உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி தோல்வி அடைந்தது கோப்பை வெல்லும் வாய்ப்பை இழந்தது. இந்திய அணியின் இந்தத் தோல்வியை பலரும் விமர்சனம் செய்து வருகின்றனர். பலர் விராட் கோலியின் கேப்டன்ஷிப் சரியில்லை என்றும் பலர் இந்திய அணியின் பேட்டிங் தொடர்பாக கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இந்தச் சூழலில் இப்போட்டியில் நியூசிலாந்து டெயில் எண்டர்களுக்கு எதிராக இந்தியாவின் பந்துவீச்சு முக்கிய காரணமாக அமைந்தது. அதேபோல் இந்திய பந்துவீச்சாளர்களின் பேட்டிங்கும் இந்திய அணிக்கு பெரிய பின்னடைவை தந்தது. இது இந்தப் போட்டியில் மட்டும் நிகழ்ந்தது அல்ல கடந்த மூன்றரை ஆண்டுகாலமாக இது இந்திய அணிக்கு இது ஒரு பெரிய பிரச்னையாக உள்ளது.
WTC Finals: சாதகமான புள்ளி விபரம்… பாதகமான ஐசிசி கோப்பை… பதவி விலக வேண்டுமா கேப்டன் கோலி?
மற்ற அணியின் டெயில் எண்டர்கள் vs இந்திய பந்துவீச்சு:
2018ஆம் ஆண்டு முதல் இந்திய பந்துவீச்சிற்கு எதிராக எதிரணியின் டெயில் எண்டர்கள் சிறப்பான ரன்களை குவித்து வருகின்றனர். அதாவது எதிரணியின் 8-11 வரிசையில் களமிறங்கு வீரர்கள் இந்திய பந்துவீச்சிற்கு எதிராக சுமார் 2766 ரன்களை குவித்துள்ளனர். அத்துடன் சராசரியாக 15.19 என்ற விகிதமாக அமைந்துள்ளது. மேலும் இந்திய பந்துவீச்சிற்கு எதிராக அவர்களின் ரன் குவிக்கும் விகிதமும் 2.88 ரன்களாக உள்ளது.
இதுமட்டுமல்லாமல் இந்திய பந்துவீச்சை எதிர்கொண்ட பிற அணியின் டெயில் எண்டர்கள் 48 சிக்சர்கள் விளாசி உள்ளனர். வேறு எந்த கிரிக்கெட் அணியின் பந்துவீச்சிலும் டெயில் எண்டர்கள் 40 சிக்சர்களுக்கு மேல் அடித்தது இல்லை. அதேபோல் எதிரணியின் டெயில் எண்டர்களை அவுட் ஆக்க இந்திய அணி சுமார் 101 பந்துகளை எடுத்து கொள்கிறது. இது மிகவும் அதிகமான பந்துகளின் எண்ணிக்கையாகும். ஏனென்றால் வேறு எந்த அணியும் எதிரணியின் டெயில் எண்டர்களை ஆட்டமிழக்க செய்ய 100 பந்துகளுக்கு மேல் எடுத்து கொள்வது இல்லை. இப்பட்டியலில் இங்கிலாந்து அணி 92 பந்துகளுடன் இரண்டாம் இடத்தில் உள்ளது. இந்திய அணியின் பந்துவீச்சாளர் எதிரணியின் டெயில் எண்டர்களை விரைவாக ஆட்டமிழக்க செய்யவில்லை என்பது தரவுகளின் மூலம் தெளிவாக தெரிகிறது.
இந்திய டெயில் எண்டர்களின் பேட்டிங்:
இந்திய டெயில் எண்டர்களின் பேட்டிங்கும் மிகவும் மோசமாக அமைந்துள்ளது. கடந்த 2018ஆம் ஆண்டு முதல் தற்போது வரை இந்தியாவின் 8 முதல் 11 வரிசை வீரர்கள் பேட்டிங்கில் 33 போட்டிகளில் 1814 ரன்கள் சேர்த்துள்ளனர். இவர்களின் ரன் சராசரி 13.53 ஆக உள்ளது. இவற்றில் அஸ்வின் மட்டும் 8ஆவது வீரராக களமிறங்கி 516 ரன்கள் அடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்திய டெயில் எண்டர்கள் மிகவும் விரைவாக தொடர்ந்து அனைத்து டெஸ்ட் போட்டிகளிலும் ஆட்டமிழந்துள்ளனர்.
குறிப்பாக தற்போது முடிந்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியிலும் நியூசிலாந்து அணி கடைசி ஐந்து விக்கெட்டிற்கு 114 ரன்கள் சேர்த்தது. ஆனால் இந்திய அணி பேட்டிங்கின் போது கடைசி நான்கு விக்கெட்டிற்கு 28 ரன்கள் மட்டுமே அடித்தது. இந்த பிரச்னை மூன்றரை ஆண்டுகாலமாக தொடர்ந்து வருகிறது. 2018-ஆம் ஆண்டு இங்கிலாந்து டெஸ்ட் தொடர் முதல் இந்திய அணியின் டெயில் எண்டர் பேட்டிங் மற்றும் பவுலிங் பிரச்னை தொடர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க: 38 ஆண்டுகளுக்கு முன்பாக கிரிக்கெட் உலகை அசரவைத்த ‘கபில்ஸ் டெவில்ஸ்’ நாள் இன்று !