நடப்பு ஐ.பி.எல். தொடரின் இறுதிப்போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியை வீழ்த்தி சென்னை சூப்பர்கிங்ஸ் அணி சாம்பியன் பட்டம் வென்றது. இந்த தொடரில் சென்னை சூப்பர்கிங்ஸ் அணியின் முக்கிய பந்துவீச்சாளர்களில் ஒருவராக திகழ்ந்தவர் துஷார் தேஷ்பாண்டே.


தேஷ்பாண்டேவிற்கு நிச்சயதார்த்தம்:


துஷார் தேஷ்பாண்டேவிற்கும் அவரது தோழியான நபா கடாம்வார் என்பவருக்கும் நேற்று நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளது. அவரது திருமணத்திற்கு சென்னை அணியின் மற்றொரு நட்சத்திர வீரரான ஷிவம் துபே நேரில் சென்று வாழ்த்தியுள்ளார். மணமக்களுடன் எடுத்த புகைப்படத்தை துபே தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.


துஷார் தேஷ்பாண்டேவிற்கு பலரும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். நடப்பு ஐ.பி.எல். தொடரில் கொண்டு வரப்பட்ட புதிய விதியான இம்பேக்ட் வீரர் என்ற விதிப்படி, முதன்முறையாக இம்பேக்ட் வீரராக களமிறங்கியவர் துஷார் தேஷ்பாண்டே. தொடக்க ஆட்டத்தில் அவர் மோசமாக பந்துவீசினாலும் அடுத்தடுத்த போட்டிகளில் சிறப்பாக செயல்பட்டு சென்னை அணியின் நம்பிக்கை மிகுந்த வீரராக மாறினார்.


சி.எஸ்.கே. வீரர்:


2022ம் ஆண்டு நடந்த ஐ.பி.எல். ஏலத்தில் அடிப்படை விலையான ரூபாய் 20 லட்சத்திற்கு துஷார் தேஷ்பாண்டேவை சென்னை அணி ஏலத்தில் எடுத்தது. கடந்த சீசனில் வெறும் 3 போட்டிகளில் மட்டுமே ஆடினார். ஆனால், நடப்பு தொடரில் சென்னை அணியின் முக்கிய பந்துவீச்சாளராக துஷார் தேஷ்பாண்டே உருவெடுத்தார். இனி வரும் சீசன்களிலும் சென்னை அணியின் நட்சத்திர வீரராக துஷார் தேஷ்பாண்டே திகழ்வார் என்று எதிர்பார்க்கலாம்.


28 வயதான துஷார் தேஷ்பாண்டே மகாராஷ்ட்டிராவைச் சேர்ந்தவர். வலது கை பந்துவீச்சாளரான மும்பையின் 16 வயதுக்குட்பட்ட அணி, மும்பையின் 19 வயதுக்குட்பட்ட அணி, மும்பை கிரிக்கெட் அசோசியேஷன் லெவன், இந்தியன் போர்ட் பிரெசிடெண்ட்ஸ் லெவன், இந்தியா ப்ளூ, இந்தியா ஏ அணிகளுக்காக ஆடியுள்ளார்.


கிரிக்கெட் கேரியர்:


ஐ.பி.எல். தொடரில் டெல்லி அணிக்காக ஆடியவர் தற்போது சென்னை அணிக்காக ஆடியுள்ளார். துஷார் தேஷ்பாண்டே இதுவரை முதல் தர கிரிக்கெட் போட்டியில் 29 ஆட்டங்களில் ஆடி 80 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் 35 விக்கெட்டுகளையும், டி20 போட்டிகளில் 83 விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளார்.


முதல் தர கிரிக்கெட்டில் தமிழ்நாடு அணிக்கு எதிராக 2016ம் ஆண்டு அறிமுகமானார். லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் பரோடா அணிக்கு எதிராக 2018ம் ஆண்டு முதன்முறையாக களமிறங்கினார். டி20 போட்டியில் 2015ம் ஆண்டு ஒடிசா அணிக்கு எதிராக களமிறங்கினார். ஐ.பி.எல். தொடரில் இதுவரை 23 போட்டிகளில் ஆடி 25 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். முதலில் கடந்த சில தினங்களுக்கு முன்பு ருதுராஜ் கெய்க்வாட்டிற்கு திருமணம் நடந்தது. 


மேலும் படிக்க: IND vs WI Time Table: வெளியானது அட்டவணை.. வெஸ்ட் இண்டீஸ் அணியுடன் மோதும் இந்தியா..! எங்கு? எப்போது? - முழு விவரம்


மேலும் படிக்க: World Cup 2023: விரைவில் வெளியாகும் ஸ்டேடியத்தின் பட்டியல்.. சேப்பாக்கத்தில் தொடங்கும் முதல் போட்டி.. லிஸ்ட் ஒரு பார்வை!