ஐபிஎல் வரலாற்றில் முதல் முறையாக தொடர் நடைபெற்று கொண்டிருக்கும் போது ஐபிஎல் போட்டிகள் நிறுத்தம் செய்யப்பட்டது. கொரோனா பரவால் ஒத்திவைக்கப்பட்ட ஐபிஎல் தொடர், இப்போது மீண்டும் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு மாற்றப்பட்டு மீதமுள்ள போட்டிகள் நடைபெற உள்ளது. செப்டம்பர் 19-ம் தேதி மீண்டும் தொடங்கும் ஐபிஎல் தொடர், அக்டோபர் 15-ம் தேதி வரை நடைபெற உள்ளது.
இந்நிலையில், 2022-ம் ஆண்டு நடைபெற இருக்கும் ஐபிஎல் தொடரில் சில மாற்றங்கள் செய்ய இருப்பதாக முன்னரே அறிவிப்புகள் வெளியானது. அதன் அடிப்படையில், 2014-ம் ஆண்டு முதல் 8 அணிகள் பங்கேற்று வரும் நிலையில், அடுத்த ஐபிஎல் தொடரில் 10 அணிகள் பங்கேற்க இருப்பதாக தகவல் வெளியானது. அதனைத் தொடர்ந்து, இரண்டு புதிய அணிகளைத் தேர்ந்தெடுப்பதற்கான ஏலம் வரும் அக்டோபர் 17-ம் தேதி நடைபெற உள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது. ஏலத்தில் பங்கெடுக்க விருப்பமுள்ள அணிகள் பதிவு செய்ய கடைசி நாள் செப்டம்பர் 21 எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிதாக சேர்க்கப்படும் இரு அணிகளுக்கான போட்டியில், அகமதாபாத், பூனே, லக்னோ, கான்பூர், கெளஹாத்தி, இந்தோர், கொச்சி, ராய்பூர், திருவணந்தபுரம் ஆகிய நகரங்களைச் சேர்ந்த அணிகள் போட்டியிட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், அகமதாபாத் மற்றும் பூனே அணிகள் சேர்க்கப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக தெரிகிறது.
2021 ஐபிஎல் தொடரே இன்னும் முழுமை அடையாத நிலையில், வரும் ஞாயிற்றுக்கிழமை தொடங்கும் இரண்டாவது பாதியின் முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றன.
செப்டம்பர் 19-ம் தேதி மீண்டும் தொடங்கும் ஐபிஎல் தொடர், அக்டோபர் 15-ம் தேதி வரை நடக்க உள்ளது. நீண்ட இடைவெளிக்கு பிறகு தொடங்கும் இரண்டாம் பாதியில் சிறப்பாக விளையாடும் அணிகள் புள்ளிப்பட்டியலில் முன்னேறுவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதால், டாப் நான்கில் இடம் பிடிக்கப்போகும் அணிகள் யாவை என்பதில் எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது.
Also Read: IPL 2021: ஐபிஎல் 2021 முதல் பாதி ரீகேப்... டாப் நான்கில் இடம் பிடிக்கப்போவது எந்த அணிகள்?