முதலிடத்தில் சிராஜ்
இந்திய அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளரான முகமது சிராஜ், சர்வதேச கிரிக்கெட் சம்மேளனத்தின் தரவரிசைப் பட்டியலில் முதலிடம் பிடித்து அசத்தியுள்ளார். அண்மையில் நிறைவு பெற்ற இலங்கை மற்றும் நியூசிலாந்து உடனான, தலா 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர்களில் சிறப்பாக செயல்பட்டதன் மூலம், தரவரிசைப் பட்டியலில் சிராஜ் முதலிடம் பிடித்துள்ளார்.
அந்த பட்டியலில், 729 புள்ளிகளுடன் சிராஜ் முதலிடத்திலும், ஹேசல்வுட் 727 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்திலும், டிரெண்ட் போல்ட் 708 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்தையும் பெற்றுள்ளார். சர்வதேச கிரிக்கெட் சம்மேளனத்தின் பந்துவீச்சாளர்களுக்கான தரவரிசைப் பட்டியலில், 28 வயதான சிராஜ் முதலிடம் பிடிப்பது இதுவே முதல்முறையாகும்.
தொடர்ந்து அசத்தும் சிராஜ்
மற்றொரு நட்சத்திர வீரரான ஜஸ்ப்ரித் பும்ரா காயம் காரணமாக கடந்த சில மாதங்களாக இந்திய அணிக்காக விளையாடவில்லை. இந்த காலகட்டத்தில் அவருக்கான சரியான மாற்றாக சிராஜ் இந்திய அணிக்காக செயல்பட்டுள்ளார். தொடர்ந்து, பவர்-பிளே ஓவர்களிலேயே விக்கெட் எடுத்துக் கொடுத்து, இந்திய அணியின் பல வெற்றிகளுக்கு முக்கிய பங்கு வகித்துள்ளார்.
அண்மையில் நடந்து முடிந்த இலங்கை உடனான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில், சிறப்பாக பந்து வீசிய சிராஜ், 10.22 என்ற சராசரியுடன் 9 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதைதொடர்ந்து நடைபெற்ற நியூசிலாந்து உடனான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில், முதல் இரண்டு போட்டிகளில் மட்டும் விளையாடிய சிராஜ் 5 விக்கெட்டுகளை வீழ்த்தியது குறிப்பிடத்தக்கது.
ஐசிசியின் ஒருநாள் அணியில் சிராஜ்
கடந்த சில ஆண்டுகளாகவே தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் சிராஜ், அண்மையில் வெளியான 2022ஆம் ஆண்டுக்கான ஐசிசி ஒருநாள் போட்டிக்கான ஆண்கள் அணியில் இடம்பெற்ற இரண்டு இந்தியர்களில் ஒருவர் ஆவார். கடந்த ஆண்டில் இந்திய அணிக்காக 15 ஒருநாள் போட்டிகளில் விளையாடி சிராஜ், 24 விக்கெட்டுகளை வீழ்த்தினார். கடந்த ஆண்டில் 12 மெய்டன் ஓவர்களை வீசிய சிராஜ், அதிகபட்சமாக 3 ஒருநாள் போட்டிகளில் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இந்திய அணி முதலிடம்:
நியூசிலாந்து அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 3-0 என கைப்பற்றிய இந்திய அணி, ஐசிசியின் ஒருநாள் கிரிக்கெட் அணிக்கான தரவரிசையில் முதலிடத்தை பிடித்து அசத்தியுள்ளது. இந்நிலையில், பந்துவீச்சாளர்கள் பட்டியலிலும் இந்தியாவை சேர்ந்த சிராஜ் முதலிடத்தை பிடித்து இருப்பது ரசிகர்களை உற்சாகமடைய செய்துள்ளது. அதேநேரம், பேட்டிங் தரவரிசை பட்டியலில், சுப்மன் கில், விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா ஆகியோர் முறையே, 6,7 மற்றும் 9 ஆகிய இடங்களை பிடித்துள்ளனர்.