இந்தியா இன்று கிரிக்கெட்டில் கோலோச்சினாலும் முதன்முதலில் இந்தியாவை உலக நாடுகள் மத்தியில் அதிகம் பேசப்பட வைத்த விளையாட்டு ஹாக்கியே. இன்று இந்திய ஹாக்கி அணி சற்றே தடுமாறி வந்தாலும், மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் அணி 1980 வரை கிரிக்கெட்டை ராஜாங்கம் செய்தது போல, இந்திய ஹாக்கி அணியும் 1970,80 காலகட்டங்கள் வரை உலக ஹாக்கியை ராஜாங்கம் செய்தது.


அப்படிப்பட்ட இந்திய அணியில் இடம்பிடித்து இந்திய அணி பல போட்டிகளில் வெற்றி பெற காரணமாக அமைந்தவர் பிரிதிபால் சிங். இவர் ஹாக்கி ஆடிய காலகட்டத்தில் இவர்தான் உலகின் மிகவும் அபாயகரமான பெனால்டி கார்னர் ஸ்பெஷலிஸ்டாக வலம் வந்தார். 1932ம் ஆண்டு ஜனவரி 28-ந் தேதி பிறந்த பிரிதிபால் சிங் மெல்போர்ன் நகரில் 1964ம் ஆண்டு நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வென்ற இந்திய அணி, 1960ம் ஆண்டு ரோம் நகரில் நடைபெற்ற வெள்ளிப்பதக்கம் வென்ற இந்திய ஹாக்கி அணி, 1968ம் ஆண்டு மெக்சிகோவில் வெண்கலப் பதக்கம் வென்ற இந்திய அணியில் இடம்பிடித்தவர் என்ற பெருமைக்குரியவர்.




1960ம் ஆண்டு ஒலிம்பிக் இறுதிப்போட்டியில் இந்திய அணி தோல்வியடைந்த பிறகு, 1964ம் ஆண்டு முழு ஆவேசத்துடன் ஒலிம்பிக் போட்டியில் களமிறங்கியது. சரண்ஜித்சிங் தலைமையில் களமிறங்கிய இந்திய அணி இம்முறையும் இறுதிப்போட்டியில் பாகிஸ்தானை எதிர்கொண்டது. அந்த போட்டியில் சிறப்பாக ஆடி பாகிஸ்தானை வீழ்த்தி இந்திய அணி தங்கப்பதக்கத்தை கைப்பற்றியது. 1964ம் ஆண்டு ஒலிம்பிக் தொடரில் இந்திய அணி அடித்த 22 கோல்களில் பிரிதிபால் சிங் மட்டும் 11 கோல்களை அடித்து அசத்தினார்.


1968ம் ஆண்டு ஒலிம்பிக் தொடருக்கு பிறகு பிரிதிபால் சிங் ஆட்டத்தின் மீது பல்வேறு விமர்சனங்கள் எழுந்தது. இதையடுத்து, 36 வயதான பிரிதிபால் சிங் ஹாக்கியில் இருந்து ஓய்வு பெற்றார். பின்னர், பஞ்சாப் வேளாண் பல்கலைகழகத்தில் இணைந்து விளையாட்டுத்துறை இயக்குனராக பணியாற்றினார். அவரது திறமையை பாராட்டி 1961ம் ஆண்டு இந்திய அரசின் உயரிய விருதான அர்ஜூனா விருது வழங்கப்பட்டது. அர்ஜூனா விருது பெற்ற முதல் ஹாக்கி வீரர் பிரிதிபால் சிங்தான்.




1967ம் ஆண்டு அவரது விளையாட்டுத் திறனை பாராட்டி அவருக்கு பத்மஸ்ரீ விருதும் வழங்கப்பட்டது. நாட்டிற்காக மூன்று ஒலிம்பிக் பதக்கம் வென்றவரை, அர்ஜூனா விருது மற்றும் பத்மஸ்ரீ விருது உள்ளிட்ட உயரிய விருதை வென்ற பிரிதிபால் சிங் 1983ம் ஆண்டு மே மாதம் 20-ந் தேதி அவரது சொந்த பல்கலைகழக மாணவர்களாலே சுட்டுக்கொல்லப்பட்டார்.


பஞ்சாப் வேளாண் பல்கலைகழகத்தில் ஏற்பட்ட மோதலின்போது அவர் சுடப்பட்டு பரிதாபமாக உயிரிழந்தார். அவரது கொலை தொடர்பாக 19 மாணவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. ஆனால், கொலையாளி யாரென்று இறுதிவரை கண்டறியப்படவில்லை. அவரது வாழ்க்கை வரலாற்றை பிரிதிபால் சிங் ஏ ஸ்டோரி என்று ஹிந்தியில் படமாக எடுத்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. 


அடுத்த வாரம் அன்டோல்ட் ஸ்டோரி தொடரில் மற்றுமொரு மறக்கப்பட்ட நிகழ்வுடன் சந்திக்கலாம்.


மேலும் படிக்க : மறக்கப்பட்டவர்கள் : அன்று டாடாவால் பாராட்டப்பட்டவர்... இன்று காவலாளி..! இந்தியாவின் தலைசிறந்த பாக்ஸரின் சோக கதை...!