பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே உள்ள பரவாய் கிராமம் மாரியம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் வேலு. இவரது மனைவி மூக்காயி. இவர்களது மகன் பாலமுருகன்(38). வேலு கடந்த 13 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். இதையடுத்து பாலமுருகன், தனது தாய் மூக்காயியுடன் வசித்து வந்த நிலையில், கடந்த 10 மாதங்களுக்கு முன்பு மூக்காயியும் இறந்துவிட்டார். இதைத்தொடர்ந்து மூக்காயி உடல் அங்குள்ள சுடுகாட்டில் புதைக்கப்பட்டது. தாய், தந்தை இருவரும் இறந்துவிட்ட நிலையில் பாலமுருகன் மனநிலை பாதிக்கப்பட்ட நிலையில் காணப்பட்டார். மேலும் பாலமுருகன் கடந்த 6 மாதங்களாக மூக்காயி புதைக்கப்பட்ட இடத்திற்கு சென்று அங்கு உட்கார்ந்து தனக்குத்தானே பேசி வந்துள்ளார். உடனே பால முருகனை உறவினர்கள் அவரை அழைத்து வீட்டிற்கு சென்றுவிடுவார்கள். இதேபோல் தினமும் இரவு சுடுகாட்டிற்கு சென்று தனது தாயை புதைத்த இடத்தில் அமர்ந்து அழுவது, பேசுவது, அங்கேயே உறங்குவது என தொடர்ந்து பாலமுருகன் செய்து வந்தார். அவரது உறவினர்கள் பாலமுருகனை மருத்துவர்களிடம் அழைத்து சென்றனர். அப்போது தந்தை, தாய் இருவரும் இறந்தது அவரால் தாங்கிகொள்ள முடியாமல் மன நிலை பாதிக்கப்பட்டுள்ளது என மருத்துவர் தெரிவித்தார்.




மேலும் பாலமுருகனை உறவினர்கள் பாதுகாப்பாக கவனித்து வந்ததாக கூறப்படுகிறது. சில நாட்களில் மீண்டும் பாலமுருகன் தனது தாயை நினைத்து இரவு நேரங்களில் அழுதுக்கொண்டே இருப்பார் எனவும், உடனே சுடுகாட்டிற்கு சென்று தாயை புதைத்த இடத்தில் அமர்ந்து கொள்வார். மீண்டும் அதிகாலையில் வீட்டிற்க்கு வந்துவிடுவார் என உறவினர்கள் தெரிவித்தனர்.இதனை தொடர்ந்து  மூக்காயி புதைக்கப்பட்ட இடத்தில் அவ்வப்போது கொஞ்சம் கொஞ்சமாக மண்ணை தோண்டி அருகில் தள்ளியுள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு மூக்காயி புதைக்கப்பட்ட இடத்தை தோண்டி அவரது உடலை வெளியே எடுத்துள்ளார். இதைத்தொடர்ந்து அங்கிருந்து நேற்று அதிகாலை 3 மணி அளவில் எலும்பு கூடாக இருந்த மூக்காயியை ஊராட்சியின் குப்பை வண்டியில் வைத்து வீட்டிற்கு கொண்டு வந்து பத்திரப்படுத்தி உள்ளார் என தகவல் தெரியவந்துள்ளது.




இந்நிலையில் பாலமுருகனின் உறவினரான சுமதி தினமும் உணவு கொண்டு வந்து கொடுப்பார். இந்நிலையில் நேற்று இரவு 8 மணி அளவில் பாலமுருகனுக்கு  சாப்பாடு கொண்டு சென்றுள்ளார். அப்போது வீட்டில் துர்நாற்றம் வீசியதால் சந்தேகமடைந்த அவர் வீட்டிற்குள் சென்று பார்த்தார். அப்போது அங்கு எலும்புகூடு வைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். பின்னர் இதுகுறித்து குன்னம்  காவல்நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.


அதன்பேரில் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினார். மேலும் இந்த எலும்புகூடு  மூக்காயின் எலும்புகூடு தானா என கண்டறிய பரிசோதனை அனுப்பப்பட்டது. பரிசோதனை முடிந்த பின்னர் மீண்டும் புதைக்கப்படும் என்று தெரிகிறது. புதைக்கப்பட்ட தாயின் உடலை மகன் தோண்டியெடுத்து வீட்டிற்கு கொண்டு வந்து வைத்திருந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.