டோக்கியோ பாராலிம்பிக் போட்டியில் இன்று ஆடவருக்கான பவர்லிஃப்டிங் போட்டிகள் நடைபெற்றது. இதில் ஆடவருக்கான 65 கிலோ எடைப்பிரிவில் இந்தியாவின் ஜெய்தீப் தேஷ்வால் பங்கேற்றார். 2012ஆம் ஆண்டு நடைபெற்ற லண்டன் பாராலிம்பிக் போட்டியில் ஜெய்தீப் தேஷ்வால் தடகளத்தில் பங்கேற்றார். அப்போது அவர் வட்டு எறிதல் போட்டியில் பங்கேற்றார். அதில் 7ஆவது இடத்தை பிடித்து பதக்கம் வெல்லும் வாய்ப்பை தவறவிட்டார். 2018ஆம் ஆண்டு முதல் இவர் பவர்லிஃப்டிங்கில் கவனம் செலுத்தி வந்தார். 


இந்நிலையில் டோக்கியோ பாராலிம்பிக் போட்டியில் அவர்  65 கிலோ எடைப்பிரிவு பவர்லிஃப்டிங்கில் பங்கேற்றார். அதில் தன்னுடயை முதல் முயற்சியில் 160 கிலோ எடையை அவர் தூக்க முற்பட்டார். அதை சரியாக தூக்க முடியவில்லை. இதைத் தொடர்ந்து இரண்டாவது முயற்சியிலும் 160 கிலோ எடையை தூக்க முற்பட்டார். அதிலும் அவரால் வெற்றிகரமாக தூக்க முடியவில்லை. அதன்பின்னர் மூன்றாவது முயற்சியில் அவர் 167 கிலோ எடையை தூக்க முயற்சி செய்தார். அந்த முயற்சியும் அவருக்கு கை கொடுக்கவில்லை. ஆகவே மூன்று வாய்ப்பிலும் ஃபவுல் செய்தார். இதனால் அவர் பதக்கம் வெல்லும் வாய்ப்பை இழந்து வெளியேறினார். 






முன்னதாக இன்று காலை நடைபெற்ற மகளிருக்கான பவர்லிஃப்டிங் போட்டியில் 50 கிலோ எடைப்பிரிவில் இந்தியாவின் சகினா கட்டூன் பங்கேற்றார். இவர் இதில் முதல் முயற்சியில் 90 கிலோவை தூக்கினார். அதன்பின்னர் இரண்டாவது முயற்சியில் 93 கிலோவை தூக்க முடியாமல் தவறவிட்டார். அதன்பின்னர் மூன்றாவது மற்றும் கடைசி வாய்ப்பில் 93 கிலோவை தூக்கினார். இறுதியில் 5ஆவது இடத்தை பிடித்தார். முதல் இடத்தை சீனா வீராங்கனை 120 கிலோ எடையை தூக்கி வென்றார். சகினா கட்டூன் 2018ஆம் ஆண்டு காமன்வெல்த் பாரா பவர்லிஃப்டிங்கில் பதக்கம் வென்று இருந்தார். ஆகவே டோக்கியோ பாராலிம்பிக் இவர் பதக்கம் வெல்லுவார் என்று அதிக நம்பிக்கை இருந்தது. எனினும் அவர் 5ஆவது இடத்தை பிடித்துள்ளார். இது அவருக்கு ஒரு நல்ல தொடக்கமாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 


மேலும் படிக்க: சிகிச்சைக்கு பழகிய நீச்சல்... பதக்க காய்ச்சல்... ஜப்பானுக்கு வெள்ளி வாங்கிய 14 வயது சிறுமியின் பாய்ச்சல்!