Tata IPL 2025 Playoff: நடப்பாண்டு ஐபிஎல் தொடரின் எலிமினேட்டரில் குஜராத் மற்றும் மும்பை அணிகள் மோத உள்ளன.
ஐபிஎல் 2025: பிளே-ஆஃப் சுற்று
விறுவிறுப்பிற்கும், பரபரப்பிற்கும் சற்றும் பஞ்சமில்லாமல் நடப்பாண்டு ஐபிஎல் தொடரின் லீக் சுற்று முடிவடைந்துள்ளது. போட்டியில் பங்கேற்ற 6 அணிகள் வெளியேறி, 4 அணிகள் அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றாலும், புள்ளிப்பட்டியலில் முதல் இரண்டு இடங்களை பிடிப்பது யார் என்பது கடைசி லீக் போட்டி வரையில் இழுபறி நீடித்தது. இந்நிலையில், நேற்றைய லீக் போட்டியின் முடிவின் மூலம், பெங்களூரு அணி புள்ளிப்பட்டியலில் இரண்டவது இடத்தை உறுதி செய்துள்ளது. அதன்படி, பஞ்சாப், பெங்களூரு, குஜராத் மற்றும் மும்பை அணிகள் முறையே முதல் நான்கு இடங்களை பிடித்துள்ளன.
குவாலிஃபையர்-1: PBKS Vs RCB
புள்ளிப்பட்டியலில் முதல் இரண்டு இடங்களை பிடித்த பஞ்சாப் மற்றும் பெங்களூரு அணிகள், இறுதிப்போட்டிக்கான முதல் குவாலிஃபையரில் மோத உள்ளன. முல்லன்பூரில் உள்ள மைதானத்தில் நாளை (மே.29) இரவு 7.30 மணிக்கு இந்த போட்டி தொடங்க உள்ளது. இதில் வெற்றி பெறும் அணி நேரடியாக இறுதிப்போட்டிக்கு தகுதி பெறும். நடப்பாண்டில் இரு அணிகளும் மோதிய லீக் சுற்று போட்டிகளில் பெங்களூரு மற்றும் பஞ்சாப் அணிகள் முறையே தலா ஒரு போட்டியில் வெற்றி பெற்றுள்ளன. ஒட்டுமொத்தமாக 35 முறை நேருக்கு நேர் மோதியதில் பஞ்சாப் 18 முறையும், பெங்களூரு 17 முறையும் வெற்றி பெற்றுள்ளன. இந்த இரு அணிகளும் இதுவரை ஒருமுறை கூட கோப்பையையே வென்றதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
எலிமினேட்டர் - GT Vs MI
புள்ளிப்பட்டியலில் மூன்று மற்றும் நான்காவது இடங்களை பிடித்த குஜராத் மற்றும் மும்பை அணிகள், எலிமினேட்டர் போட்டியில் மோத உள்ளன. முல்லன்பூர் மைதானத்தில் வரும் வெள்ளியன்று (மே.30) இரவு 7.30 மணிக்கு இந்த போட்டி தொடங்குகிறது. இதில் வெற்றி பெறும் அணி இரண்டாவது குவாலிஃபையர் போட்டிக்கு தகுதி பெறும். தோல்வியுறும் அணி நடப்பு தொடரிலிருந்து வெளியேறும். நடப்பு தொடரில் இரு அணிகளும் மோதிய இரண்டு லீக் போட்டிகளிலும் குஜராத் அணியே வெற்றி பெற்றுள்ளது. ஒட்டுமொத்தமாக மோதிய 7 போட்டிகளில் குஜராத் அணி ஐந்தில் வென்று ஆதிக்கம் செலுத்தி வருகிறது. மும்பை அணி ஐந்து முறையும், குஜராத் ஒருமுறையும் கோப்பையை வென்று இருப்பது குறிப்பிடத்தக்கது.
குவாலிஃபையர்-2:
எலிமினேட்டர் போட்டியை தொடர்ந்து வரும் ஜுன். 1ம் தேதி இரண்டாவது குவாலிஃபையர் போட்டி நடைபெறும். இதில் முதல் குவாலிஃபையரில் தோற்ற அணியும், எலிமினேட்டரில் வெற்றி பெற்ற அணியும் மோதும். இந்த போட்டி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் இரவு 7.30 மணிக்கு தொடங்கும். இதில் வெற்றி பெறும் அணி இறுதிப்போட்டிக்கு தகுதி பெறும்.
இறுதிப்போட்டி:
தொடர்ந்து, வரும் ஜுன்.3ம் தேதி இரவு 7.30 மணிக்கு, அகமதாபாத் மைதானத்தில் இரவு 7.30 மணிக்கு இறுதிப்போட்டி தொடங்கும். இதில் முதல் மற்றும் இரண்டாவது குவாலிஃபையர் போட்டியில் வெற்றி பெற்ற அணிகள், கோப்பையை கைப்பற்ற மோதும்.
ஜிதேஷ் ருத்ரதாண்டவம்:
முன்னதாக நேற்று நடைபெற்ற கடைசி லீக் போட்டியில், முதலில் பேட்டிங் செய்த லக்னோ ரிஷப் பண்டின் அட்டகாசமான சதத்தால் 20 ஓவர்கள் முடிவில் 227 ரன்கள் குவித்தது. இலக்கை நோக்கி களமிறங்கிய பெங்களூரு அணிக்கு, விராட் கோலி அரைசதம் விளாசி நல்ல தொடக்கம் அமைத்து கொடுத்தார். அவரை தொடர்ந்து களமிறங்கிய ஜிதேஷ் சர்மா, லக்னோ பந்துவீச்சை நையப்புடைத்தார். 33 பந்துகளை எதிர்கொண்டு 6 சிக்சர்கள் மற்றும் 8 பவுண்டரிகள் உட்பட 85 ரன்களை குவித்தார். இதன் மூலம் பெங்களூரு அணி 8 பந்துகளை மீதம் வைத்து 230 ரன்களை குவித்து இமாலய வெற்றி பெற்றது. புள்ளிப்பட்டியலில் இரண்டாவது இடத்தை பிடித்து, முதல் குவாலிஃபையர் போட்டிக்கும் தகுதி பெற்றது.