கார்த்திக் குமாரிடம் இருந்து நான் உண்மையான காதலை நான் எதிர்பார்க்கவே இல்லை என பாடகி சுசித்ரா தெரிவித்துள்ளார். 


ரேடியோ ஜாக்கியாக தனது பணி வாழ்க்கையை தொடங்கி தமிழக மக்களிடையே பிரபலமானவர் சுசித்ரா. இவர் தமிழ், மலையாள, தெலுங்கு ஆகிய மொழிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ளார். அதுமட்டுமல்லாமல் மாளவிகா, தமன்னா, பிஜா பாஜ்பாய், ஸ்ரேயா, லட்சுமி ராய், இனியா, அகிலா கிஷோர் உள்ளிட்ட பல்வேறு நடிகைகளுக்கும் டப்பிங் பேசியுள்ளார்.


2002-ஆம் ஆண்டு வெளியான லேசா லேசா படம் மூலம் பாடகியாக எண்ட்ரியான சுசித்ரா தமிழில் பல ஹிட் பாடல்களை பாடியுள்ளார். 


இதனிடையே பல கண்ட நாள் முதல், யாரடி நீ மோகினி உள்ளிட்ட பல படங்களில் துணை வேடங்களில் நடித்த நடிகர் கார்த்திக் குமாரை 2005 ஆம் ஆண்டு சுசித்ரா திருமணம் செய்துகொண்டார். இந்த தம்பதியினர் 2017-ஆம் ஆண்டு பிரிந்தனர். அதற்கு “சுச்சி லீக்ஸ்” விவகாரம் தான் காரணமாக அமைந்தது. சுசித்ராவின் ட்விட்டர் கணக்கில் இருந்து தனுஷ், ஆண்ட்ரியா, அனிருத், திரிஷா, என பல நடிகர்களின் தனிப்பட்ட புகைப்படங்கள் எல்லாம் பொதுவெளியில் ரிலீசாகி பெரும் அதிர்வலைகளை உண்டாக்கியது. 


இதனால் சுசித்ராவின் திரையுலக கேரியர் முடிவுக்கு வந்தது. அவரைப் பற்றி பலவிதமான தகவல்கள் காட்டுத்தீயாய் பரவியது. தன்னுடைய அக்கவுண்ட் ஹேக் செய்யப்பட்டதாக காவல்துறையில் சுசித்ரா புகாரளித்தார். இதனிடையே தற்போது அவர் அளித்துள்ள நேர்காணலில், சுச்சி லீக்ஸ் விவகாரத்துக்கு தனுஷ், கார்த்திக் குமார் ஆகியோர் அடங்கிய நண்பர்கள் கூட்டம்தான் காரணம் என பரபரப்பான குற்றச்சாட்டை சுசித்ரா முன்வைத்துள்ளார். 


மேலும் அதில், “நான் ரொம்ப எமோஷனலான பெண். நான் விவாகரத்துக்கு பிறகு இரண்டாவதாக என்னுடைய சிறுவயது நண்பரை திருமணம் செய்துகொண்டேன். நான் எதிர்பார்த்த உண்மையான அன்பு கிடைத்து விட்டது. நான் மட்டுமல்ல எல்லா பெண்களும் சின்ன வயதில் தங்களுக்கு நல்ல கணவன் கிடைக்க வேண்டும் என ஆசைப்படுவார்கள். கார்த்திக் குமாருக்கும் எனக்கும் பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்ட திருமணம்தான் நடந்தது. அவரிடம் இருந்து உண்மையான காதலை எதிர்பார்க்கவே இல்லை.


2006-ஆம் ஆண்டில் இருந்து 2017 வரை நான் தான் விவாகரத்து கேட்டுக் கொண்டிருந்தேன். மருத்துவ பரிசோதனையில் எனக்கு குழந்தை பெற்றுக்கொள்ள முடியும், ஆனால் கார்த்திக்கால் முடியாது என இருந்தது. இப்படியான நிலையில் சுச்சி லீக் விஷயம் விவாகரத்து பெற காரணமாக அமைந்தது” என தெரிவித்துள்ளார்.