ஐ.பி.எல் 2024:



இந்திய கிரிக்கெட் திருவிழாவான ஐபிஎல் தொடரின் 17வது சீசன் இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. ஏற்கனவே 68 லீக் போட்டிகள் நடந்து முடிந்துள்ள நிலையில், கொல்கத்தா நைட்ரைடர்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு ஆகிய அணிகள் பிளே-ஆஃப் சுற்றுக்கு முன்னேறியுள்ளன.


இந்நிலையில் லீக் போட்டிகள் நடைபெறும் கடைசி நாளான, இன்று இரண்டு லீக் போட்டிகள் நடைபெற உள்ளன. அதன்படி, முதல் லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதின. இந்த போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியை ஹைதராபாத் அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இதன் மூலம் இரண்டாவது இடத்திற்கு முன்னேறியுள்ளது அந்த அணி. 


அதிக சிக்ஸர்கள் - அபிஷேக் ஷர்மா சாதனை:


இந்த சீசனில் பல்வேறு சாதனைகள் நிகழ்த்தப்பட்ட சூழலில் பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியின் மூலம் ஒரு புதிய சாதனையை படைத்துள்ளார் அபிஷேக் சர்மா. முன்னதாக கடந்த 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற சீசனில் தான் விராட் கோலி ஒரு சீசனில் அதிக சிக்ஸர் அடித்த இந்திய வீரர் என்ற சாதனையை செய்திருந்தார். அந்த சீசனில் மட்டும் மொத்தம் 38 சிக்ஸர்களை விளாசி இருந்தார் விராட் கோலி.


இந்நிலையில் தான் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான இன்றைய போட்டியில் இந்த சாதனையை முறியடித்து இருக்கிறார் அபிஷேக் ஷர்மா. சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் விளையாடி வரும் இவர் இந்த சீசனில் மட்டும் 41 சிக்ஸர்களை பறக்கவிட்டுள்ளார்.






அந்தவகையில் இந்த சீசனில் 13 லீக் போட்டிகளில் விளையாடி உள்ளார். இதில் 467 ரன்களை குவித்திருக்கும் இவர் 3 அரைசதங்கள் விளாசி இருக்கிறார். அதேபோல் 35 பவுண்டரிகளையும் விளாசி உள்ளார் அபிஷேக் ஷர்மா. அதிகபட்சமாக ஆட்டமிழக்காமல் 75* ரன்கள் குவித்துள்ளார். 


ஐபிஎல் சீசனில் அதிக சிக்ஸர்கள் அடித்த இந்திய வீரர்கள்:


41 - அபிஷேக் சர்மா (SRH, 2024)

 

38 - விராட் கோலி (RCB, 2016)

 

37 - ரிஷப் பந்த் (DC, 2018)

 

37 - விராட் கோலி (RCB, 2024)

 

35 - சிவம் துபே (CSK, 2023)