ஐ.பி.எல். கிரிக்கெட் அணிகளில் முக்கியமான அணிகளில் ஒன்று சன்ரைசர்ஸ் ஹைதராபாத். டேவிட் வார்னர் தலைமையில் ஒரு முறை களமிறங்கியபோது சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி கோப்பையையும் கைப்பற்றி அசத்தியுள்ளது.
ஹைதராபாத் அணி:
ஆனால், சமீபகால தொடர்களில் ஹைதராபாத் அணியின் செயல்பாடு மிகவும் மோசமாக இருந்து வருகிறது. டேவிட் வார்னரை அணியில் இருந்து நீக்கிய பிறகு வில்லியம்சன் தலைமையில் ஹைதராபாத் களமிறங்கியது. ஆனால், ஹைதராபாத் அணியின் செயல்பாட்டில் பெரியளவில் மாற்றம் இல்லை.
இந்த நிலையில், கடந்தாண்டு இறுதியில் அணியின் வீரர்களை ஏலத்தில் எடுத்தும், விடுவித்தும் ஒவ்வொரு அணியும் தங்களது அணியை பலப்படுத்தின. அதன்படி, நடப்பு 2023ம் ஆண்டுக்கான ஐ.பி.எல். தொடரில் ஹைதராபாத் அணியில் இருந்து கேன் வில்லியம்சனை அணி நிர்வாகம் விடுவித்தது.
புதிய கேப்டன்:
இதனால், விரைவில் தொடங்க உள்ள ஐ.பி.எல். தொடரில் ஹைதராபாத் அணிக்கான கேப்டனாக களமிறங்கப் போவது யார்? என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்த நிலையில், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் கேப்டனாக வாஷிங்டன் சுந்தர் நியமிக்கப்பட வாய்ப்புகள் ஏராளமாக உள்ளது என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.
2013ம் ஆண்டு முதல் ஐ.பி.எல். தொடரில் விளையாடி வரும் ஹைதராபாத் அணிக்கு மட்டும் இதுவரை 8 பேர் கேப்டன்களாக பொறுப்பு வகித்து வருகின்றனர். சங்கர்கரா, கேமரூன் ஒயிட், ஷிகர் தவான், டேரன் ஷமி, டேவிட் வார்னர், கேன் வில்லியம்சன், புவனேஷ்குமார் மற்றும் மணிஷ் பாண்டே ஆகியோர் கேப்டன்களாக பொறுப்பு வகித்துள்ளனர். இதுவரை 10 சீசன்களில் ஆடியுள்ள ஹைதராபாத் அணி அதற்குள் 8 பேரை கேப்டனாக நியமித்திருப்பதும் அவர்களுக்கு பின்னடைவாக உள்ளது.
தற்போது கேப்டனாக நியமிக்க வாய்ப்புள்ள வாஷிங்டன் சுந்தருக்கு 24 வயதுதான் ஆகிறது. அவர் இதுவரை 53 ஐ.பி.எல், போட்டிகளில் ஆடியுள்ளார். 6 சீசன்களாக ஆடி வரும் வாஷிங்டன் சுந்தர் சிறந்த ஆல்ரவுண்டர் ஆவார். அவர் இதுவரை ஐ.பி.எல். தொடரில் 318 ரன்களும், 33 விக்கெட்டுகளும் எடுத்துள்ளார். சுழற்பந்துவீச்சாளரான சுந்தர் கட்டுக்கோப்பாக பந்துவீசும் வல்லமை கொண்டவர்.
இளம் வீரர்கள்:
சன்ரைசர்ஸ் அணியில் தற்போது அப்துல் சமத், அபிஷேக் சர்மா, மயங்க் அகர்வால், அன்மோல்ப்ரீத் சிங், ஹாரி ப்ரூக், மயங்க் தாகர், பசல்ஹக் பரூக்கி, அகீல் ஹொசைன், மார்கோ ஜான்சென், கார்த்திக் தியாகி, கிளாசென், புவனேஷ்குமார், மயங்க் மார்கண்டே, மார்க்ரம், நடராஜன், நிதிஷ்குமார்ரெட்டி, பிலிப்ஸ், அடில் ரஷீத், சன்வீர்சிங், ராகுல் திரிபாதி, உம்ரான் மாலிக், விவ்ராந்த் ஷர்மா, சமர்த் வியாஸ், வாஷிங்டன் சுந்தர், உபேந்திர யாதவ் ஆகியோர் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க:Siraj No.1 ODI bowler: மிரட்டல் பவுலிங்கிற்கு கிடைத்த பரிசு.. நம்பர் ஒன் பவுலர் மகுடத்தை சூடிய முகமது சிராஜ்...!
மேலும் படிக்க: Suryakumar Yadav: சூர்யகுமார் யாதவ் தொட்டாலே ரெக்கார்ட்தான்.. சர்வதேச அளவில் மேலும் ஒரு சாதனை... அப்படி என்ன?