KL Rahul IPL: கே.எல். ராகுல் மற்றும் லக்னோ உரிமையாளர் இடையேயான விவாதத்தால் எந்த பிரச்னையும் இல்லை என, அணியின் உதவி பயிற்சியாளர் பேசியுள்ளார்.


கே. எல். ராகுல் - லக்னோ உரிமையாளர் இடையேயான விவாதம்:


ஐபிஎல் தொடரில் கடந்த 8ம் தேதி நடைபெற்ற லீக் போட்டியில், ஐதராபாத் மற்றும் லக்னோ அணிகள் மோதின. முதலில் பேட்டிங் செய்த லக்னோ அணி 165 ரன்களை சேர்த்தது. இலக்கை நோக்கி களமிறங்கிய ஐதராபாத் அணியில், அபிஷேக் சர்மா மற்றும் டிராவிஸ் ஹெட் கூட்டணி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. அடுத்தடுத்து சிக்சர்கள் மற்றும் பவுண்டரிகள் என விளாசி இருவரும் அரைசதம் கடந்தனர். லக்னோ அணியின் அனைத்து முயற்சிகளும் தோல்வியுற, ஐதராபாத் அணி வெறும் 9.4 ஓவர்களில் இலக்கை எட்டி 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த படுதோல்வி தொடர்பாக லக்னோ அணி உரிமையாளர் கோயங்கா, கேப்டன் கே.எல். ராகுலிடம் மைதானத்திலேயே ஆவேஷமாக பேசிய வீடியோ இணையத்தில் வைரலானது. இதனால், கோயங்காவிற்கு கடும் கண்டனங்கள் குவிந்த நிலையில், கே.எல். ராகுல் லக்னோ அணியில் இருந்து விலக உள்ளதாக தகவல் வெளியானது.


லக்னோ பயிற்சியாளர் விளக்கம்: 


இந்நிலையில், டெல்லி அணிக்கு எதிரான போட்டிக்கு முன்பாக லக்னோ அணியின் உதவி பயிற்சியாளர் லான்ஸ் க்ளூஸ்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது,இரண்டு கிரிக்கெட் பிரியர்களிடையே நடந்த வலுவான விவாதத்தில் எனக்கு எந்தப் பிரச்சினையும் கிடையாது. என்னைப் பொறுத்தவரை இது ஒரு டீ கப்பில் ஏற்பட்ட புயல்தான்.  நாங்கள் இப்படியான வலுவான விவாதத்தை விரும்புகிறோம். இதனால் அணி சிறப்பாக இருக்கும் என்று நம்புகிறோம். இதனால் இது எங்களுக்கு ஒரு பெரிய பிரச்னை கிடையாது.


கே.எல்.ராகுல் தனக்கே உரிய ஒரு பாணியை வைத்திருக்கிறார். இது அவரை ஒரு தனித்துவமான வீரராகவும் உலகம் முழுவதும் மரியாதைக்குரியவராகவும் வைத்திருக்கிறது. ஆனால் விதிவிலக்காக இந்த ஐ.பி.எல் தொடர் அவருக்கு கடினமாக இருந்திருக்கிறது. ஏனென்றால் நாங்கள் தொடர்ந்து விக்கெட்டுகளை இழந்து வந்திருக்கிறோம். இதனால் அவர் எப்பொழுதும் இன்னிங்ஸை கட்டி எழுப்ப வேண்டிய அவசியத்தில் இருந்திருக்கிறார். அவரைச் சுற்றி நாங்கள் ஒரு பேட்டிங் யூனிட்டாக எப்படி செயல்பட வேண்டுமோ அப்படி சிறப்பாக செயல்படவில்லை. இதன் காரணமாக அவருக்கு கடினமான சூழ்நிலை அமைந்து விட்டது. அடுத்த ஆண்டு கே.எல். ராகுலை லக்னோ அணி தக்கவைக்காது என கூறப்படுவது வதந்திகள். அப்படி எந்த விவாதமும் நடைபெறவில்லை. ” என லான்ஸ் க்ளூஸ்னர் தெரிவித்துள்ளார்.


பிளே-ஆஃப் சுற்றில் லக்னோ?


லக்னோ அணி இதுவரை 12 போட்டிகளில் விளையாடி, 6 வெற்றிகளுடன் புள்ளிப்பட்டியலில் 7வது இடத்தில் உள்ளது. பிளே-ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற மீதமுள்ள இரண்டு போட்டிகளிலும், அபார வெற்றி பெற வேண்டியது அவசியமாக உள்ளது. இந்த சூழலில் டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் இன்று நடைபெற உள்ள போட்டியில், டெல்லி மற்றும் லக்னோ அணிகள் மோத உள்ளன.