IPL 2025 PBKS Vs DC: ஐபிஎல் தொடரின் இன்றைய லீக் போட்டியில் பஞ்சாப் மற்றும் டெல்லி அணிகள் மோத உள்ளன.

அடிவாங்கிய ஆர்சிபி:

நடப்பாண்டு ஐபிஎல் தொடருக்கான பிளே-ஆஃப் சுற்றுக்கு நான்கு அணிகள் தகுதி பெற்றுவிட்டன. ஆனாலும், லீக் சுற்றின் முடிவில் புள்ளிப்பட்டியலில் முதல் இரண்டு இடங்களை பிடிக்கப் போகும் அணிகள் எவை என்பது தற்போது வரை உறுதியாகவில்லை. நேரடியாக இறுதிப்போட்டிக்கு நுழைய இரண்டு வாய்ப்புகள் கிடைக்கும் என்பதால், முதல் இரண்டு இடங்களை பிடிக்க குஜராத், பெங்களூரு, பஞ்சாப் மற்றும் மும்பை இடையே கடும் போட்டி நிலவுகிறது. இந்நிலையில் தான், நேற்றைய லீக் போட்டியில் பிளே-ஆஃப் சுற்றுக்கு முன்னேறாத ஐதராபாத் அணியை பெங்களூரு எதிர்கொண்டது. முதலில் பேட்டிங் செய்த ஐதராபாத் அணி 231 ரன்களை குவித்தது. இலக்கை நோக்கி களமிறங்கிய பெங்களூரு அணிக்கு நல்ல தொடக்கம் கிடைத்தாலும், பின்கள வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். இதனால், 189 ரன்களுக்கு ஆட்டமிழந்து 42 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியுற்றது. இதன் மூலம், புள்ளிப்பட்டியலில் முதல் இடத்திற்கு முன்னேறும் வாய்ப்பை பெங்களூரு அணி மீண்டும் இழந்தது.

ஐபிஎல் 2025 - புள்ளிப்பட்டியல்:

அணிகள் போட்டி வெற்றி தோல்வி புள்ளிகள் ரன்ரேட்
குஜராத் 13 9 4 18 0.602
பஞ்சாப் 13 8 4 17 0.389
பெங்களூரு 12 8 3 17 0.255
மும்பை 13 8 4 16 1.292
டெல்லி 13 6 6 13 -0.019
லக்னோ 13 6 7 12 -0.337
கொல்கத்தா 13 5 6 12 0.193
ஐதராபாத் 13 5 7 11 -0.737
ராஜஸ்தான் 14 4 10 8 -0.549
சென்னை 13 3 10 6 -1.030

4 அணிகளும் கடும் மோதல்:

குஜராத் மற்றும் பெங்களூரு அணிகளுக்கு முதல் இரண்டு இடங்களை பிடிப்பதற்கான வாய்ப்புகள் மிகவும் எளிதாக இருந்த நிலையில், அடுத்தடுத்த தோல்விகளால் அது சற்றே கடினமாகியுள்ளது. குறிப்பிட்ட இரண்டு அணிகளின் ரன் ரேட்டும் கணிசமாக சரிந்துள்ளது. இதனால், குஜராத் மற்றும் பெங்களூரு அணிகள் மீதமுள்ள கடைசி லீக் போட்டியில் கட்டாயம் வெல்ல வேண்டிய சூழல் உள்ளது. ஒரு வேளை அந்த போட்டியிலும் இரண்டு அணிகளும் தோல்வியுற்றால் முதல் இரண்டு இடங்கள் என்பது சாத்தியமற்றதாகலாம். தற்போதைய சூழலில் முதல் இரண்டு இடங்களில் உள்ள அணிகள் அடுத்தடுத்து தோல்வியை சந்தித்து இருப்பது, மூன்று மற்றும் நான்காவது இடங்களில் உள்ள பஞ்சாப் மற்றும் மும்பை அணிகளுக்கான வாய்ப்புகளை பிரகாசமாக்கியுள்ளன. இதனால், முதல் இரண்டு இடங்களை பிடிக்க நான்கு அணிகளுக்கும் வாய்ப்புகள் நீடிக்கின்றன.

டெல்லியை தாக்குபிடிக்குமா பஞ்சாப்?

ஐபிஎல் தொடரின் இன்றைய லீக் போட்டி ஜெய்பூரில் உள்ள சவாய் மான்சிங் மைதானத்தில் நடைபெற உள்ளது. இதில் டெல்லி மற்றும் பஞ்சாப் அணிகள் மோதுகின்றன. இன்றைய போடிட்யில் வெற்றி பெற்றால் 19 புள்ளிகளுடன் பஞ்சாப் அணி புள்ளிப்பட்டியலில் முதல் இடத்திற்கு முன்னேறக்கூடும். மறுமுனையில் டெல்லி அணி ஏற்கனவே பிளே-ஆஃப் வாய்ப்பை இழந்துள்ளது. அதேநேரம், கடைசி இரண்டு லீக் போட்டிகளிலும், பிளே-ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்ற இரண்டு அணிகளை தொடரிலிருந்து வெளியேறிய அணிகள் வீழ்த்தியுள்ளன. அதேபாணியில் பஞ்சாப் அணிக்கு டெல்லி அதிர்ச்சி அளிக்குமா? என்பதை பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும். பஞ்சாப் அணியை பொறுத்தவரையில் இது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த போட்டியாக கருதப்படுகிறது.