சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ரசிகர்கள் அந்த அணியின் நட்சத்திர வீரர் ரவீந்திர ஜடேஜாவிடம் சமூக வலைதளங்களில் மன்னிப்பு கோரி வருகின்றனர்.
மைதானத்தில் நீடித்த பதற்றம்:
”தங்களுக்கான வெற்றியை பெற்று தர தோனி இருக்கிறார் என கோடிக்கணக்கான சென்னை ரசிகர்கள் காத்திருந்த நிலையில், எதிர்பாராத விதமாக முதல் பந்திலேயே அவர் ஆட்டமிழந்தார். கடைசி 2 பந்துகளில் வெற்றிக்கு 10 ரன்கள் தேவைப்பட்ட போது, அடடா... சென்னை அணிக்கான ஐந்தாவது கோப்பை நடப்பாண்டும் கனவாக போய் விடுமோ என்ற பதற்றம் ரசிகர்களிடையே தொற்றிக்கொண்டது. அப்போது ஆபத்பாந்தவனாக தெரிந்த ஜடேஜா, ”நான் தான் இருக்கேன்ல” எனும் வகையில் ஒரு சிக்சர் மற்றும் பவுண்டரியை விளாசி வெற்றியை பெற்று தந்தார். இந்த வெற்றியை கொண்டாடும் போதே, பல சென்னை ரசிகர்களின் மனதில் ஒரு குற்ற உணர்ச்சியும் ஓடிக்கொண்டே தான் இருந்தது...”
சென்னை ரசிகர்கள்:
நடப்பு ஐபிஎல் தொடருடன் சென்னை அணி கேப்டன் தோனி ஓய்வு பெறுவார் என பல்வேறு தகவல்கள் தெரிவித்தன. இதன் காரணமாக சென்னை அணி விளையாடும் போட்டிகளுக்கு, வழக்கமாக கூடுவதை காட்டிலும் அதிகப்படியான கூட்டம் குவிந்தது. சென்னையில் மட்டுமின்றி சிஎஸ்கே போட்டி நடைபெற்ற அனைத்து மைதானங்களிலும், மஞ்சள் படை ஆக்கிரமித்து இருந்தது. தோனி களத்தில் நுழையும்போது அவர்கள் எழுப்பிய ”தோனி..தோனி” முழக்கங்கள் விண்ணை முட்டியது.
ஜடேஜாவிற்கு செய்த துரோகம்:
அதேநேரம், நடப்பு தொடரில் பெரும்பாலான போட்டியில் தோனிக்கு முன்னதாக ஜடேஜா தான் பேட்டிங்கில் களமிறங்கினார். அப்போது, ”நாங்கள் தோனியின் பேட்டிங்கை தான் பார்க்க வந்தோம் தயவு செய்து சீக்கிரம் அவுட்டாகி வெளியேறுங்கள் என சென்னை அணி ரசிகர்கள் முழக்கங்களை எழுப்பியதோடு, பதாகைகளையும் கையில் ஏந்தி நின்றனர். அடுத்தடுத்து இது மாதிரியான சம்பவங்கள் நடக்க, ஜடேஜா இது குறித்து வெளிப்படையாக பேசி இருந்தார். ஆனாலும், அடங்காத சென்னை ரசிகர்கள் சொந்த அணியின் வீரரான ஜடேஜாவையே தொடர்ந்து விமர்சித்து வந்தனர்.
ஜடேஜா போட்ட டிவீட்:
இதையடுத்து ஒரு லீக் போட்டியில் சிறப்பாக செயல்பட்டதற்காக, அப்ஸ்டாக் அதிக விலைமதிப்புமிக்க வீரர் என்ற விருது ஜடேஜாவிற்கு வழங்கப்பட்டது. இதுகுறித்து டிவிட்டரில் பதிவு ஒன்றை வெளியிட்ட ஜடேஜா “அதிக விலைமதிப்புமிக்க வீரர் என்ற விருதை வாங்கிய புகைப்படத்துடன் சேர்த்து, அப்ஸ்டாக்கிற்கு தெரிகிறது ஆனால் சில ரசிகர்களுக்கு தெரியவில்லை” என குறிப்பிட்டு இருந்தார். மற்றொரு பதிவில், நீங்கள் செய்த கர்மாவிற்கான பலன்கள் உங்களை வந்து சேரும் என குறிப்பிட்டு இருந்தார். ஜடேஜாவிற்கு ஆதரவாக கருத்து தெரிவித்து இருந்த அவரது மனைவி ரிவாபா, உங்கள் வெற்றி உரக்கமாக பேசட்டும் என வலியுறுத்தி இருந்தார்.
பதிலடி தந்த ஜடேஜா:
இந்த நிலையில் தான், குஜராத் அணிக்கு எதிரான இறுதிப்போட்டியில், அட்டகாசமாக விளையாடி சென்னை அணிக்கான 5வது கோப்பையை பெற்று தந்துள்ளார். இதையடுத்து, அன்று அவரை விமர்சித்த அதே ரசிகர்கள் தான், இன்று தலைமேல் தூக்கி கொண்டாடி வருகின்றனர். அதோடு, ”அண்ணே அன்னைக்கு தெரியாமா உங்கள குத்தம் சொல்லிட்டோம்னே, மன்னிச்சிக்கோங்க எனு மன்னிப்பு கேட்கும் பல மீம்ஸ்களையும், ஹார்ட்டின்களையும் பறக்க விட்டு வருகின்றனர்.