”மின்னுவது எல்லாம் பொன் அல்ல” என்ற பழமொழியை கேள்விப்பட்டு இருப்போம். அது யாருக்கும் பொருந்துமோ இல்லையோ, சீனாவின் ஜிம்னாஸ்டிக் வீராங்கனை சூ சூயிங்கிற்கு சரியாக பொருந்தும்


ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் 2020-ம் ஆண்டுக்கான ஒலிம்பிக்ஸ் போட்டிகள் அண்மையில் நடந்து முடிந்தன. இதில் ஒவ்வொரு பதக்கங்களையும் வெல்ல வீரர்கள் பல ஆண்டுகளாக பயிற்சிகளை மேற்கொண்டனர். இவ்வளவு உழைப்புக்கும் போராட்டத்துக்கும் பிறகு பெற்ற பதக்கம் தரக்குறைவாக இருந்தால் அதை வீரர்களின் மனநிலை எப்படி இருக்கும்..?


அது தான் சீன வீராங்கனை சூ சூயிங்கிற்கும் நடந்து உள்ளது. டோக்கியோ ஒலிம்பிக்ஸில் ஜிம்னாஸ்டிக் போட்டியில் தங்கம் வென்ற சூ சூயிங்க், தனக்கு வழங்கிய பதக்கத்தின் தங்கம் முலாம் கிழிந்து இருப்பதாக புகைப்படத்துடன் சீனாவின் சமூக வலைதளமான சினா வெய்போவில் பதிவிட்டு உள்ளார்.


அதில் “நான் ஒன்றை தெளிவுபடுத்த விரும்புகிறேன். நான் பதக்கத்தில் எதையும் கிழிக்க வேண்டும் என்று நினைக்கவில்லை. அதன் ஒரு பகுதியில் நிறம் மாறி இருப்பதை கண்டேன். அதில் கைது வைத்து தேய்த்தபோது இன்னும் பெரிதானது.” என்று குறிப்பிட்டு உள்ளார்.


சூயிங் முன்வைத்து உள்ள இந்த குற்றச்சாட்டுகளுக்கு டோக்கியோ விளையாட்டு ஒலிம்பிக் அமைப்புக்குழு மறுப்பு தெரிவித்து உள்ளது. ”சூயிங் கூறியது போல், பதக்கத்தில் உள்ள தங்கம் முழாம் உரிந்து வரவில்லை. பதக்கம் சேதமடையாமல் பாதுகாக்க மேலே ஒட்டப்பட்டு இருந்த பாதுகாப்பு பூச்சு தான் அது. பதக்கங்களை கறை மற்றும் கீரல்கள் விழாமல் பாதுகாக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டு உள்ளது. இது பதக்கத்தின் தரத்தை பாதிக்காது” என அந்த குழு விளக்கம் அளித்து உள்ளது.


2020 டோக்கியோ ஒலிம்பிக்ஸில் வழங்கப்பட்ட பதக்கங்கள் யாவும், ஜப்பான் குடிமக்கள் பயன்படுத்திய எலெக்டிரானிக் பொருட்களில் இருந்து எடுக்கப்பட்ட உலோகங்களை மறு சுழற்ச்சி செய்து தயாரிப்பு செய்யப்பட்டவை. சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி மாற்றுப்பதக்கங்களை வைத்திருக்கும். சூயிங் வேறு புதிய பக்கத்தை அதற்குரிய கட்டணங்களை செலுத்தி வாங்கலாம்.


ஒலிம்பிக் பதக்கத்தில் இருந்த தங்க முழாம் உரிந்து வருவது உண்மை என்றால் டோக்கியோ ஒலிம்பிக் ஒருங்கிணைப்புக்குழு உரிய விசாரணை நடத்திக்கொள்ளட்டும் என 2020 டோக்கியோ ஒலிம்பிக்ஸ் போட்டிகளுக்கு பதக்கம் தயாரித்த ஜப்பான் மிண்ட் நிறுவனம் தெரிவித்து உள்ளது.


அமெரிக்க குத்துச்சண்டை வீரர் முஹம்மது அலி, ஒலிம்பிக்கில் தங்கம் வென்றும் அவர் கருப்பினத்தவர் என்ற காரணத்தால் நிறவெறியர்களின் வசைகளுக்கு ஆளாகி அந்த கோபத்தில் ஒலிம்பிக் பதக்கத்தை நதியில் தூக்கி வீசினார். இதை நிகழ்ச்சி ஒன்றில் முஹம்மது அலி பேச, சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி மீண்டும் அவருக்கு பதக்கம் வழங்க முன்வந்தது. ஆனால், அவர் வாங்க மறுத்துவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.