ஐபிஎல் 2024 கிரிக்கெட் சீசனுக்காக ஆடுகளத்தை சிறப்பாக பராமரித்ததற்க்காக பரிசுத் தொகையை அறிவித்துள்ளார் பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷா. அதன்படி, 10 ஸ்டேடியங்களின் ஆடுகள பராமரிப்பாளர்களுக்கு தலா ரூ. 25 லட்சம் வழங்கப்படும் என்றும், குவஹாத்தி, தரம்சாலா, விசாகப்பட்டினம் ஸ்டேடியம் ஆடுகள பராமரிப்பாளர்களுக்கு தலா ரூ. 10 லட்சம் பரிசுத் தொகை வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.


முழு விவரம்:


ஐபிஎல் 2024ல் சென்னை சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் நேற்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதியது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஹைதராபாத் அணி 113 ரன்கள் மட்டுமே எடுத்தது. 






இலக்கை துரத்திய கொல்கத்தா அணி 10.3 ஓவர்களில் இலக்கை துரத்தி 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. இதன்மூலம், ஐபிஎல் வரலாற்றில் மூன்றாவது முறையாக கோப்பையை வென்று கெத்து காட்டியது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி. இந்த போட்டி முடிந்த கையோடு இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் ஆடுகள பராமரிப்பாளர்களுக்கு ஊக்கத்தொகையை அறிவித்தது. 






இதுகுறித்து பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷா தனது எக்ஸ் பக்கத்தில், “ எங்கள் வெற்றிகரமான டி20 சீசனுக்கு (ஐபிஎல் 2024) பின்னால் அறியப்படாத ஹீரோக்களாக இருக்கும் ஆடுகள பராமரிப்பாளர்கள் மற்றும் மைதான ஊழியர்களுக்கு முக்கிய பங்களிப்புகள் உண்டு. மோசமான வானிலையிலும் கூட நல்ல விதமாக ஆடுகளத்தை பராமரித்தனர். 10 ஐபிஎல் மைதானங்களின் கிரவுண்ட்மேன்கள் மற்றும் கியூரேட்டர்களுக்கு தலா ரூ.25 லட்சம் வழங்கப்படும். அதேசமயம் 3 கூடுதல் மைதானங்களின் பணியாளர்கள் தலா ரூ.10 லட்சம் பெறுவார்கள். இது உங்கள் அர்ப்பணிப்பு மற்றும் கடின உழைப்புக்கு பரிசு” என பதிவிட்டு இருந்தார். 


வெற்றி பெற்ற அணிக்கு எவ்வளவு பரிசுத்தொகை: 


ஐபிஎல் 2024ன் இறுதிப்போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை வீழ்த்தி கோப்பையை வென்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு ரூ. 20 கோடி பரிசுத்தொகையாக வழங்கப்பட்டுள்ளது. அதேசமயம், ரன்னர் அப்-ஆன சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு ரூ. 12.5 கோடி கொடுக்கப்பட்டது. 


மூன்றாவது இடத்தை பிடித்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு ரூ. 7 கோடியும், 4ம் இடம் பிடித்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கு ரூ. 6.5 கோடியும் வழங்கப்பட்டது. 


மூன்றாவது முறையாக கோப்பை வென்ற கொல்கத்தா: 


கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி மூன்றாவது முறையாக ஐபிஎல் வரலாற்றில் பட்டத்தை வென்றது. கொல்கத்தா அணி 2012ம் ஆண்டு, 2014ம் ஆண்டும் கோப்பைகளை வென்றது. சரியாக 10 ஆண்டுகளுக்கு பிறகு இந்தாண்டும் கோப்பையை வென்று கெத்து காட்டியுள்ளது.