இந்திய கிரிக்கெட் அணி அடுத்த தலைமுறையின் கைகளில் தற்போது உள்ளது. விராட் கோலி, ரோகித் சர்மா, ரஹானே, புஜாரா ஆகியோரின் கிரிக்கெட் கேரியர் முடிவுக்கு வந்துள்ள நிலையில் ஜெய்ஸ்வால், சுப்மன்கில், சாய் சுதர்சன், ரிஷப்பண்ட் ஆகிய இளைஞர்களின் கைகளில் இந்திய அணி உள்ளது.
ஜெய்ஸ்வால் அபாரம்:
இந்த இளைஞர்களில் மிக மிக முக்கியமானவராக திகழ்பவர் ஜெய்ஸ்வால். இவரது பேட்டிங் திறமை என்பது அனைவராலும் புகழ்ந்து பாராட்டப்பட்டது. இதற்கு காரணம் டி20 மற்றும் டெஸ்ட் என இரண்டு வடிவ போட்டிகளிலும் வித்தியாசமான மனநிலையில் இவர் ஆடுவதே ஆகும்.
இந்த நிலையில், இங்கிலாந்தில் இன்று தொடங்கியுள்ள போட்டியில் லீட்ஸ் மைதானத்தில் முதலில் ஆடி வரும் இந்திய அணிக்காக தொடக்க வீரராக களமிறங்கிய ஜெய்ஸ்வால் அபாரமாக ஆடி சதம் விளாசினார். ஜெய்ஸ்வால் டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரு சத இயந்திரமாக உருவெடுத்து வருகிறார்.
சதத்துடனே தொடக்கம்:
அதாவது, வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக அந்த நாட்டில் தான் ஆடிய முதல் போட்டியிலே சதம் விளாசினார். அதன்பின்பு, கடந்தாண்டு ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக அவர்களது சொந்த நாட்டில் தான் ஆடிய முதல் டெஸ்ட்டிலே சதம் விளாசி அசத்தியுள்ளார். தற்போது, இங்கிலாந்து நாட்டிலும் அவர்களுக்கு எதிராக தான் ஆடிய முதல் டெஸ்ட்டிலே சதம் விளாசி அசத்தியுள்ளார். இது மிகப்பெரிய வரலாறு ஆகும்.
இந்திய அணிக்காக இதுவரை வெளிநாட்டு மண்ணில் ஒவ்வொரு அணிக்கு எதிராகவும் அறிமுக போட்டிகளிலே அதிக சதம் விளாசிய இந்திய வீரர் என்ற பெருமையையும் ஜெய்ஸ்வால் படைத்துள்ளார். இந்திய அணியின் தவிர்க்க முடியாத நட்சத்திரமாக உருவாகியுள்ள ஜெய்ஸ்வால் இனி வரும் காலங்களில் இந்தியாவை தாங்கும் ஒரு தவிர்க்க முடியாத தூணாக இருப்பார் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
இந்திய அணியின் தூண்:
23 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 2 இரட்டை சதங்கள், 5 சதங்கள், 10 அரைசதங்களுடன் 1899 ரன்கள் விளாசியுள்ளார். டெஸ்ட் போட்டிகளில் சராசரி 54.26 ஆக வைத்துள்ளார். 23 வயதே ஆன ஜெய்ஸ்வால் இந்திய அணிக்காக அடுத்த 15 ஆண்டுகள் வரை முக்கிய தூணாக இருப்பார் என்றே கிரிக்கெட் வல்லுனர்கள் கணித்துள்ளனர். 23 டி20 போட்டிகளில் இந்திய அணிக்காக ஆடி 5 அரைசதம், 1 சதத்துடன் 723 ரன்கள் எடுத்துள்ளார். 66 ஐபிஎல் போட்டிகளில் ஆடி 2 சதம், 15 அரைசதத்துடன் 2166 ரன்கள் எடுத்துள்ளார்.