ஐபிஎல் 2023 தொடரின் இறுதிப்போட்டியில் ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியை 5 விக்கெட்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி எம்.எஸ். தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஐபிஎல் வரலாற்றில் 5வது முறையாக கோப்பையை வென்றது. இந்த வெற்றியின் மூலம் தற்போது மும்பை இந்தியன்ஸுடன் அதிக முறை கோப்பையை வென்ற அணியாக சிஎஸ்கே வலம் வருகிறது. 


இந்த வெற்றியை தொடர்ந்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் எம்.எஸ். தோனி தனது முழங்காலில் ஏற்பட்ட காயத்திற்கு சிகிச்சை மேற்கொள்ள மும்பை சென்றதாக தகவல் வெளியாகியது. முன்னதாக, இந்த ஐபிஎல் 2023 சீசன் முழுவதும் எம்.எஸ். தோனி முழங்கால் காயத்துடன் அனைத்து போட்டிகளிலும் விளையாடி அவதிப்பட்டு வந்தார். போட்டி மற்றும் பயிற்சியின்போது எம்.எஸ்.தோனி நொண்டியடித்த வீடியோக்கள் வெளியாகி ரசிகர்கள் மனதில் காயத்தை ஏற்படுத்தி கலங்க செய்தது. 


இந்தநிலையில், இன்று தோனிக்கு பரிசோதனை மேற்கொண்ட மருத்துவர்கள், மூட்டு பகுதியில் அறுவை சிகிச்சை செய்துகொள்ள அறிவுறுத்தியுள்ளனர். அதன்படி, தோனிக்கு அறுவை சிகிச்சை நடைபெற்றது எனவும், அது வெற்றிகரமாக நிறைவு பெற்றதாகவும் அவருக்கு சிகிச்சை மேற்கொண்ட மருத்துவர்கள் தகவல் தெரிவித்துள்ளனர். 


தொடர்ந்து, சிஎஸ்கே சி.இ.ஓ காசி விஸ்வநாதன்,  அறுவை சிகிச்சைக்கு பிறகு தோனி நன்றாக இருப்பதாக தன்னிடம் தெரிவித்ததாக கூறியுள்ளார். இதுகுறித்து அவர் பேசுகையில், “ ஆபரேஷனுக்குப் பிறகு நான் அவரிடம் பேசினேன். அறுவை சிகிச்சை நல்லாபடியாக நடந்து முடிந்தது. டிஸ்சார்ஜ் செய்யப்படுவதற்கு முன், சில செக் அப் மட்டும் இருப்பதாக தெரிவித்தார். 


இதன்மூலம் கோப்பையை வென்ற பிறகு பேசிய தோனி, நிச்சயம் அடுத்த ஆண்டு விளையாடுவேன் என்று தெரிவித்தார். அதன்படி, விரைவில் முழுமையாக குணமடைந்த பிறகு, இன்னும் 7, 8 மாதங்களுக்கு பிறகு பயிற்சி மேற்கொண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு திரும்புவார் என்று எதிர்பார்க்கலாம். 


ஓய்வு குறித்து என்ன சொன்னார் தோனி..? 


தற்போதைய சூழ்நிலையை பார்த்தால், ஐபிஎல் தொடரில் இருந்து  ஓய்வு பெற இதுவே சிறந்த நேரம். ஆனால் இந்த ஆண்டு  ரசிகர்கள் என் மீது காட்டும் அன்புக்காக நான் அடுத்த ஆண்டும் விளையாடலாம் என இருக்கிறேன். அனைவருக்கு நன்றி என்று கூறிவிட்டு விலகிவிடுவது எளிது. ஆனால், அது மனதுக்கு கடினமானதாக இருக்கும்.


அதே நேரத்தில் வரும் 9 மாதங்களில் கடினமாக உழைத்து ரசிகர்களுக்காக அடுத்த சீசன் விளையாட முயற்சிப்பது தான் அவர்கள் எனக்கு கொடுக்கும் அன்புக்கு நான் செய்வதாக இருக்கும்.  அது  ரசிகர்களுக்கு நான் கொடுக்கும் பரிசாக இருக்கும்; ஆனால் அது உடலுக்கு எளிதாக இருக்காது” என கோப்பை வென்ற பிறகு தோனி பேசினார்.