உலகமே வியக்கும் ஐபிஎல் தொடரின் 16வது சீசன் வருகிற ஏப்ரல் மாதம் கோலாகலமாக தொடங்குகிறது. இந்த தொடர் தொடங்குவதற்கு முன்னதாகவே, இதன் எதிர்பார்ப்பு எகிற தொடங்கிவிட்டது. இந்தநிலையில், நான்கு முறை ஐபிஎல் கோப்பை வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி, வரவிருக்கும் சீசனுக்காக தயாராகி வருகிறார். இதுகுறித்தான வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் எம்.எஸ்.தோனி தனது கால்களில் மஞ்சள் நிற பேடுகளை கட்டி வலைக்குள் பேட்டிங் செய்துள்ளார்.
கடந்த ஐபிஎல் சீசனில் 14 போட்டிகளில் விளையாடி 232 ரன்கள் எடுத்தார். 41 வயதான எம்.எஸ்.தோனி சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக இதுவரை 13 சீசன்கள் தலைமை தாங்கி விளையாடி வருகிறார். மூன்று ஆண்டுகளுக்கு பிறகு, சென்னை அணி தனது சொந்த மைதானமான எம்.ஏ. சிதம்பரம் ஸ்டேடியத்தில் விளையாட இருக்கிறது. இதையடுத்து, இந்தாண்டு எப்படியாவது கோப்பை வெல்லும் முயற்சியில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி களமிறங்கும்.
சர்வதேச போட்டிகளில் ஓய்வு:
2004 ஆண்டு வங்காள தேசத்துக்கு எதிராக ஒரு நாள் போட்டியில் அறிமுகமான எம்.எஸ். தோனி, கடைசியாக நடந்த 2019 ம் ஆண்டு ஒருநாள் உலகக் கோப்பை தொடருடன் தனது சர்வதேச பயணத்தை முடித்துக்கொண்டார். இந்த உலகக் கோப்பை தொடருக்கு பிறகு வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கு தோனி தேர்வானபோதும் தனது விருப்பத்தின்பேரில் தொடரில் இருந்து விலகினார்.
அதன்பிறகு யாரும் எதிர்பார்க்காத வேளை, 2020 ஆகஸ்ட் 15 ம் தேதி இரவு சர்வதேச கிரிக்கெட் தொடரில் இருந்து ஓய்வு பெறுவதாக மிகப்பெரிய குண்டை தூக்கி போட்டார். அட என்னப்பா இது, 3 ஐசிசி வென்று கொடுத்த கேப்டனுக்கு ஒரு பேர்வெல் கூட இல்லையே என்று ரசிகர்கள் ஏங்கினர். இது இல்லை என்றால் என்ன ஐபிஎல் தொடரில் தோனி ஓய்வு பெறும்போது அவருக்கு மிகப்பெரிய கெளரவம் கிடைக்க வேண்டும் என்று இன்றுவரை ரசிகர்கள் நினைத்து வருகின்றனர்.
ரசிகர்கள் மனதை நன்றாக அறிந்துகொண்ட தோனி, ஐபிஎல் போட்டிகளில் இருந்து நான் ஓய்வு பெறும்போது எனது கடைசி போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில்தான் இருக்கும் என்று தெரிவித்தார். கடந்த இரண்டு ஆண்டுகளாக ஐபிஎல் தொடரானது ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் மஹாராஷ்டிராவில் நடந்து முடிந்தது. அதனால்தான் தோனி இன்றுவரை ஓய்வுபெற முடியவில்லை என்றும் கூறப்பட்டது.
அதன் அடிப்படையில், சென்னையில் மட்டும் சிஎஸ்கே போட்டி நடைபெற்றால் இந்த ஆண்டு கோப்பையை வென்று கொடுத்து தோனி ஐபிஎல் தொடர்களில் இருந்து ஓய்வு பெறலாம் என்று தெரிகிறது. அப்படி இல்லையெனில் சிஎஸ்கே அணி தாங்கள் சென்னையில் விளையாடும் முதல் போட்டியுடன் எம்.எஸ். தோனி ஓய்வு பெறலாம் என்று கூறப்படுகிறது.
இந்தாண்டு தோனி எட்டவிருக்கும் மைல்கல்:
எம்.எஸ்.தோனி இதுவரை ஐபிஎல் தொடரில் 234 போட்டிகளில் விளையாடி 4,978 ரன்கள் எடுத்துள்ளார். இந்த ஆண்டு 22 ரன்கள் எடுத்து 5,000 ரன்களை கடந்தால் ஐபிஎல் தொடரில் 5 ஆயிரம் ரன்களை கடந்த 7வது வீரர் என்ற பெருமையை தோனி படைப்பார்.
ஐபிஎல் 2023க்கான சிஎஸ்கே அணி: எம்எஸ் தோனி (கேப்டன் மற்றும் விக்கெட் கீப்பர்), டெவோன் கான்வே, ருதுராஜ் கெய்க்வாட், அம்பதி ராயுடு, சுப்ரான்ஷு சேனாபதி, மொயீன் அலி, சிவம் துபே, ராஜ்வர்தன் ஹங்கர்கேகர், டுவைன் பிரிட்டோரியஸ், மிட்செல் சான்ட்னர், ரவீந்திர ஜடேஜா, துஷார் பதேஷ்பான், துஷார் பதாஷ்பான் , சிமர்ஜீத் சிங், தீபக் சாஹர், பிரசாந்த் சோலங்கி, மகேஷ் தீக்ஷனா, அஜிங்க்யா ரஹானே, பென் ஸ்டோக்ஸ், ஷேக் ரஷீத், நிஷாந்த் சிந்து, கைல் ஜேமிசன், அஜய் மண்டல், பகத் வர்மா.