தற்போதைய இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டின் பதவிக்காலம் வருகின்ற ஜூன் மாதம் நடைபெறும் டி20 உலகக் கோப்பையுடன் முடிவடைகிறது. பிசிசிஐ சார்பில் ராகுல் டிராவிட்டின் பதவிக்காலம் நீட்டிக்க முடிவு எடுத்தாலும், டிராவிட் தனிப்பட்ட காரணங்களால் தலைமை பயிற்சியாளராக இருக்க விருப்பம் தெரிவிக்கவில்லை.
இதையடுத்து, இந்திய அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் அல்லது நியூசிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் ஸ்டீபன் பிளெமிங்கை கொண்டு வர பிசிசிஐ முயற்சி செய்து வருகிறது.
இந்தநிலையில் கடந்த 1971ம் ஆண்டு முதல் இந்திய தேசிய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக இருந்தவர்களின் பட்டியலை இங்கே பார்க்கலாம்.
வரிசை எண் | இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் | கால அளவு | சொந்த நாடு |
1 | கேகி தாராபூர் | 1971 | இந்தியா |
2 | ஹேமு அதிகாரி | 1971 – 1974 | இந்தியா |
3 | குலாப்ராய் ராம்சந்த் | 1975 | இந்தியா |
4 | தத்தா கெய்க்வாட் | 1978 | இந்தியா |
5 | சலீம் துரானி | 1980 - 1981 | இந்தியா |
6 | அசோக் மங்காட் | 1982 | இந்தியா |
7 | பி.ஆர். மான் சிங் | 1983 – 1987 | இந்தியா |
8 | சந்து போர்டே | 1988 - 1989 & 2007 | இந்தியா |
9 | பிஷன் சிங் பேடி | 1990 - 1991 | இந்தியா |
10 | அப்பாஸ் அலி பெய்க் | 1991 – 1992 | இந்தியா |
11 | அஜித் வடேகர் | 1992 – 1996 | இந்தியா |
12 | சந்தீப் பாட்டீல் | 1996 | இந்தியா |
13 | மதன் லால் | 1996 – 1997 | இந்தியா |
14 | அன்சுமான் கெய்க்வாட் | 1997 – 1999 | இந்தியா |
15 | கபில் தேவ் | 1999- 2000 | இந்தியா |
16 | ஜான் ரைட் | 2000 - 2005 | நியூசிலாந்து |
17 | கிரெக் சேப்பல் | 2005 - 2007 | ஆஸ்திரேலியா |
18 | ரவி சாஸ்திரி | 2007, 2015, 2017 - 2021 | இந்தியா |
19 | லால்சந்த் ராஜ்புத் | 2007 – 2008 | இந்தியா |
20 | கேரி கிர்ஸ்டன் | 2008 - 2011 | தென்னாப்பிரிக்கா |
21 | டங்கன் பிளெட்சர் | 2011 - 2015 | ஜிம்பாப்வே |
22 | சஞ்சய் பங்கர் (இடைக்காலம்) | 2016 | இந்தியா |
23 | அனில் கும்ப்ளே | 2016 - 2017 | இந்தியா |
24 | ராகுல் டிராவிட் | 2021- தற்போது வரை | இந்தியா |
இந்திய கிரிக்கெட் அணியின் முதல் தலைமை பயிற்சியாளர்:
இந்திய கிரிக்கெட் அணியின் முதல் பயிற்சியாளர் என்ற பெருமைக்கு சொந்தகாரர் கேகி தாராபூர். இவர் கர்நாடக கிரிக்கெட் வீரராக இருந்து பயிற்சியாளராக உயர்வு பெற்றார்.
பி.ஆர்.மான் சிங்:
பி.ஆர். மான் சிங்கை பயிற்சியாளர் என்று சொல்வதை விட இந்திய அணி மேலாளர் என்று சொல்வதே சிறந்தது. இவர்தான் இந்திய அணி முதல் முறைய ஐசிசி உலகக் கோப்பை வென்றபோது மேலாளராக இருந்தார். இதையடுத்து, பி.ஆர். மான் சிங் 1983 முதல் 1987 வரை இந்திய கிரிக்கெட் அணியின் மேலாளராக இருந்தார்.
ஜான் ரைட்: இந்திய கிரிக்கெட் அணியின் முதல் வெளிநாட்டு பயிற்சியாளர்:
2000 ஆம் ஆண்டில் நியூசிலாந்து முன்னாள் வீரர் ஜான் ரைட்டைக் கொண்டு வர முடிவு செய்தனர். 2001 கொல்கத்தா டெஸ்டில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இந்திய அணியின் வெற்றி, பாகிஸ்தானில் ஒரு வெளிநாட்டு தொடர் வெற்றி, இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவில் நடந்த டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் வெற்றி, 2003 ஐசிசி உலகக் கோப்பையின் இறுதிப் போட்டி என இவரது பயிற்சியின் கீழ், கங்குலியின் தலைமையில் கீழ் இந்திய அணி சிறப்பாகவே செயல்பட்டது.
கேரி கிர்ஸ்டன்:
2008ம் ஆண்டு கேரி கிர்ஸ்டன் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டதுதான் இந்திய கிரிக்கெட்டின் பொற்காலமாக அமைந்தது. இவரது பயிற்சியின் கீழ், இந்திய அணி டெஸ்டில் நம்பர் 1 இடத்தையும், 21 ஆண்டுகள் பிறகு 2011ல் ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பையையும் வென்று அசத்தியது.