உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டி நாளை இங்கிலாந்து நாட்டில் உள்ள புகழ்பெற்ற ஓவல் மைதானத்தில் தொடங்க உள்ளது. இங்கிலாந்து அணிக்கு அவர்களது சொந்த நாட்டில் மிகுந்த சவால் அளிக்கும் அணியாக திகழ்வது ஆஸ்திரேலியா ஆகும். ஆஸ்திரேலிய அணிக்கு இங்கிலாந்து மண்ணில் ஆடிய அனுபவம் நிரம்ப இருக்கிறது. அந்த நாட்டின் ஒவ்வொரு மைதானத்திலும் சிறப்பான ஆட்டத்தையே வெளிப்படுத்தியும் உள்ளது.


டெஸ்ட் சாம்பியன்ஷிப்:


ஆனாலும், ஆஸ்திரேலிய அணிக்கு ஓவல் மைதானத்தில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி நடப்பது என்பது பெரும் பின்னடைவே ஆகும். ஏனென்றால், ஓவல் மைதானத்தில் ஆஸ்திரேலியாவின் செயல்பாடு அப்படி இருப்பதே அதற்கு காரணம். அதன் உண்மைத்தன்மையை கடந்த கால வரலாற்றை திரும்பி பார்ப்பதன் மூலம் நாம் உணர முடிகிறது.




உலகின் ஜாம்பவான் கிரிக்கெட் அணிகளில் ஒன்றான ஆஸ்திரேலிய அணி கடந்த 140 ஆண்டு காலமாக டெஸ்ட் கிரிக்கெட் ஆடி வருகிறது. ஆஸ்திரேலிய தங்களுடைய முதல் டெஸ்ட் போட்டியை இதே ஓவல் மைதானத்தில்தான் 1880ம் ஆண்டு ஆடினார்கள். அந்த போட்டிக்கு பிறகு கடந்த 140 ஆண்டுகாலத்தில் ஆஸ்திரேலிய அணி ஓவல் மைதானத்தில் 38 டெஸ்ட் போட்டிகளில் ஆடியுள்ளது.


ஆஸ்திரேலியாவிற்கு அடிமேல் அடி:


இதில் வெறும் 7 டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. குறிப்பாக, கடந்த 50 ஆண்டுகளில் ஆஸ்திரேலிய அணி இந்த மைதானத்தில் வெறும் 2 டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. ஓவல் மைதானத்தில் ஆஸ்திரேலிய அணியின் வெற்றி வீதம் வெறும் 18.42 சதவீதம் மட்டுமே ஆகும். இந்த மைதானத்தில் ஆஸ்திரேலிய அணி 17 முறை தோல்வி அடைந்துள்ளது.


ஆனால், இங்கிலாந்து நாட்டின் மற்ற புகழ்பெற்ற மைதானங்களான லார்ட்சில் 43.59 சதவீதமும், ஹெடிங்லியில் 34.62 சதவீதமும், ட்ரெண்ட் பிரிட்ஜில் 30.43 சதவீதமும், ஓல்ட் ட்ராஃபோர்டில் 29.03 சதவீதமும், எட்ஜ்பாஸ்டனில் 26.67 சதவீதமும் வெற்றி சதவீதமாக ஆஸ்திரேலியா வைத்துள்ளது. ஆனால், ஓவல் மைதானம் மட்டும் ஆஸ்திரேலிய அணிக்கு அச்சுறுத்தலாகவும் இடையூறாகவும் உள்ளது.


இந்தியா எப்படி?


ஓவல் மைதானத்தில் கடைசியாக ஆஸ்திரேலிய அணி ஆடிய போது இங்கிலாந்து அணிக்கு எதிராக 135 ரன்கள் வித்தியாசத்தில் கடந்த 2019ம் ஆண்டு தோல்வியை தழுவியது. இந்திய அணிக்கும் ஓவல் மைதானத்தில் சிறப்பான செயல்பாடு இருக்கிறது என்று சொல்ல முடியாது. இந்திய அணி இங்கு ஆடிய 14 டெஸ்ட் போட்டிகளில் 2 போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. 5 போட்டிகளில் தோல்வியும் 7 போட்டிகள் டிராவிலும் முடிந்துள்ளது. கடைசியாக இந்திய அணி இங்கு ஆடியபோது 157 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இது இந்திய அணிக்கு தன்னம்பிக்கை அளிக்கும்.  


மேலும் படிக்க: WTC Final 2023: இறுதிப்போட்டியில் இந்தியாவின் விக்கெட் கீப்பர் கே.எஸ்.பரத்தா..? இஷான் கிஷானா..? ஹிட்மேன் தேர்வு யார்?


மேலும் படிக்க: WTC Final 2023: சாம்பியன்ஸ் கோப்பை இறுதிப்போட்டிகள்.. ஹிட்மேன் பெர்ஃபாமென்ஸ் எப்படி..? நீங்களே பாருங்க..