இங்கிலாந்து நாட்டின் லண்டன் ஓவல் மைதானத்தில் நாளை மறுநாள் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி தொடங்க உள்ளது. இந்திய அணிக்கு இந்த போட்டியில் ஆஸ்திரேலிய அணியை எதிர்கொள்ளும் சவால் மட்டுமின்றி, இந்திய அணியின் விக்கெட் கீப்பரை தேர்வு செய்வதும் பெரும் சவாலாக உள்ளது.


விக்கெட் கீப்பர் யார்?


காயம் காரணமாக ரிஷப்பண்ட் இல்லாததால் இந்திய அணியின் தொடக்க வீரர் கே.எல்.ராகுல் விக்கெட் கீப்பிங் பணியை செய்வார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அவரும் காயம் காரணமாக விலகியதால் விக்கெட் கீப்பிங் பணியை யார் செய்வார்? என்று கேள்வி எழுந்துள்ளது. இந்திய அணியில் தற்போது விக்கெட் கீப்பர்களாக இளம் வீரர்கள் இஷான்கிஷானும், கே.எஸ்.பரத்தும் உள்ளனர். இருவரும் வேறு, வேறு பேட்டிங் ஆர்டரில் இறங்கும் வீரர்கள் என்றாலும், இங்கிலாந்து மண்ணின் சீதோஷ்ண நிலை இந்திய அணியின் தேவை ஆகியவற்றை கருத்தில் கொண்டே இருவரில் ஒருவர் களமிறக்கப்பட உள்ளனர்.


மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த இந்த போட்டியில் இந்திய அணியின் இந்த தேர்வு வெறும் விக்கெட் கீப்பராக மட்டுமின்றி ஒரு பேட்ஸ்மேன் என்பதால் மிகுந்த கவனத்துடன் ஒருவரை தேர்வு செய்ய வேண்டியது அவசியம்.


இஷான்கிஷான்:


ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான இந்த போட்டியில் இந்திய அணியின் தொடக்க வீரராக ரோகித்சர்மாவுடன் சுப்மன்கில் ஆட்டத்தை தொடங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் ஆடும் லெவனில் இஷான்கிஷான் இறங்கினாலும் அவர் தொடக்க வீரராக களமிறங்குவது கேள்விக்குறியே. ரோகித் – சுப்மன்கில் ஜோடிக்கு பிறகு புஜாரா, விராட்கோலி, ரஹானே என பேட்டிங் ஆர்டர் இருப்பதால் ஆடும் லெவனில் வாய்ப்பு கிடைத்தாலும் இஷான்கிஷான் 6வது அல்லது 7வது வீரராகவே களமிறங்க வாய்ப்பு ஆகும்.


இதுவரை ஆடாத லெவனில் இறங்கி இஷான்கிஷானை இறங்கவைத்து ஆடவைப்பது நேர்மறையாகவும், எதிர்மறையாகவும் முடிய வாய்ப்புகள் அதிகம். பரத்துடன் ஒப்பிடும்போது இஷான்கிஷான் அதிரடியாக ஆடக்கூடியவர் என்றாலும் இங்கிலாந்து மண்ணிலோ, டெஸ்ட் போட்டியிலோ ஆடிய அனுபவம் அவருக்கு கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.


இதுவரை முதல்தர போட்டிகளில் 82 இன்னிங்சில் ஆடியுள்ளார். அதில் 2985 ரன்கள் விளாசியுள்ளார். அதில் 6 சதங்களும், 16 அரைசதங்களும் அடங்கும். அதிகபட்சமாக 273 ரன்கள் எடுத்துள்ளார். சராசரியாக 38.76 சதவீதம் வைத்துள்ளார்.


கே.எஸ்.பரத்:


ஐ.பி.எல். தொடரில் பெங்களூர் அணிக்காக ஆடியதன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான கே.எஸ்.பரத் குஜராத் அணிக்காக தேர்வானது முதல் ஆடும் லெவனில் வாய்ப்பு கிடைக்காமல் தவித்து வருகிறார். ரிஷப்பண்ட் காயத்திற்கு பிறகும், அவர் அணியில் இருந்தபோதும் கூடுதல் பேட்ஸ்மேனாகவும், விக்கெட் கீப்பராகவும் கே.எஸ்.பரத் அணியில் இடம்பிடித்து ஆடி வருகிறார்.


29 வயதான கே.எஸ்.பரத் இதுவரை 4 டெஸ்ட் போட்டிகளில் ஆடியுள்ளார். மொத்தம் 101 ரன்களை எடுத்துள்ள பரத் அதிகபட்சமாக 44 ரன்களை விளாசியுள்ளார். விக்கெட் கீப்பிங்கிலும் இதுவரை தான் ஆடிய டெஸ்ட் போட்டிகளில் சிறப்பாகவே ஆடியுள்ளார். பெரியளவில் இதுவரை டெஸ்ட் போட்டிகளில் ஸ்கோர் குவிக்காவிட்டாலும் 6வது அல்லது 7வது வீரராக களமிறங்கிய அனுபவம் பரத்திற்கு உண்டு. இஷான்கிஷான் அளவிற்கு அதிரடி வீரராக இல்லாவிட்டாலும் மிக நேர்த்தியான பேட்ஸ்மேனாகவே பரத் உள்ளார்.


முதல்தர போட்டிகள்:


இஷான்கிஷானுடன் ஒப்பிடுகையில் கே.எஸ்.பரத் முதல் தர போட்டியில் திறம்படவே ஆடியுள்ளார். இதுவரை 90 இன்னிங்சில் ஆடியுள்ள பரத் 4 ஆயிரத்து 808 ரன்கள் எடுத்துள்ளார். அதில் 9 சதங்களும், 27 அரைசதங்களும் அடங்கும். அதிகபட்சமாக 308 ரன்களை எடுத்துள்ளார்.


முதல் தர ஆட்டங்களை வைத்து ஒப்பிடும்போது இஷான்கிஷானை காட்டிலும் பரத் சிறப்பாக ஆடியுள்ளார். ஆனாலும், இங்கிலாந்து மண்ணில் திறம்பட செயல்பட வாய்ப்பு கிடைக்கப்போவது யாருக்கு? என்பதை நாளை மறுநாள் பார்க்கலாம்.