நடப்பு ஐபிஎல் தொடரின் கடைசி லீக் போட்டியில் ஆர்சிபி - லக்னோ அணிகள் மோதின. லக்னோவில் உள்ள வாஜ்பாய் மைதானத்தில் நடந்து வரும் இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆர்சிபி கேப்டன் ஜிதேஷ் சர்மா பந்துவீச்சைத் தேர்வு செய்தார்.
மிரட்டிய பண்ட் - மார்ஷ்:
இதையடுத்து, ஆட்டத்தை மார்ஷ் - பிரிட்ஸ்கி தொடங்கினர். பிரிட்ஸ்கி 14 ரன்களுக்கு அவுட்டாக அடுத்து கேப்டன் ரிஷப்பண்ட் - மார்ஷ் ஜோடி சேர்ந்தனர். போட்டியின் முடிவு எந்த தாக்கத்தையும் அவர்களுக்கு ஏற்படுத்தப்போவதில்லை என்பதால் இருவரும் இயல்பானன ஆட்டத்தை வெளிப்படுத்தினர். தொடர் முழுவதும் சொதப்பி வந்த ரிஷப்பண்ட் இன்றைய போட்டியில் பவுண்டரிகளும், சிக்ஸரும் விளாசினார்.
தடுமாறிய பவுலிங்:
அவருக்கு ஒத்துழைப்பு தந்த மார்ஷ் பவுண்டரிகளும், சிக்ஸரும் விளாசினர். இந்த ஜோடியைப் பிரிக்க நுவன் துஷாரா, குருணல் பாண்ட்யா, யஷ் தயாள், புவனேஷ்வர், சுயாஷ் சர்மா, ஷெப்பர்ட் ஆகியோருக்கு மாறி, மாறி ஜிதேஷ் சர்மா பந்துவீச்சை வழங்கினார். இதில் துஷாராவும், குருணல் பாண்ட்யா மட்டுமே பவுலிங்கில் கட்டுக்கோப்பாக வீசினர்.
இந்த பார்ட்னர்ஷிப் 100 ரன்களை கடந்தது. அபாரமாக ஆடிய இருவரும் அரைசதம் கடந்தனர். இந்த ஜோடியை புவனேஷ்வர் பிரித்தார். சிறப்பாக ஆடிய மார்ஷ் அவரது பந்தில் விக்கெட் கீப்பர் ஜிதேஷ் சர்மாவிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார்.37 பந்துகளில் 4 பவுண்டரி 5 சிக்ஸருடன் 67 ரன்கள் எடுத்து அவுட்டானார்.
சதம் விளாசிய ரிஷப்பண்ட்:
அதன்பின்னரும், ரிஷப்பண்ட் தனது அதிரடியைத் தொடர்ந்தார். அபாரமாக ஆடிய ரிஷப்பண்ட் இன்று சதம் விளாசினார். அவர் 56 பந்துகளில் சதம் விளாசி அசத்தினார். கடைசியில் 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 227 ரன்களை லக்னோ அணி எடுத்தது. இதையடுத்து, 228 ரன்கள் ஆர்சிபிக்கு இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ரிஷப்பண்ட் 61 பந்துகளில் 11 பவுண்டரி 8 சிக்ஸருடன் 118 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். ஆர்சிபி அணியில் துஷாரா 4 ஓவர்களில் 1 விக்கெட் வீழ்த்தி 26 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்தார். புவனேஷ்வர் 4 ஓவர்களில் 46 ரன்களும், ஷெப்பர்ட் 4 ஓவர்களில் 51 ரன்களும் விட்டுக்கொடுத்தனர்.