ஐ.பி.எல் சீசன் 17:


கடந்த மார்ச் 22 ஆம் தேதி தொடங்கிய ஐ.பி.எல் சீசன் 17 இறுதிக்கட்டத்தை எட்டிவிட்டது. இதில், மும்பை இந்தியன்ஸ், குஜராத் டைட்டன்ஸ், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ், டெல்லி கேபிடல்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் ப்ளே ஆப் சுற்றிற்கு தகுதிபெறாமல் வெளியேறிவிட்டன. கொல்கத்தா நைட்ரைடர்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் ப்ளே ஆப் சுற்றிற்கு தகுதி பெற்றுள்ளன.


முன்னதாக மும்பை இந்தியன்ஸ் அணி தான் இந்த சீசனில் முதல் அணியாக எலிமினேட் ஆனது. கடந்த 5 முறை கோப்பையை வென்ற ஒரு அணி முதல் அணியாக எலிமினேட் ஆனது ரசிகர்களை வருத்தம் அடையைச் செய்தது. மொத்தம் 14 லீக் போட்டிகள் ஆடிய மும்பை இந்தியன்ஸ் அணி 4 போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்றது. ஆனால் 10 போட்டிகளில் தோல்வி அடைந்தது.


கேப்டன்சி மாற்றம்:


இந்த தோல்விக்கு முக்கிய காரணமாக பார்க்கப்பட்டது கேப்டன்ஷி மாற்றம் தான். 5 முறை மும்பை இந்தியன்ஸ் அணிக்கு கோப்பையை வென்று கொடுத்த ரோஹித் ஷர்மாவை நீக்கி விட்டு ஹர்திக் பாண்டியாவை கேப்டனாக நியமித்தது மும்பை இந்தியன்ஸ். இது ஆரம்பம் முதல் அந்த அணி மீது கடும் அதிருப்தியை ரசிகர்களிடம் ஏற்படுத்தியது. 


இந்நிலையில் தான் ரோஹித் ஷர்மா இந்த சீசனோடு மும்பை அணிக்கும் தனக்கும் உள்ள பந்தத்தை பிரித்துக் கொள்ள போகிறார் என்று கூறப்படுகிறது. வேறு ஒரு அணியில் ரோகித் சர்மா இணைய உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி வருகின்றன.


மும்பை அணியில் இருந்து விலகுகிறார ரோஹித் சர்மா?


சமூகவலைதளங்களிலும் இது தொடர்பான விவாதங்கள் தான் நடைபெற்று வருகிறது. இச்சூழலில் இந்த விவாதங்களை மேலும் வீரியம் ஆக்குவதை போல் பதிவு ஒன்றை தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் ரோகித் சர்மா.






அதாவது மும்பை இந்தியன்ஸ் அணி வீரர்களுடன் குழுவாக எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்று, மும்பை ரசிகர்களின் ஆதரவு தொடர்பான புகைப்படம் மற்றும் தான் பேட்டில் கையெழுத்திடுவது போன்ற புகைப்படத்தை பதிவு செய்திருக்கிறார். இது பார்த்த ரசிகர்கள் மும்பை இந்தியன்ஸ் அணியில் இனிமேல் ரோகித் சர்மா விளையாட மாட்டார் என்பதை இப்போதே சூசகமாக தெரிவித்துவிட்டார் என்று கூறி வருகின்றனர் ரசிகர்கள்.