நூறு கோடிக்கும் மேற்பட்ட மக்கள்தொகை கொண்ட நம் நாடு, விளையாட்டுப் போட்டிகளில் கிரிக்கெட்டைத் தவிர பிற ஆட்டங்களில் உலகம் திரும்பிப் பார்க்கும் வகையில் இருக்கிறதா? என்றால் அதற்கு பதில் இல்லை என்பது அனைவருக்கும் தெரியும்.
நமது நாட்டில் உலகம் முழுவதும் ரசிகர்களை கொண்ட கால்பந்து, ஹாக்கி, வாலிபால், கூடைப்பந்து, தடகளப் போட்டிகள் என்று அனைத்து விதமான போட்டிகளிலும் ஆதிக்கம் செலுத்தும் அளவிற்கு திறமையான வீரர்கள் உள்ளனர். ஆனால், அவர்களது திறமை வெளிக்காட்ட அங்கீகாரமும், வாய்ப்புகளும் வழங்கப்படாததே ஒலிம்பிக்கில் அரை நூற்றாண்டு காலமாக இந்தியா ஒற்றை எண்ணிக்கையில் பதக்கத்தை வென்று கொண்டிருப்பதற்கு காரணம்.
முறையான அங்கீகாரம், திறமைக்கு மதிப்பளிக்கப்படாததால் பல வீரர்களும் விளையாட்டு களங்கள் மட்டுமின்றி வாழ்க்கை களத்திலும் போராடும் சூழல் ஏற்பட்டுள்ளது. அப்படி விளையாட்டு ரிங் மட்டுமின்றி, வாழ்க்கையிலும் போராடும் ஒரு மாபெரும் வீரனைப் பற்றி கீழே காணலாம். 1990 காலகட்டங்களில் மேலை நாடுகளைச் சேர்ந்த வீரர்கள் மட்டுமே குத்துச்சண்டை ஜாம்பவன்களாக ஜொலித்த காலத்தில், இந்தியாவில் இருந்து குத்துச்சண்டையில் மிளிர்ந்தவர்தான் பிர்ஜூஷா சிங்.
1994ம் பிரிட்டிஷ் கொலம்பியா, கனடா இணைந்து நடத்திய காமன்வெல்த் போட்டியில் குத்துச்சண்டை போட்டியில் பங்கேற்று இந்தியாவிற்காக வெண்கலப்பதக்கம், அதே ஆண்டு ஜப்பானில் நடைபெற்ற ஆசிய விளையாட்டு போட்டிகளில் இந்தியாவிற்காக வெண்கலப் பதக்கம், 1993-ஆம் ஆண்டு ஜூனியர்களுக்கான ஆசிய கோப்பையில் பதக்கம் வென்று அசத்தியவர்தான் இந்த பிர்ஜூஷா சிங்.
சீனியர் பிரிவில் நாட்டிற்காக இரண்டு வெண்கலப்பதக்கம் வென்ற பிர்ஜூஷா சிங், இன்று காவலாளியாக வேலை பார்த்து வருகிறார். 1994 காலகட்டத்தில் உலகின் தலைசிறந்த குத்துச்சண்டை வீரர்களில் 7வது வீரர் என்ற மிகச்சிறந்த தரவரிசையை எட்டிப்பிடித்தவர் இந்த பிர்ஜூஷாசிங். கடல் தாண்டி சென்று நாட்டிற்காக வெண்கலப் பதக்கத்தை வேட்டையாடிய பிர்ஜூஷா சிங், உள்நாட்டில் நடைபெற்ற போட்டிகளிலும் பல பதக்கங்களை வென்றுள்ளார்.
ஜார்க்கண்ட் மாநிலத்தின் ஜாம்ஷெட்பூரைச் சேர்ந்த பிர்ஜூவின் தந்தை மற்றும் மனைவி இருவரும் பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால், அவரது பொருளாதாரம் மிக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. பிர்ஜூவின் இந்த நெருக்கடி காலத்தில், அவருக்கு இந்திய குத்துச்சண்டை சம்மேளனமோ, மத்திய மற்றும் மாநில அரசோ எந்தவித உதவியும் செய்யவில்லை.
இரண்டு குழந்தைகளுக்கான தந்தையான பிர்ஜூஷா தன்னுடைய குடும்ப பொருளாதாரத்திற்காக, கடந்த 7 ஆண்டுகளாக தனது பகுதியில் உள்ள டாடா நகரில் தினசரி ரூபாய் 400 சம்பளத்திற்கு காவலாளியாக பணியாற்றி வருகிறார். இவரது திறமையை பாராட்டி பீகாரின் முன்னாள் முதல்வர் லல்லு பிரசாத் யாதவ் பரிசளித்துள்ளார். ஒரு காலத்தில் இவரது அபார திறமையை கண்டு இந்தியாவின் மிகப்பெரிய கோடீஸ்வரரான ரத்தன் டாடா நேரில் அழைத்து பாராட்டினார்.
ஆனால், இன்று டாடா நகரில் உள்ள டாடா நிறுவனத்தில் பிர்ஜூஷா காவலாளியாக உள்ளார். இத்தனை இன்னல்களை கண்ட பிறகும், குத்துச்சண்டையின் மீது தான் கொண்ட மோகம் துளியளவும் குறையவில்லை என்று கூறும் பிர்ஜூஷா, குத்துச்சண்டை வளையத்திற்குள் இறங்கிவிட்டால் தனது கவலைகள் அனைத்தும் மறந்துவிடுவதாக நெகிழ்ச்சியுடன் கூறுகிறார்.
தான் வாழ்வில் இந்த நெருக்கடிக்கு ஆளானதற்கு அரசாங்கமும், விளையாட்டில் இருந்த அரசியலும்தான் காரணம் என்றும் வேதனையுடன் பதிவு செய்கிறார் இந்த குத்துச்சண்டை நாயகன். வெண்கலப் பதக்கங்களை வென்றுத்தந்த குத்துச்சண்டை, தன் வாழ்விற்கு வௌிச்சத்தை தராவிட்டாலும் தனது இரு குழந்தைகளுக்கும் தினமும் குத்துச்சண்டை பயிற்சி அளித்து வருகிறார் பிர்ஜூஷா. அவர்கள் மட்டுமின்றி தினசரி தன்னால் முடிந்தளவிற்கு பல மாணவர்களுக்கும் குத்துச்சண்டை பயிற்சியை அளிக்கிறார். இப்பேற்பட்ட தலைசிறந்த வீரருக்கு உரிய அங்கீகாரம் அளிக்க வேண்டும் என்று பலரும் ஜார்க்கண்ட் அரசு மற்றும் மத்திய அரசுக்கு வலியுறுத்தி வருகின்றனர்.
அடுத்த வாரம் மற்றுமொரு மறக்கப்பட்ட கதாநாயகர்களின் கதையுடன் சந்திப்போம்