உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்திய அணி, ஆஸ்திரேலிய அணியை வருகின்ற ஜூன் 7ம் தேதி எதிர்கொள்கிறது. இந்த போட்டி தொடங்குவதற்கு முன்பாக,  இந்திய கிரிக்கெட் அணியின் புதிய கிட் ஸ்பான்சரை பிசிசிஐ அறிவித்துள்ளது. இந்திய அணியின் புதிய கிட் ஸ்பான்சராக ஜெர்மன் ஸ்போர்ட்ஸ் பிராண்டான அடிடாஸின் பெயரை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பிசிசிஐ) செயலாளர் ஜெய் ஷா இன்று அறிவித்தார். 


கிட் ஸ்பான்சர்:


தற்போது, ​​இந்திய அணியின் கிட் ஸ்பான்சராக கில்லர் ஜீன்ஸ் உள்ளது. இந்த நிறுவனத்தின் ஒப்பந்தம் வருகின்ற மே 31 ம் தேதி முடிவடைகிறது. இதையடுத்து உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியிலிருந்து இந்திய அணியின் ஜெர்சியில் அடிடாஸ் லோகோ காட்சியளிக்க இருக்கிறது. ஓவல் மைதானத்தில் ஜூன் 7-ம் தேதி முதல் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான WTC இறுதிப் போட்டிக்கு பிறகு, இந்திய அணி இங்கிலாந்து அணியை எதிர்கொள்கிறது.


முன்னதாக, கில்லர் ஜீன்ஸ் குறைந்த காலத்திற்கு இந்திய அணியின் கிட் ஸ்பான்சராக ஒப்பந்தம் செய்யப்பட்டது, இந்த கில்லர் ஜீன்ஸ்க்கு முன், எம்பிஎல் இந்திய அணியின் கிட் ஸ்பான்சராக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. 






கிட் ஸ்பான்ஸராக அடிடாஸ் குறித்த அறிவிப்பை ஜெய் ஷா தனது ட்விட்டரில் அறிவித்தார். அதில், ”இந்திய அணியின் அடுத்த கிட் ஸ்பான்சராக அடிடாஸுடன் பிசிசிஐ இணைந்துள்ளது என்பதை அறிவிப்பதில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம். கிரிக்கெட் விளையாட்டை முன்னோக்கி கொண்டு செல்வதில் நாங்கள் உறுதியாக உள்ளோம். உலகின் மிகப்பெரிய விளையாட்டு ஆடை நிறுவனத்துடன் இணைந்திருப்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்.” என்று குறிப்பிட்டு இருந்தார். 


எம்பிஎல்:


இந்திய அணியின் கிட் ஸ்பான்சராக எம்பிஎல் நிறுவனம் 2023 ம் ஆண்டு இறுதி வரை பிசிசிஐயுடன் ஒப்பந்தம் செய்திருந்தது. ஆனால் ஒரு சில காரணங்களால் எம்பிஎல் இந்த ஒப்பந்தத்தை பாதியில் முடித்து கொண்டர்க்ய்.  இதற்குப் பிறகு, பிசிசிஐ கில்லர் ஜீன்ஸுடன் கிட் ஸ்பான்சராக 5 மாதங்கள் மட்டுமே இணைந்தது. அடிடாஸ் நிறுவனத்துடனான ஒப்பந்தத்தின் அளவு குறித்து பிசிசிஐ இதுவரை எந்தத் தகவலும் வெளியிடவில்லை. முன்னதாக, எம்பிஎல் ஒரு போட்டிக்கு இந்திய வாரியத்திற்கு ரூ.65 லட்சம் செலுத்தி வந்தது.