டோக்கியோ பாரலிம்பிக் தொடரின் நான்காவது நாளான இன்று, டேபிள் டென்னிஸ் விளையாட்டின் அரை இறுதியில் இந்தியாவின் பவினாபென் விளையாடினார். இந்த போட்டியில் அவர் வெற்றி பெற்றதன் மூலம், இறுதிப்போட்டிக்கு முன்னேற்றி வரலாற்றில் இடம் பிடித்துள்ளார். 


இன்றைய போட்டியில் அவர் எதிர்த்து போட்டியிட்ட மியா ஜங், 2016 ரியோ ஒலிம்பிக்கில் வெள்ளிப்பதக்கம் வென்ற, உலக தரவரிசைப் பட்டியலில் 3வது இடத்தில் இருப்பவர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்தியாவிற்கு டோக்கியோ பாராலிம்பிக் பதக்கத்தை உறுதி செய்துள்ளார். 


Also Read: தங்கத்திலும் சேமிக்கலாம்.. லலிதா ஜூவல்லரியின் நகை முன்பதிவுத் திட்டம்!


இந்நிலையில் யார் இந்த பவினா பட்டேல்? எப்படி டேபிள் டென்னிஸ் விளையாட்டிற்குள் நுழைந்தார்? 


1986ஆம் ஆண்டு குஜராத் மாநிலத்தில் பிறந்தவர் பவினா பட்டேல். இவருக்கு ஒரு வயதாக இருந்த போது போலியா நோய் தாக்கியுள்ளது. இதனால் இவருடைய இரண்டு கால்களிலும் பிரச்னை ஏற்பட்டுள்ளது. தன்னுடைய சிறிய வயது முதல் அவர் சக்கர நாற்காலியை பயன்படுத்த தொடங்கியுள்ளார். தன்னுடைய உடற்தகுதிக்காக விளையாட்டாக டேபிள் டென்னிஸ் விளையாட இவர் தொடங்கியுள்ளார். அதன்பின்னர் அந்த விளையாட்டி மீது இவருக்கு மிகுந்த ஆர்வம் ஏற்பட்டுள்ளது. 




இதனால் அந்த விளையாட்டில் தீவிரமாக பயிற்சி செய்துள்ளார். அவருடைய பயிற்சி மற்றும் விளையாட்டிற்கு நிதி நெருக்கடியும் ஏற்பட்டுள்ளது. அப்போது அகமதாபாத் பகுதியில் இருந்த பார்வையற்றோர் சங்கம் இவருக்கு நிதியுதவி அளித்துள்ளது. இவர் டேபிள் டென்னிஸ் பயிற்சியை தொடங்கிய மூன்றாவது ஆண்டில் பெங்களூருவில் நடைபெற்ற தேசிய பாரா சாம்பியன்ஷிப்பில் இவர் பட்டம் வென்றார். அதன்பின்னர் இவருடைய வாழ்க்கையில் டேபிள் டென்னிஸ் ஒரு முக்கிய அங்கமாக மாறியது. 


அதன்பின்னர் 2011ஆம் ஆண்டு தாய்லாந்தில் நடைபெற்ற சர்வதேச பாரா டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்று அசத்தினார். அத்துடன் உலக தரவரிசையில் 2ஆவது இடத்தையும் பிடித்தார். இதைத் தொடர்ந்து தற்போது வரை 28 சர்வதேச பாரா டேபிள் டென்னிஸ் போட்டிகளில் பங்கேற்றுள்ள பவினா பட்டேல் 5 தங்கம், 13 வெள்ளி, 8 வெண்கலம் என மொத்தமாக 26 பதக்கங்களை வென்று குவித்துள்ளார். 






இத்தனை பதக்கங்கள் வென்று இருந்தாலும் ஒலிம்பிக் பதக்கம் வெல்ல வேண்டும் என்ற அவருடைய கனவு நீண்ட நாட்கள் இருந்தது.தன்னுடைய கனவை நோக்கி பயணம் மேற்கொண்ட பவினா எப்போது கூறுவது ஒன்றே ஒன்று தான். அது, “முதலில் உங்கள் மனதில் நீங்கள் வெற்றியாளர் என்பதை நினைத்து கொள்ளுங்கள். அப்போது நீங்கள் தானாக வெற்றியை எட்ட முடியும்” என்பது தான் அது. அதற்கு ஏற்ப  2016ஆம் ஆண்டு ரியோ பாராலிம்பிக் டேபிள் டென்னிஸ் போட்டிகளுக்கு இவர் தகுதி பெறும் வாய்ப்பு இருந்தும் பாரா டேபிள் டென்னிஸ் சங்கத்தின் பிரச்னை காரணமாக தகுதி பெற முடியாமல் போனது. இந்தச் சூழலில் டோக்கியோவில் அந்த கனவை நிச்சயம் எட்ட வேண்டும் என நினைத்தார். அதற்காக தீவிர பயிற்சியும் மேற்கொண்டார். 






இந்த டோக்கியோ தொடரில் அவர் குரூப் பிரிவில் உலக தரவரிசையில் 8 மற்றும் 9ஆம் நிலை வீராங்கனைகளை தோற்கடித்து இருந்தார். தற்போது காலிறுதியில் ரியோ பாராலிம்பிக் சாம்பியனும் 2ஆம் நிலை வீராங்கனையை அவர் தோற்கடித்துள்ளார். டோக்கியோ பாராலிம்பிக் போட்டியில் அரையிறுக்கு முன்னேறும் பட்சத்தில் வீராங்கனைக்கு வெண்கலம் பதக்கம் உறுதியாகிவிடும். ஆகவே டோக்கியோ பாராலிம்பிக் போட்டிகளில் இந்தியாவிற்கு முதல் பதக்கத்தை அவர் உறுதி செய்துள்ளார். அத்துடன் தன்னுடைய ஒலிம்பிக் பதக்கம் கனவையும் அவர் நிறைவேற்றியுள்ளார்.


இப்போது அரை இறுதிப்போட்டியையும் வென்றுள்ள அவர், தங்கப்பதக்கத்திற்கான போட்டியில் அடுத்து விளையாட உள்ளார். மேலும் பாராலிம்பிக் வரலாற்றில் பதக்கம் வென்ற முதல் இந்திய டேபிள் டென்னிஸ் வீராங்கனை என்ற சாதனையை தன்னுடைய முதல் பாராலிம்பிக்கில் படைத்து அசத்தியுள்ளார். அது, தங்கமா வெள்ளியா என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது. 


மேலும் படிக்க: டோக்கியோ பாராலிம்பிக் : நடப்பு பாராலிம்பிக் சாம்பியனை வீழ்த்தி பவினா அரையிறுதிக்கு தகுதி !