டோக்கியோ பாரலிம்பிக் தொடரின் மூன்றாவது நாளான இன்று, டேபிள் டென்னிஸ் விளையாட்டில் இந்தியாவின் பவினாபென் விளையாடினார். காலை நடைபெற்ற போட்டியில் பிரேசில் வீராங்கனை ஒலிவிரா ஜாய்ஸை எதிர்த்து அவர் போட்டியிட்டார். இந்த போட்டியில் 3-0 என்ற கேம் கணக்கில் பவினாபென் போட்டியை வென்று காலிறுதிக்கு முன்னேறினார். 


இந்நிலையில் காலிறுதிப் போட்டியில் அவர் உலக தரவரிசையில் இரண்டாம் நிலை வீராங்கனையான செர்பியா நாட்டின் பெரிக் ரென்கோவிக்கை எதிர்த்து விளையாடினார். இதில் முதல் கேமை 11-5 என்ற கணக்கில் பவினா பட்டேல் வென்றார். அதன்பின்னர் இரண்டாவது கேமையும் 11-6 என்ற கணக்கில் வென்று அசத்தினார். இதனால் 2-0 என முன்னிலை பெற்றார்.


ஆகவே மூன்றாவது கேமை வென்றால் போட்டியை வெற்றி பெறலாம் என்ற வலுவான நிலையில் இருந்தார். இதைத் தொடர்ந்து நடைபெற்ற மூன்றாவது கேமில் சிறப்பான ஆட்டத்தை தொடர்ந்த பவினா பட்டேல் 11-7 என்ற கணக்கில் வென்றார். இதனால் 11-5,11-6,11-7 என்ற கணக்கில் உலக தரவரிசையில் இரண்டாவது இடத்தில் இருந்த செர்பிய வீராங்கனையை தோற்கடித்தார். அத்துடன் அரையிறுதி போட்டிக்கு முன்னேறி அசத்தியுள்ளார். மேலும் 2016ஆம் ஆண்டு ரியோ பாராலிம்பிக் போட்டியில் கிளாஸ் 4 பிரிவு டேபிள் டென்னிஸ் போட்டியின் சாம்பியனான பெரிக் ரென்கோவிக்கை வீழ்த்தி பெரும் சாதனையை படைத்துள்ளார். 






முன்னதாக டோக்கியோ பாராலிம்பிக் போட்டிகளில் இந்தியாவின் சோனல் பட்டேல் டேபிள் டென்னிஸ் கிளாஸ் 3 பிரிவில் பங்கேற்று இருந்தார்.முதல் குரூப் போட்டியில் சோனல் பட்டேல் 11-9, 3-11, 17-15, 7-11, 4-11 என்ற கணக்கில் சீனாவின் கியூ லீ யிடம் தோல்வி அடைந்தார்.இரண்டாவது குரூப் போட்டியில் சோனல் பட்டேல் தென்கொரியாவின் மீ குயூ லீயை எதிர்த்து விளையாடினார். அதில் 12-10,5-11,3-11,8-11 என்ற கணக்கில் தோல்வி அடைந்தார். இரண்டு குரூப் போட்டிகளிலும் தோல்வி அடைந்ததால் அவர் நாக் அவுட் சுற்று போட்டிகளுக்கு தகுதிபெறும் வாய்ப்பை அவர் இழந்தார்.