையாடிய கடைசி போட்டியில், ஐதராபாத்திடம் 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது மனதளவில் அவர்களை கண்டிப்பாக பாதித்திருக்கும். அதில் இருந்து மீண்டு வந்து இன்று அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டி உள்ளது. கே.எல். ராகுல், ஸ்டோய்னிஷ் மற்றும் பூரான் ஆகியோரையே, அணியின் பேட்டிங் யூனிட் நம்பியுள்ளது. கடைசி போட்டியில் லக்னோ பந்துவீச்சாளர்கள், 150+ ரன்களை வெறும் 9.2 ஓவர்களில் விட்டுக்கொடுத்தனர் என்பது நினைவுகூறத்தக்கது.


நேருக்கு நேர்:


ஐபிஎல் வரலாற்றில் இரு அணிகளும் இதுவரை 4 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. அதில் லக்னோ அணி 3 முறையும், டெல்லி அணி 1 முறையும் வெற்றி பெற்றுள்ளன. லக்னோ அணிக்கு எதிராக ஒரு போட்டியில் டெல்லி அணி அதிகபட்சமாக 189 ரன்களையும், குறைந்தபட்சமாக 143 ரன்களையும் பதிவு செய்துள்ளது. அதேநேரம், டெல்லி அணிக்கு எதிராக ஒரு போட்டியில் லக்னோ அணி அதிகபட்சமாக 195 ரன்களையும், குறைந்தபட்சமாக 167 ரன்களையும் பதிவு செய்துள்ளது.


டெல்லி மைதானம் எப்படி?


டெல்லி மைதானம் அளவில் சிறியது என்பது பேட்டிங்கிற்கு மிகவும் சாதகமாக உள்ளது. பந்துவீச்சாளர்களுக்கு இந்த மைதானம் ஒரு மோசமான அனுபவத்தை கொடுக்கலாம். எனவே, டாஸ் வெல்லும் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்வதே நல்ல முடிவாக இருக்கும்.


உத்தேச அணி விவரங்கள்:


டெல்லி: ஜே ஃப்ரேசர்-மெக்கர்க், டேவிட் வார்னர், ஷாய் ஹோப், ரிஷப் பந்த், டி ஸ்டப்ஸ், அபிஷேக் போரல், அக்சர் படேல், கேஎல் யாதவ், இஷாந்த் சர்மா, முகேஷ் குமார், கேகே அகமது


லக்னோ: கியூ டி காக், கேஎல் ராகுல், தீபக் ஹூடா, எம்பி ஸ்டோய்னிஸ், படோனி, நிக்கோலஸ் பூரன், கேஎச் பாண்ட்யா, ரவி பிஷ்னோய், ஒய்எஸ் தாக்கூர், நவீன்-உல்-ஹக், மொஹ்சின் கான்