தமிழ்நாடு ப்ரிமீயர் லீக் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் நேற்று நடைபெற்ற 6வது போட்டியில் லைகா கோவை கிங்ஸ் – நெல்லை ராயல் கிங்ஸ் அணிகள் மோதின. கோவையில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற நெல்லை அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதன்படி, பேட்டிங்கைத் தொடங்கிய கோவை அணிக்கு தொடக்கமே அதிர்ச்சியே காத்திருந்தது.


சாய் சுதர்சன் மிரட்டல்:


அந்த அணியின் தொடக்க வீரர் சச்சின் டக் அவுட்டாகி வெளியேறினார். அடுத்து விக்கெட் கீப்பர் சுரேஷ்குமார்- சாய் சுதர்சன் ஜோடி சேர்ந்தனர். இருவரும் இணைந்து பொறுப்புடன் ஆடினர். சுரேஷ்குமார் அதிரடியாக ஆடினார். அவர் 24 பந்துகளில் 3 பவுண்டரி 1 சிக்ஸருடன் 33 ரன்கள் எடுத்த நிலையில் அவுட்டானார். அடுத்து வந்த ராம் அரவிந்த் 18 ரன்களில் அவுட்டானாலும், கோவை அணியின் ரன்ரேட் சீராக சென்றது. ஒரு முனையில் விக்கெட்டுகள் விழுந்தாலும் மறுமுனையில் சாய் சுதர்சன் அதிரடி காட்டிக்கொண்டே இருந்தார்.


அவருக்கு கேப்டன் ஷாருக்கான் அதிரடியில் ஒத்துழைப்பு அளித்தார். அதிரடியில் மிரட்டிய சாய் சுதர்சன் 52 பந்துகளில் 7 பவுண்டரி 4 சிக்ஸருடன் 90 ரன்கள் எடுத்த நிலையில் அவுட்டானார். அவர் ஆட்டமிழந்த பிறகு கேப்டன் ஷாருக் 8 பந்துகளில் 2 பவுண்டரி 1 சிக்ஸருடன் 17 ரன்களில் அவுட்டாக, கடைசியில் 5 பந்துகளில் 2 பவுண்டரி 1 சிக்ஸருடன் முகிலேஷ் 15 ரன்கள் எடுக்க 20 ஓவர்களில் கோவை அணி 6 விக்கெட் இழப்பிற்கு 181 ரன்கள் எடுத்தது.


அஜிதேஷ் மிரட்டல் சதம்:


தொடர்ந்து 182 ரன்கள் என்ற கடின இலக்கை நோக்கி ஆடிய நெல்லை அணிக்கும் தொடக்க வீரராக களமிறங்கிய கேப்டன் அருண் கார்த்திக் டக் அவுட்டானார். அவருக்கு பிறகு களமிறங்கிய அஜிதேஷ் குருசாமி அதிரடியில் மிரட்டினார். மற்றொரு தொடக்க வீரர் நிரஞ்சன் – அஜிதேஷ் ஜோடி தொடக்கத்தில் நிதானமாக ஆடியது. நிரஞ்சன் 29 பந்துகளில் 2 பவுண்டரி 1 சிக்ஸருடன் 25 ரன்களில் அவுட்டாக, அஜிதேஷ் அடுத்து வந்த விக்கெட் கீப்பர் ரிதிக் 3 ரன்களல் அவுட்டானார்.


88 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை நெல்லை இழந்தாலும், அஜிதேஷ் அதிரடியில் மிரட்டினார். அவர் பவுண்டரியும், சிக்ஸரும் விளாசியதால் அணியின் ஸ்கோர் மளமளவென எகிறயது. அவருக்கு ஒத்துழைப்பு அளித்த சோனு யாதவ் 16 பந்துகளில் 1 சிக்ஸருடன் 20 ரன்கள் எடுத்த நிலையில் அவுட்டாக, அருண்குமாரும் 3 ரன்களில் அவுட்டானார். பேட்டிங்கில் மிரட்டிய அஜிதேஷ் அபாரமாக ஆடி சதமடித்தார். அவர் 8 பவுண்டரி 7 சிக்ஸருடன் 60 பந்துகளில் 112 ரன்கள் குவித்திருந்த நிலையில் வெற்றிக்கு 2 பந்துகளில் 7 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் ரன் அவுட்டானார்.


நெல்லை வெற்றி:


இதனால், நெல்லை அணியின் வெற்றிக்கு கடைசி 2 பந்தில் 7 ரன்கள் தேவைப்பட்டது. அப்போது, ஆட்டத்தின் கடைசி பந்தில் நெல்லை வீரர் பொய்யாமொழி சிக்ஸர் அடித்து நெல்லை அணியை த்ரில் வெற்றி பெற வைத்தார். இதன்மூலம், நெல்லை அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. சதமடித்த அஜிதேஷை பலரும் வாழ்த்தி வருகின்றனர். வெற்றிக்கான சிக்ஸரை அடித்த பொய்யாமொழி சிறப்பாக பந்துவீசி 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


மேலும் படிக்க: Ashes Series 2023: சாதனைகள் படைக்க, உடைக்க இருக்கும் வீரர்கள்.. ஆஷஸ் தொடரில் குவியபோகும் ரெக்கார்ட்ஸ் லிஸ்ட்!


மேலும் படிக்க: IND vs WI: சீனியர் வீரர்களுக்கு ஓய்வு.. புதிய அணியில் ஜூனியர் வீரர்கள்.. எதிர்பார்க்கப்படும் இந்திய அணி..!