முகமது அலி என்றால் இந்தியாவில் அனைவருக்கும் தெரியும். ஆனால், கவுர் சிங் என்றால் இந்தியர்கள் பலருக்கும் தெரியாது. ஆனால், முகமது அலியை பற்றி இந்தியர்கள் நினைக்கும்போது, நிச்சயம் கவுர்சிங் பற்றியும் நாம் நினைத்துப் பார்க்க வேண்டியது அவசியம். ஏனென்றால், குத்துச்சண்டை என்றாலே அனைவருக்கும் நினைவுக்கு வரும் முகமது அலிக்கு எதிராக சண்டையிட்ட ஒரே இந்திய குத்துச்சண்டை வீரர் கவுர்சிங் மட்டுமே.


பஞ்சாப் மாநிலத்தின் மால்வாவில் பிறந்தவர் கவுர்சிங். சிறு வயது முதலே நாட்டுப்பற்று நிறைந்த கவுர்சிங் இந்திய ராணுவத்தில் தனது இளம் வயதிலே இணைந்தார். இதனால், தனது 23வது வயதிலே ஹவில்தாராக ராணுவத்தில் பொறுப்பு வகித்தார்.




ஹவில்தாரான சில மாதங்களிலே 1971ம் ஆண்டு நடைபெற்ற பாகிஸ்தானுக்கு எதிரான போரில் பங்கேற்றார். இந்தியாவிற்காக துணிச்சலாக சண்டையிட்ட கவுர்சிங்கின் வீரத்தை மூத்த அதிகாரிகள் பலரும் வெகுவாக பாராட்டினர். அவரது வீரத்தை பாராட்டி சேனா விருதும் வழங்கி கவுரவிக்கப்பட்டது.


ராணுவத்தில் இணையும் வரை அவருக்கும் குத்துச்சண்டைக்கும் எந்தவித தொடர்பும் இல்லாமல் இருந்துள்ளது. ராணுவத்தில் இணைந்த பிறகு குத்துச்சண்டையில் கவனம் செலுத்த தொடங்கியுள்ளார். 1977ம் ஆண்டு குத்துசண்டை போட்டிகளில் பங்கேற்கத் தொடங்கினார். 1979ம் ஆண்டு முதன்முறையாக தேசிய சீனியர் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் தொடரில் தங்கம் வென்று அசத்தினார்.


1979ம் ஆண்டு முதல் தொடர்ச்சியாக 1983ம் ஆண்டு வரை தேசிய சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கப்பதக்கங்களை குவித்து இந்தியாவின் முன்னணி குத்துச்சண்டை வீரராக உருவெடுத்தார். 1980ம் ஆண்டு ஆசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் தொடரிலும் சாம்பியன் பட்டத்தை வென்று அசத்தினார்.




அப்போது குத்துச்சண்டை ஜாம்பவனாகவும், எதிர்த்து ஆடும் வீரர்களுக்கு மரணத்தை பரிசாக அளிக்கும் வீரரான முகமது அலி இந்தியாவில் ஒரு காட்சி குத்துச்சண்டை போட்டியில் பங்கேற்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதையடுத்து, முகமது அலிக்கு எதிராக விளையாட போட்டிகளில் பங்கேற்க சர்வதேச வீரர்களே களமிறங்க தயங்கிய நிலையில், இந்தியா சார்பில் பங்கேற்க கவுர்சிங் களமிறங்கினார்.


1980ம் ஆண்டு ஜனவரி 27-ந் தேதி டெல்லி தேசிய மைதானத்தில் முகமது அலியுடன் கவுர் சிங் நேருக்கு நேர் ரிங்கில் மோதினார். நான்கு சுற்றுகள் கொண்ட இந்த போட்டியில் முகமது அலிக்கு சவால் விடும் வகையில் கவுர்சிங்கும் மோதினார். அன்றே இந்த போட்டியை சுமார் 50 ஆயிரம் பேர் நேரில் கண்டு களித்து ரசித்தனர். மேலும், முகமது அலிக்கு எதிராக சண்டையிட்ட ஒரே இந்தியர் என்ற பெருமையை கவுர்சிங் படைத்தார்.


அவரது திறமையை பாராட்டி 1982ம் ஆண்டு அவருக்கு மத்திய அரசு அர்ஜூனா விருது வழங்கி கவுரவித்தது. 1983ம் ஆண்டு மத்திய அரசு நாட்டின் உயரிய விருதான பத்மஸ்ரீ விருது வழங்கி கவுரவித்தது. 1984ம் ஆண்டு இந்தியா சார்பில் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்று முதல் இரண்டு சுற்றுகளில் வெற்றி பெற்று அசத்தினார்.




இன்றைய இளம் குத்துச்சண்டை வீரர்கள் பலருக்கும் உதாரணமாக திகழும் கவுர்சிங்கை அரசாங்கம் கைவிரித்ததுதான் மிகவும் வருத்தமான செயலாக விமர்சிக்கப்பட்டது. இவரது திறமையை பாராட்டி 1982ம் ஆண்டு பஞ்சாப் அரசு ரூபாய் 1 லட்சம் பரிசாக அறிவித்தது. ஆனால், 34 ஆண்டுகளாகியும் அவருக்கு 2016ம் ஆண்டு வரை பஞ்சாப் அரசு அந்த பரிசை வழங்கவில்லை என்பது மிகவும் வேதனையானது.


நாட்டிற்காக பல பதக்கங்களை வென்று, அர்ஜூனா, பத்மஸ்ரீ விருதுகளை வென்று, ராணுவத்தில் பாகிஸ்தானுக்கு எதிராக போராடிய கவுர்சிங்கை உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு இருந்தபோது அவருக்கு அரசாங்கம் உதவவில்லை என்பதால் கவுர்சிங் மிகவும் வேதனைப்பட்டார். இந்த விவகாரம் சர்ச்சையானதால் அப்போதைய பஞ்சாப் அரசு ரூபாய் 2 லட்சம் அளித்தது. பின்னர், இந்திய ராணுவத்தின் சார்பில் அவரது சிகிச்சைக்காக ரூபாய் 3 லட்சம் அளிக்கப்பட்டது.


அடுத்த  வாரம் வேறு ஒரு வீரரின் கதையுடன் அன்டோல்ட் ஸ்டோரியில் சந்திக்கலாம்.


மேலும் படிக்க : untold Story 2: மூன்று ஒலிம்பிக் பதக்கங்கள்.! முதல் அர்ஜூனா விருது..! சுட்டுக்கொல்லப்பட்ட ஹாக்கி ஜாம்பவான் கதை!


மேலும் படிக்க : மறக்கப்பட்டவர்கள் : அன்று டாடாவால் பாராட்டப்பட்டவர்... இன்று காவலாளி..! இந்தியாவின் தலைசிறந்த பாக்ஸரின் சோக கதை...!