ஐ.பி.எல். தொடரின் ப்ளே ஆஃப் தொடர் இன்று தொடங்கியுள்ளது. இந்த தொடரின் இறுதிப்போட்டிக்கு முதலில் செல்லப்போவது யார்? என்பதை தீர்மானிக்கும் குவாலிபயர் 1 இன்று அகமதாபாத் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.


அகமதாபாத்தில் டிராவிஸ் ஹெட்:


இந்த போட்டி தொடங்குவதற்கு முன்பு சன்ரைசர்ஸ் அணியின் ஆஸ்தான வீரரான தொடக்க பேட்ஸ்மேன் டிராவிஸ் ஹெட், தனக்கு அகமதாபாத் மைதானத்தில் இனிமையான நினைவுகள் இருப்பதாக கூறியிருந்தார். ஏனென்றால், இந்த மைதானத்தில் கடந்தாண்டு 50 ஓவர் உலகக்கோப்பை இறுதிப்போட்டி நடைபெற்றது.


அந்த போட்டியில் இந்திய அணி நிர்ணயித்த இலக்கை 241 ரன்கள் இலக்கை 43 ஓவர்களில் எட்டி உலகக்கோப்பையை வென்றது. அந்த போட்டியில் அடுத்தடுத்து 3 விக்கெட்டுகளை இழந்த ஆஸ்திரேலிய அணிக்காக டிராவிஸ் ஹெட் 120 பந்துகளில் 15 பவுண்டரி 4 சிக்ஸர் அடித்து 137 ரன்கள் விளாசி வெற்றி பெற வைத்தார். இதை மனதில் வைத்தே அகமதாபாத் மைதானத்தில் தனக்கு இனிமையான நினைவுகள் இருப்பதாக கூறினார்.


ஸ்டார்க் தந்த ஷாக்:


இதனால், இன்றைய போட்டியில் அவர் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தலாம் என்று கருதினார். இந்த போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதரபாத் அணி டாஸ் வென்று முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. பேட்டிங்கைத் தொடங்கிய ஹைதரபாத் அணிக்கு தொடக்கமே பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. அந்த அணியின் அதிரடி தொடக்க வீரர் டிராவிஸ் ஹெட் எதிரணி வீரர் ஸ்டார்க் பந்தில் போல்டாகி டக் அவுட்டாகி வெளியேறினார்.


உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் அசத்தியது போல அசத்தலாம் என்று கருதிய டிராவிஸ் ஹெட்டை ஆட்டத்தின் இரண்டாவது பந்திலே போல்டாக்கி, மிட்செல் ஸ்டார்க் பெவிலியனுக்கு அனுப்பி வைத்தார். இனிமையான நினைவுகள் தந்த மைதானத்தில் மீண்டும் இனிமையான நினைவுகள் தரலாம் என்று கருதிய ஹெட் டக் அவுட்டாகி ஹைதரபாத் ரசிகர்களை அதிர்ச்சிக்கு ஆளாக்கினார்.


தத்தளிக்கும் ஹைதரபாத்:


டிராவிஸ் ஹெட் இதுவரை 23 ஐ.பி.எல். போட்டிகள் ஆடி 1 சதம், 5 அரைசதங்களுடன் 738 ரன்கள் விளாசியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தொடரில் தொடக்கம் முதலே பேட்டிங்கில் அசத்தி வந்த டிராவிஸ் ஹெட் சன்ரைசர்ஸ் வெற்றிக்கு முக்கிய பங்காற்றிய வீரர் ஆவார். டிராவிஸ் ஹெட் டக் அவுட்டாகியும், அபிஷேக் சர்மா 3 ரன்களிலும், நிதிஷ் ரெட்டி 9 ரன்களிலும், ஷாபாஸ் அகமது டக் அவுட்டாகியும் சன்ரைசர்ஸ் ஹைதரபாத் அணி 5 ஓவர்களில் 39 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது.


மேலும் படிக்க: KKR vs SRH LIVE Score: அடுத்தடுத்து வெளியேறிய ஹெட், அபிஷேக், நிதிஷ்; மிரட்டும் மிட்ஷெல் ஸ்டார்க்!


மேலும் படிக்க: India Cricket Team Coaches: 1971 முதல் இந்திய கிரிக்கெட் அணிக்கு இத்தனை பயிற்சியாளர்களா..? அசரவைக்கும் முழு லிஸ்ட் இதோ!