சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி வீரர் ராகுல் திரிபாதி எதிர்பாரத விதமாக ரன் அவுட் ஆகி வெளியேறியதால் கண்ணீர் விட்டு அழுதுள்ளார்.


ஐ.பி.எல் 2024:


கடந்த மார்ச் 22 ஆம் தேதி தொடங்கிய ஐ.பி.எல் சீசன் 17 இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. அந்தவகையில் இன்று (மே21) குவாலிபயர் 1 ல் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன. குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது.


அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கிய ட்ராவிஸ் ஹெட் மற்றும் அபிஷேக் சர்மா களம் இறங்கினார்கள். இவர்கள் இருவரும் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழக்க பின்னர் களம் இறங்கினார் ராகுல் திரிபாதி. அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திக் கொண்டிருந்தார் இவர். அப்போது களம் இறங்கிய ரிதிஷ் ரெட்டி 9 ரன்களிலும் ஷாபாஸ் அகமது டக் அவுட் ஆகியும் வெளியேறினார்கள்.



அடுத்து வந்த ஹென்ரிச் கிளாசன் ராகுல் திரிபாதியுடன் ஜோடி சேர்ந்தார். இவர்களது ஜோடி சிறப்பாக விளையாடி வந்தது. இதனிடையே தன்னுடைய அரைசதத்தை பதிவு செய்தார் திரிபாதி. அப்போது 32 ரன்களில் விக்கெட்டை இழந்தார் கிளாசன். அடுத்ததாக அப்துல் சமது பேட்டிங் செய்ய வந்தார்.


கண்ணீர் விட்டு அழுத ராகுல் திரிபாதி:






பேட்டிங்கை தொடங்கிய முதல் பந்திலேயே சிக்ஸர் விளாசினார். 13 வது ஓவரை வீசிக்கொண்டிருந்தார் ஆண்ட்ரே ரஸல். அதன்படி ரஸல் வீசிய 13 வது ஓவரின் 2 வது பந்தை ஓங்கி அடித்தார் அப்துல் சமது. அடித்த வேகத்தில் ரன் எடுக்க ஓட மறுபுறம் நின்றிருந்த ராகுல் திரிபாதி பாதி கிரவுண்ட் வரை ஓடி வந்து கவனிக்காமல் நடுவிலேயே நின்றார்.




இதனைபயன்படுத்திக்கொண்ட கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியின் விக்கெட் கீப்பர் ரகுமானுல்லா குர்பாஸ் ரன் அவுட் செய்தார். இதனை சற்றும் எதிர்பார்க்காத ராகுல் திரிபாதி சோகத்துடன் வெளியேறினார். மைதானத்தை விட்டு வெளியேறிய அவர் படிக்கட்டில் கண்ணீருடன் அமர்ந்து இருந்தார். இது தொடர்பான புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.


அதனை பார்த்த ரசிகர்கள் கவலைபட வேண்டாம் திரிபாதி சிறப்பாக விளையாடினீர்கள் என்று கருத்து தெரிவித்து வருகின்றனர். முன்னதாக 35 பந்துகள் களத்தில் நின்ற அவர் 7 பவுண்டரிகள் மற்றும் 1 சிக்ஸர்கள் உட்பட மொத்தம் 55 ரன்களை விளாசினார் என்பது குறிப்பிடத்தக்கது.


 


மேலும் படிக்க: Mariyappan Thangavelu: அடி தூள்..ஜப்பானில் சம்பவம் செய்த தமிழக வீரர் மாரியப்பன் தங்கவேலு!


மேலும் படிக்க: Matheesha Pathirana: பதிரானாவுக்குத்தான் மவுசு! பணத்தை கொட்டிக் கொடுத்து எடுத்த கொழும்பு ஸ்ட்ரைக்கர்ஸ்!