நடப்பு ஐ.பி.எல். தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. லீக் ஆட்டங்கள் அனைத்தும் முடிந்துள்ள நிலையில், ப்ளே ஆஃப் சுற்று ஆட்டங்கள் இன்று தொடங்குகிறது. இந்த தொடரில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட அணிகளில் நடப்பு சாம்பியன் என்ற பெருமையுடன் களமிறங்கிய சென்னை அணி மிகவும் பரபரப்பான தனது கடைசி லீக் போட்டியில் ஆர்.சி.பி. அணியிடம் தோற்றது.


3 முறை மட்டுமே மிஸ்ஸிங்:


ஐ.பி.எல். வரலாற்றை பொறுத்தவரை எப்போதும் அசுர பலத்துடன் காணப்படும் அணிகளில் சென்னை அணி முதன்மையானதாகவே திகழ்கிறது. இதுவரை தாங்கள் ஆடிய 15 சீசன்களில் ப்ளே ஆஃப் சுற்றுக்கு சென்னை முன்னேறாதது வெறும் 3 முறை மட்டுமே ஆகும்.


2008ம் ஆண்டு முதல் தாங்கள் ஆடிய அனைத்து சீசன்களிலும் ப்ளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறிய சென்னை அணி 2020ம் ஆண்டுதான் முதன் முதலாக ப்ளே ஆஃப் சுற்றுக்கு கூட முன்னேறவில்லை. அதன்பின்பு, 2021ம் ஆண்டு கோப்பையை வென்றனர். மீண்டும் 2022ம் ஆண்டு ப்ளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறவில்லை. பின்னர், கடந்தாண்டு நடைபெற்ற ஐ.பி.எல். தொடரில் கோப்பையை வென்றனர். இந்த சீசனில் ப்ளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறவில்லை.


12 முறை முன்னேறி அசத்தல்:


15 முறை ஐ.பி.எல். தொடரில் ஆடியுள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 3 முறை மட்டுமே ப்ளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறாமல் 12 முறை ப்ளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறி, அதில் 5 முறை கோப்பையை வென்று அசத்தியுள்ளனர். முக்கியமான போட்டியில் போராடி தோற்றாலும் சென்னை அணியை ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர். 


சென்னை அணியைப் பொறுத்தவரையில் அவர்கள் சூழலுக்கு ஏற்ப தங்களை மாற்றிக்கொண்டு ஆடுவதில் வல்லவர்களாகவே திகழ்ந்துள்ளனர். சென்னை அணி இதுவரை தாங்கள் ஆடிய 15 சீசன்களில் 2010, 2011, 2018, 2021 மற்றும் 2023ம் ஆண்டுகளில் ஐ.பி.எல். கோப்பையை வென்று அசத்தியுள்ளனர்.


15 சீசனிலும் ஆடிய ஒரே வீரர் தோனி:


இதில் சென்னை அணிக்காக சி.எஸ்.கே. ஆடிய 15 சீசன்களிலும் ஆடிய ஒரே வீரர் என்ற பெருமையை தோனி படைத்துள்ளார். தோனிக்கு பிறகு சென்னை அணிக்காக அதிக போட்டிகள் ஆடிய வீரர்கள் என்ற பெருமையை ரெய்னா, பிராவோ, ஜடேஜா பெற்றுள்ளனர். ராஜஸ்தான் அணியில் ஆடி வரும் அஸ்வின் சென்னை அணியில் ஒரு காலத்தில் முக்கிய சுழற்பந்துவீச்சாளராக உலா வந்தவர்.


ப்ளெமிங், ஹைடன், மைக் ஹஸ்ஸி, மெக்கல்லம், வாட்சன்,நிடினி போன்ற ஜாம்பவான் வீரர்களும் சென்னை அணிக்காக ஆடியுள்ளனர். மேலும், ராபின் உத்தப்பா, அம்பத்தி ராயுடு, ஹர்பஜன்சிங் போன்றோரும் சென்னை அணிக்காக ஆடியுள்ளனர். தோனியே பெரும்பாலான சீசன்களில் கேப்டனாக இருந்து வந்த சூழலில், புதிய தலைமையில் அணியை உருவாக்க வேண்டும் என்பதற்காக இந்த முறை ருதுராஜ் கெய்க்வாட் தலைமையில் சி.எஸ்.கே. அணி களமிறங்கியது.


மேலும் படிக்க:India Cricket Team Coaches: 1971 முதல் இந்திய கிரிக்கெட் அணிக்கு இத்தனை பயிற்சியாளர்களா..? அசரவைக்கும் முழு லிஸ்ட் இதோ!


மேலும் படிக்க: IPL 2024 Playoffs: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், எலிமினேட்டரும்.. ராசியில்லா சுற்றில் களமிறங்கும் ஆர்சிபி!