நடப்பாண்டு ஐ.பி.எல். தொடரில் முன்பு எப்போதும் இல்லாத அளவிலான, பல்வேறு புதிய சாதனைகள் படைக்கப்பட்டு உள்ளன.
ஐ.பி.எல். தொடர்:
கடந்த 2008ம் ஆண்டு முதல் நடைபெற்று வரும் ஐ.பி.எல். தொடர் என்றாலே, அனைவரது நினைவுக்கும் முதலில் வருவது அதிரடி பேட்டிங் தான். ஒவ்வொரு சீசனிலும் ஏதாவது ஒரு தருணம் என்பது மிகவும் முக்கியமானதாக அமையும். அது ஐபிஎல் வரலாற்றிலேயே மிகவும் முக்கியமானதாக மாறிவிடும். ஆனால், நடப்பாண்டு ஐபிஎல் தொடர் என்பது. கடந்த 15 சீசன்களில் நடந்த பல்வேறு சாதனைகளை முறியடித்து, அடுத்து வரும் சீசன்களுக்கு சவால் விடுக்கும் வகையில் அமைந்துள்ளது. இனி மீண்டும் இதுபோன்ற தருணங்கள் ஐபிஎல் தொடரில் நிகழுமா? என்பதும் கேள்விக்குறிதான். அந்த வகையில் ரசிகர்களின் மனதிலும், ஐபிஎல் வரலாற்றிலும் எழுதப்பட்டுள்ள தருணங்களை இங்கு காணலாம்.
01. அதிக செஞ்சூரியன்ஸ்:
ஐபிஎல் வரலாற்றில் முன்பு எப்போதும் இல்லாத அளவிற்கு நடப்பு தொடரில் 9 வீரர்கள் சதமடித்துள்ளனர். அதன்படி, மொத்தமாக 12 சதங்கள் அடிக்கப்பட்டன. அதில், சுப்மன் கில் 3 சதங்களும், கோலி 2 சதங்களும் விளாசினர்.
02. ரிங்குவின் 5 சிக்சர்கள்:
குஜராத் அணிக்கு எதிரான ஒரு லீக் போட்டியில் கொல்கத்தா வீரர் ரிங்கு சிங், கடைசி ஓவரில் அடுத்தடுத்து 5 சிக்சர்களை விளாசி வெற்றி பெற்று தந்தார். இதன் மூலம், ஐபிஎல் வரலாற்றிலேயே சேஸிங்கில் கடைசி ஓவரில் அதிக ரன்கள் சேர்த்த வீரர் என்ற பெருமையை பெற்றார்.
03. பிளே-ஆஃப்பில் அசத்தல்:
ஐபிஎல் தொடரில் பிளே-ஆஃப் போட்டியில் 5 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் வீரர் என்ற பெருமையை , மும்பையை சேர்ந்த மத்வால் பெற்றா. லக்னோ அணிக்கு எதிராக அவர் 5 ரன்களை மட்டும் விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகளை எடுத்தார். அவரை தொடர்ந்து, மும்பை அணிக்கு எதிரான போட்டியில் குஜராத் வீரர் மோஹித் சர்மாவும் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
04. கே.எல். ராகுல்:
ஐபிஎல் வரலாற்றில் அதிவேகமாக 4000 ரன்களை கடந்த வீரர் என்ற சாதனையை, நடப்பு தொடரில் லக்னோ அணியின் கேப்டனான கே.எல். ராகுல் படைத்தார். வெறும் 105 போட்டிகளில் இந்த மைல்கல்லை அவர் எட்டியுள்ளார்.
05. சுப்மன் கில் ருத்ரதாண்டவம்:
நடப்பு தொடரில் ஆரஞ்சு தொப்பியை கைப்பற்றிய குஜராத் வீரர் சுப்மன் கில் மொத்தமாக 890 ரன்களை குவித்தார். இதன் மூலம் ஒரு ஐபிஎல் தொடரில் 800 ரன்களை கடந்த இரண்டாவது இந்திய வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார். கோலி இந்த பட்டியலில் முதலிடத்தில் உள்ளார்.
06. 60 அரைசதங்கள்:
ஐபிஎல் தொடரில் 60 அரைசதங்களை பூர்த்தி செய்த முதல் வீரர் என்ற பெருமையை டெல்லி அணி கேப்டன் வார்னர் படைத்தார். இந்த பட்டியலில் அவருக்கு அடுத்தபடியாக கோலி 57 அரைசதங்களையும், தவான் 52 அரைசதங்களையும் விளாசியுள்ளார்.
07. பவர்-பிளேயில் அதிக விக்கெட்கள்:
ஐபிஎல் வரலாற்றில் முன்பு எப்போதும் இல்லாத அளவிற்கு, நடப்பாண்டு தொடரில் பவர்பிளேயில் மட்டும் குஜராத் வீரர் ஷமி 17 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். முன்னதாக மும்பை அணிக்காக விளையாடிய போல்ட் மற்றும் ஜான்சன் ஆகியோர் தலா 16 விக்கெட்டுகளை வீழ்த்தியது தான் சாதனையாக இருந்தது.
08. அதிக 50+ பார்ட்னர்ஷிப்:
ஐபிஎல் வரலாற்றில் ஒரு சீசனில் அதிகமுறை 50+ ரன்களை குவித்த ஜோடி என்ற சாதனையை, பெங்களூருவின் கோலி மற்றும் டூப்ளெசிஸ் ஜோடி பெற்றுள்ளது. அதன்படி, 8 முறை இந்த கூட்டணி 50+ ரன்களை கடந்துள்ளது.
09. அதிவேகமாக 100 விக்கெட்கள்:
ஐபிஎல் வரலாற்றில் அதிவேகமாக 100 விக்கெட்களை வீழ்த்திய வீரர்களின் பட்டியலில், ககிசோ ரபாடா முதலிடம் பிடித்துள்ளார். வெறும் 64 போட்டிகளில் அவர் இந்த சாதனையை எட்டியுள்ளார்.
10. அதிகமுறை 200+ ரன்கள்:
ஐபிஎல் தொடரின் நடப்பு சீசனில் மட்டும் 37 முறை 200-க்கும் அதிகமான ரன்கள் குவிக்கப்பட்டுள்ளன. இது முன்பு எப்போதும் இல்லாத அளவிலான எண்ணிக்கை ஆகும்.
11. குஜராத்தின் வித்தியாசமான சாதனை:
ஐபிஎல் வரலாற்றில் குஜராத் அணி பிரத்யேகமான புதிய சாதனையை பிடித்துள்ளது. அதன்படி, அதிக விக்கெட் எடுத்த வீரர்களின் பட்டியலில் முதல் மூன்று இடங்களையுமே அந்த அணியை சேர்ந்த வீரர்கள் தான் இடம்பெற்றுள்ளனர். அதில் ஷமி 28 விக்கெட்டுகளையும், மோஹித் சர்மா மற்றும் ரஷீத் கான் ஆகியோர் தலா 27 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
12. அதிவேக அரைசதம்:
ராஜஸ்தான் வீரர் ஜெய்ஷ்வால் 13 பந்துகளில் அரைசதம் கடந்து, ஐபிஎல் வரலாற்றில் குறைந்த பந்துகளில் அரைசதம் கடந்த வீரர் என்ற பெருமையை பெற்றார்.
13. க்ளென் பிலிப்ஸ்:
ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் ஐதராபாத் வீரர் கிளென் பிலிப்ஸ் 7 பந்துகளில் 25 ரன்களை குவித்து வெற்றிக்கு வித்திட்டு ஆட்டநாயகன் விருதை வென்றார். இதன் மூலம், குறைந்த பந்துகளை மட்டுமே விளையாடி ஆட்டநாயகன் விருது வென்ற வீரர் என்ற சாதனையை படைத்தார்.
14. நோ பால்கள்:
ஐபிஎல் தொடரில் முன்பு எப்போதும் இல்லாத அளவிற்கு நடப்பு தொடரில் மட்டும் 100-க்கும் அதிகமான நோ பால்களை பந்துவீச்சாளர்கள் வீசியுள்ளனர்.