இந்திய கிரிக்கெட் அணி நியூசிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் போட்டித்தொடரை 3-0 என்ற கணக்கில் வென்று அசத்தியுள்ளது. இந்தூரில் நடைபெற்ற இன்றைய கடைசி போட்டியில் நியூசிலாந்து அணியை 90 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றுள்ளது. நியூசிலாந்து அணிக்கு எதிரான தொடரை ஒயிட்வாஷ் செய்த காரணத்தால் இந்திய அணி ஒருநாள் கிரிக்கெட் அணிக்கான தரவரிசையில் முதலிடத்தை பிடித்து அசத்தியுள்ளது.
முன்னதாக, இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் தொடரையும் இந்திய அணி 3-0 என்ற கணக்கில் வென்றிருந்தது.
இந்தியா - நியூசிலாந்து இடையிலான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி இந்தூரில் நேற்று நடைபெற்றது. முதலில் பேட்டிங்கில் களமிறங்கிய இந்திய அணி சிறப்பான தொடக்கம் அமைத்தது. தொடக்க வீரர்களாக களமிறங்கிய ரோகித் சர்மா மற்றும் சுப்மன் கில் ஆகியோர் அபார சதம் அடித்து முதல் விக்கெட்டுக்கு 200 ரன்கள் குவித்தனர். இந்திய அணியின் நட்சத்திர வீரரான விராட் கோலி 36 ரன்களில் வெளியேற, இஷான் கிஷன் 14 ரன்களில் நடையை கட்டினார்.
அதை தொடர்ந்து டி20யின் நம்பர் ஒன் பேட்ஸ்மேனாக உள்ள சூர்யகுமார் யாதவ் களமிறங்கி 9 பந்துகளில் 2 சிக்ஸர்களை பறக்கவிட்டு 14 ரன்களில் அவுட்டானார். இந்த இரண்டு சிக்ஸர்களை பறக்கவிட்டதன் மூலமும் சூர்யகுமார் யாதவ் புதிய சாதனையை படைத்துள்ளார்.
அதிவேக 100 சிக்ஸர்கள்:
நியூசிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் சூர்யகுமார் யாதவ், 2 சிக்ஸர்களை அடித்ததன் மூலம் சர்வதேச அளவில் அதிவேகமாக 100 சிக்ஸர்களை அடித்த இந்திய வீரர் என்ற பெருமையை படைத்துள்ளார்.
சர்வதேச கிரிக்கெட்டில் சூர்யகுமார் யாதவ் 65 போட்டிகளில் 61 இன்னிங்ஸ்களில் 100 சிக்ஸர்களை அடித்துள்ளார். இதன்மூலம், குறுகிய இன்னிங்சில் சாதனை படைத்த முதல் இந்திய வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். சூர்யாவுக்கு முன், இந்த சாதனை நட்சத்திர ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா பெயரில் இருந்தது. அவர் 101 இன்னிங்ஸில் இந்த சாதனையை படைத்திருந்தார்.
45 டி20 போட்டிகளில் விளையாடி 92 சிக்ஸர்களும், மீதமுள்ள 8 சிக்ஸர்கள் ஒருநாள் போட்டிகளிலும் அடித்துள்ளார்.அதேபோல், சர்வதேச கிரிக்கெட்டில் 2000 ரன்களையும் கடந்துள்ளார்.
இன்னிங்ஸ் அடிப்படையில் அதிவேகமாக 100 சிக்ஸர்களை அடித்த இந்திய வீரர்கள் பட்டியல்:
- 61 - சூர்யகுமார் யாதவ்
- 101 – ஹர்திக் பாண்டியா
- 129 – கே.எல்.ராகுல்
- 132 – எம்எஸ் தோனி
- 166 – சுரேஷ் ரெய்னா
- 166 – ரோஹித் சர்மா
ஸ்ரேயாஸ் ஐயருக்கு பதிலாக கிடைத்த வாய்ப்பு:
நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடருக்கு முன்பு ஷ்ரேயாஸ் ஐயர் காயம் அடைந்தார். காயத்துக்குப் பிறகு அவருக்குப் பதிலாக சூர்யகுமார் யாதவுக்கு வாய்ப்பு கிடைத்தது. இந்த தொடர் தற்போது ஒருநாள் உலகக் கோப்பைக்கான சோதனையாக பார்க்கப்படுகிறது. இந்த தொடரிலும் சூர்யகுமார் யாதவால் சிறப்பாக எதையும் செய்ய முடியவில்லை.
கடந்த 10 போட்டிகளில் 14, டிஎன்பி, 31, 4, 6, 34, 4,8,9 மற்றும் 13 ரன்கள் எடுத்துள்ளார். இதன் போது அவர் ஒரு அரை சதம் கூட அடிக்கவில்லை. இதுவரை, சூர்யகுமார் யாதவ் 20 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 2 அரைசதம் உள்பட 433 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார்.
ஷ்ரேயாஸ் ஐயர்:
2022 ம் ஆண்டு இந்திய அணிக்காக அதிக ரன்கள் எடுத்தவர்களில் ஒருவராக ஷ்ரேயாஸ் ஐயர் இருந்தார். இதன்மூலம், இந்திய ஒருநாள் அணியில் 4 வது இடத்தை இறுக்கமாக பிடித்துள்ளார். இந்திய அணிக்காக 55.7 சராசரியில் 6 அரை சதங்கள், ஒரு சதம் உள்பட 724 ரன்கள் எடுத்துள்ளார். இப்படிப்பட்ட சூழ்நிலையில், சூர்யகுமார் யாதவ் உலகக் கோப்பைக்கான அணியில் இடம்பெற விரும்பினால் டி20 யை போன்று ஒருநாள் போட்டிகளிலும் சிறப்பாக செயல்பட வேண்டும்