புகழ்பெற்ற ஆஷஸ் டெஸ்ட் தொடர் நேற்று இங்கிலாந்தில் தொடங்கியது. பர்மிங்காமின் எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்தது. இதையடுத்து, களமிறங்கிய இங்கிலாந்து அணி ஒருநாள் போட்டி ஆடுவது போல ஆடியது.


அதிரடி காட்டிய இங்கிலாந்து:


அந்த அணியின் எந்த வீரரும் டெஸ்ட் கிரிக்கெட் போலவே ஆடவில்லை. தொடக்க வீரராக களமிறங்கிய டக்கெட் 12 ரன்களில் ஆட்டமிழந்தாலும், அடுத்து ஜோடி சேர்ந்த ஜாக் கிராவ்லி – ஒல்லி போப் கூட்டணி ரன்களை குவித்தது. பந்துகளை வீணடிக்காமல் ரன்களை சேர்ந்த ஒல்லி போப் 44 பந்துகளில் 2 பவுண்டரியுடன் 31 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். ஜாக் கிராவ்லியுடன் உலகத்தரம் வாய்ந்த வீரர் ஜோ ரூட் கூட்டணி அமைத்தார்.


இருவரும் ஆஸ்திரேலிய பந்துவீச்சை எந்த வித சிரமும் இல்லாமல் எதிர்கொண்டனர். இருவரும் இணைந்து அபாரமாக ஆடினார். சிறப்பாக ஆடி அரைசதம் அடித்திருந்த ஜாக் கிராவ்லி 73 பந்துகளில் 7 பவுண்டரியுடன் 61 ரன்கள் எடுத்த நிலையில் அவுட்டானார். அவர் ஆட்டமிழந்த பிறகு களமிறங்கிய ஹாரி ப்ரூக் அதிரடியாகவே ஆடினார். ஹாரி ப்ரூக் 4 பவுண்டரியுடன் 32 ரன்களுக்கு அவுட்டானார். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கேப்டன் பென்ஸ்டோக்ஸ் 1 ரன்னில் ஆட்டமிழந்தார்.


ஜோ ரூட் சதம்:


அதன்பின்பு ஜோடி சேர்ந்த ஜோ ரூட் – ஜானி பார்ஸ்டோ ஜோடி ஆஸ்திரேலிய அணிக்கு சிம்மசொப்பனமாக விளங்கினர். இருவரும் இணைந்து சிறப்பாக ஆடி ரன்களை குவிக்க, இங்கிலாந்தின் ரன்னும் விறுவிறுவென ஏறியது. அபாரமாக ஆடிய ஜோ ரூட்டும் சதமடித்து அசத்தினார். அவருக்கு இது 30வது டெஸ்ட் சதம் ஆகும். அணியின் ஸ்கோர் 297 ரன்களை எட்டியபோது இந்த கூட்டணி பிரிந்தது. சிறப்பாக ஆடிய ஜானி பார்ஸ்டோ 78 பந்துகளில் 12 பவுண்டரியுடன் 78 ரன்கள் எட்டியபோது நாதன் லயன் பந்தில் அவுட்டானார்.


அடுத்து வந்த மொயின் அலி 17 பந்தில் 2 பவுண்டரி 1 சிக்ஸருடன் 18 ரன்களும், ஸ்டூவர்ட் ப்ராட் 21 பந்தில் 2 பவுண்டரியுடன் 16 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். இங்கிலாந்து 78 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 393 ரன்கள் எடுத்திருந்தபோது டிக்ளேர் செய்தது. அபார சதம் அடித்த ஜோ ரூட் கடைசி வரை ஆட்டமிழக்காமல் 152 பந்துகளில் 7 பவுண்டரி 4 சிக்ஸருடன் 118 ரன்களுடனும், ராபின்சன் 31 பந்தில் 2 பவுண்டரியுடன் 17 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.


ஆஸ்திரேலிய அணியின் நாதன் லயன் 29 ஓவர்கள் பந்துவீசி 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார். ஹேசல்வுட் 2 விக்கெட்டுகுளையும், போலந்து, கிரீன் தலா 1 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். தொடர்ந்து முதல் இன்னிங்சை தொடங்கிய ஆஸ்திரேலிய விக்கெட் இழப்பின்றி 4 ஓவர்களில் 14 ரன்கள் எடுத்தது. முதல் நாளே இங்கிலாந்து அணி ஒருநாள் போட்டி போல ஆடியது ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியது.