ஐ.பி.எல். தொடர் என்றாலே விறுவிறுப்புக்கும், பரபரப்புக்கும் பஞ்சமிருக்காது. இந்த நிலையில், நடைபெற்று முடிந்த ஐ.பி.எல். தொடரிலே விராட்கோலியின் பேட்டிங்கில் மட்டுமில்ல, சண்டையிலும் மிரட்டியது கவனிககத்தக்கதாக அமைந்தது. குறிப்பாக, விராட்கோலி – நவீன் உல் ஹக் மோதல் சமூக வலைதளங்களை சூடாக்கியது. இந்த சம்பவம் முடிந்துவிட்டதாக நினைத்த நிலையில், தற்போது இந்த சம்பவம் மீண்டும் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.


சண்டையை தொடங்கிய விராட்கோலி:


தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு பேட்டி அளித்துள்ள நவீன் உல் ஹக், “ போட்டியின்போதும், போட்டிக்கு பின்னரும் விராட்கோலி இதையெல்லாம் சொல்லியிருக்ககூடாது. நான் ஒன்றும் சண்டையைத் தொடங்கவில்லை. போட்டி முடிந்து கை குலுக்கிக் கொண்டிருக்கும்போது, அவர்தான் சண்டையை தொடங்கினார். நான் ஒன்றை மட்டும் சொல்ல விரும்புகிறேன். நான் பொதுவாக யாரையும் ஸ்லெட்ஜ் செய்வதில்லை. அதைச்செய்தாலும் நான் பந்துவீசும் பேட்டரிடம் சொல்வேன். நான் ஒரு பந்துவீச்சாளர். அந்த போட்டியில் ஒரு வார்த்தை கூட சொல்லவில்லை. நான் யாரையும் ஸ்லெட்ஜ் செய்யவில்லை.


அங்கிருந்த வீரர்களுக்கு நான் எப்படி அந்த சூழ்நிலையை சமாளித்தேன் என்பது தெரியும். நான் பேட்டிங் செய்யும்போதும், அந்த போட்டிக்கு பிறகும் நான் கோபத்தை இழக்கவில்லை. போட்டிக்கு பிறகு நான் செய்ததை அனைவரும் பார்க்க முடியும். நான் கை குலுக்கியபோது, கோலிதான் என் கைகளை வலுக்கட்டாயமாக பிடித்தார். நானும் மனிதன்தான். அதனால்தான் அவர் செய்ததற்கு எதிர்வினையாற்றினேன்.”


இவ்வாறு அவர் பேசியுள்ளார்.


கோலி - நவீன் உல் ஹக் மோதல்:


நடைபெற்று முடிந்த ஐ.பி.எல். தொடரில் லீக் ஆட்டத்தில் ஆர்.சி.பி. அணி 212 ரன்கள் குவித்தும் அந்த போட்டியில் தோல்வி அடைந்தது. அடுத்து நடந்த போட்டியில் லக்னோ அணியை பெங்களூர் அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் வென்று அசத்தியது. இதில் முதலில் நடந்த போட்டியில் லக்னோ அணி வெற்றி பெற்ற பிறகு கவுதம் கம்பீர் பெங்களூர் ரசிகர்களை பார்த்து வாயை மூடுங்கள் என்று சைகை காட்டியது பெரும் கோபத்தை ஆர்.சி.பி. ரசிகர்களுக்கு ஏற்படுத்தியது.


அதற்கு பதிலடி தரும் வகையில் நடந்த போட்டியில் பெங்களூர் வெற்றி பெற்றது. அந்த போட்டியிலே விராட்கோலி- நவீன்உல் ஹக், விராட்கோலி – கவுதம் கம்பீர் மோதல் நடைபெற்றது. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்திற்கு பிறகு நவீன் உல் ஹக் பெங்களூர் அணி தோற்ற ஆட்டங்களின்போது மாம்பழ புகைப்படங்களை பதிவிட்டு ஆர்.சி.பி.யை கிண்டல் செய்ததும், அதற்கு ஆர்.சி.பி. ரசிகர்கள் பதிலடி தந்ததும் குறிப்பிடத்தக்கது.


இந்த சம்பவம் நடைபெற்று ஒரு மாதத்திற்கு மேல் ஆகிய நிலையில் தற்போது இந்த சம்பவம் தொடர்பாக நவீன் உல் ஹக் பேசியிருப்பது மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால், அவரை கோலியின் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் வறுத்தெடுத்து வருகின்றனர். இந்த தொடரில் நவீன் உல் ஹக் ஆடிய லக்னோ அணி ப்ளே ஆப் சுற்றுடன் வெளியேறியதும், விராட்கோலி ஆடிய பெங்களூர் அணி லீக் போட்டியுடன் 5வது இடத்தை பிடித்து வெளியேறியதும் குறிப்பிடத்தக்கது. 


மேலும் படிக்க: Ashes Test: ஆஷஸ் முதல் நாளே மாஸ்.. ஒருநாள் போட்டி போல ஆடிய இங்கிலாந்து..! ஜோ ரூட் அபார சதம்..!


மேலும் படிக்க: TNPL: அபார சதம் அடித்த அஜிதேஷ்.. கடைசி பந்தில் வெற்றி பெற்ற நெல்லை..! இறுதிவரை போராடி தோற்ற கோவை..!