!ஐபிஎல் தொடரில் நாளை பிளே-ஆஃப் சுற்று தொடங்க உள்ள நிலையில், சென்னை அணிக்கு உள்ள வாய்ப்புகள் என்ன என்பதை இந்த தொகுப்பில் அறியலாம்.
முடிந்தது லீக் போட்டிகள்:
கடந்த மார்ச் மாதம் 31ம் தேதி தொடங்கிய ஐபிஎல் தொடரின் லீக் சுற்று போட்டிகள், கடந்த 50 நாட்களுக்கும் மேலாக பரபரப்பாக நடைபெற்றன. வழக்கமாக லீக் சுற்று முடிவுக்கு முன்பாகவே பிளே-ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறும் அணிகளின் விவரங்கள் தெரிந்துவிடும். ஆனால், இந்த முறை கடைசி லீக் போட்டி வரையில், பிளே-ஆஃப் சுற்றுக்கு செல்லும் அணிகள் எவை என்பது உறுதியாகவில்லை. இதனால் கடுமையான பரபரப்பு தொற்றிக்கொண்ட நிலையில், இறுதியாக குஜராத், சென்னை, லக்னோ மற்றும் மும்பை ஆகிய அணிகள் பிளே-ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றன.
குவாலிபையர்-1:
நாளை சென்னையில் உள்ள சேப்பாக்கம் மைதானத்தில் முதல் குவாலிபையர் போட்டி நடைபெற உள்ளது. இதில், புள்ளிப்பட்டியலில் முதல் இரண்டு இடங்களை பிடித்த குஜராத் டைட்டன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் ஆகிய அணிகள் மோத உள்ளன. இதில் வெற்றி பெறும் அணி நேரடியாக இறுதிப்போட்டிக்கு தகுதி பெறும். அதேநேரம், தோல்வி பெறும் இரண்டாவது குவாலிபையர் போட்டியை விளையாட வேண்டிய சூழலுக்கு தள்ளப்படும். போட்டி சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறுவது, சென்னை அணிக்கு பலமாக பார்க்கப்படுகிறது.
எலிமினேட்டர்:
நாளை மறுநாள் சேப்பாக்கம் மைதானத்தில் எலிமினேட்டர் போட்டி நடைபெற உள்ளது. புள்ளிப்பட்டியலில் மூன்று மற்றும் நான்காவது இடங்களை பிடித்த, லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் ஆகிய அணிகள் இந்த போட்டியில் மோத உள்ளன. இதில் வெற்றி பெறும் அணி, முதல் குவாலிபையர் போட்டியில் தோல்வியுற்ற அணியுடன், இரண்டாவது குவாலிபையர் போட்டியில் விளையாடும். அதேநேரம் தோல்வியுற்ற அணி, தொடரிலிருந்து முழுமையாக வெளியேறிவிடும்.
குவாலிபையர் - 2:
வரும் 26ம் தேதி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் இரண்டாவது குவாலிபையர் போட்டி நடைபெற உள்ளது. இதில் குவாலிபையர்-1 போட்டியில் தோல்வியுற்ற அணியும், எலிமினேட்டர் போட்டியில் வெற்றி பெற்ற அணியும் மோத உள்ளன. இதில் வெற்றி பெறும் அணி இறுதிப்போட்டிக்கு தகுதி பெறும்.
இறுதிப்போட்டி:
இறுதியாக நடப்பு தொடரின் இறுதிப்போட்டி வரும் 28ம் தேதியன்று அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற உள்ளது. இதில் குவாலிபையர் 1 மற்றும் குவாலிபையர் 2 ஆகிய போட்டிகளில், வெற்றி பெற்ற அணிகள் மோத உள்ளன.
பரிசு விவரங்கள்:
இறுதிப்போட்டியில் வெற்றி பெறும் அணிக்கு கோப்பையுடன் 20 கோடி ரூபாயும், தோல்வியுற்ற அணிக்கு 13 கோடி ரூபாயும் பரிசாக வழங்கப்படும். தொடரில் அதிக ரன்கள் குவித்த வீரருக்கு ஆரஞ்சு தொப்பியுடன் 15 லட்ச ரூபாயும், அதிக விக்கெட் எடுத்த வீரருக்கு ஊதா நிற தொப்பியுடன் 15 லட்ச ரூபாயும் வழங்கப்படும். இதேபோன்று, எமெர்ஜிங் பிளேயர் விருது வெல்பவருக்கு 20 லட்ச ரூபாயும், சூப்பர் ஸ்ட்ரைக்கருக்கு 15 லட்ச ரூபாயும் பரிசாக வழங்கப்படுகிறது.